16 ஏப்ரல் 2022

புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை

யோவான் 19:38-42

• யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ அந்தளவிற்கு மனிதருக்கு நம்பிக்கை அவசியமாகின்றது. இந்த நம்பிக்கை புதிய வாழ்விற்கு எம்மை அழைக்கின்றது.

• முதலாம் உடன்படிக்கையில் தானியேல் நூல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியத்தை சார்ந்ததாகும். இங்கு, இதன் வரலாற்று பின்னணியை நாம் உற்றுநோக்கும்போது, கிரேக்க ஆட்சியாளனாகிய நான்காம் அந்தியோஸ் எப்பிபானஸ் பன்றி இறைச்சியை உண்ணுமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்தினான். அதை மறுத்த மடத்தியாவின் குடும்பத்தாரை கொலை செய்தான். இதற்கூடாக அவன் ஆலயத்தையும் பலிபீடத்தையும் தீட்டுப்படுத்தினான். எனவே, ஆலயத்தையும் மக்களையும் மீட்கும் பணியில் மக்காபேயர் யுத்தம் புரிந்தனர். சிறப்பாக, தெயோஸ் எப்பிபானஸ் என்பவர் யுத்தம் புரிந்து மக்களை கிரேக்க அடிமைத்தனத்திலிருந்து மீட்டான். இதற்கூடாக புதிய நம்பிக்கையை அவன் அளித்தான்.

• திருப்பாடல் 4ல் ஆசிரியர் நீதிக்காக மன்றாடுகின்றார். நீதி வாழ்விற்கு அவசியமாகின்றது. இயேசுவை உயிர்த்தெழச் செய்ததன் ஊடாக கடவுள் இயேசுவுக்கு நீதி வழங்கி தான் நீதியுடையவர் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

• 1 பேதுரு 4:12- 19 இப்பகுதியில் பாடுபடுதலினூடாக கிடைக்கும் மாட்சிமையையும், புதிய வாழ்வையும் குறித்து ஆசிரியர் பேசுகின்றார். அதாவது, கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்குடையவர்களாக மாறும்போது, அவருடன் மாட்சிமையடைவோம் என்ற புதிய நம்பிக்கையயை தருவதோடு துன்பத்திற்கான நம்பிக்கையையும் எடுத்துக் காண்பிக்கின்றார்.

• நற்செய்தி பகுதியில் யோவான் 19:38-42 இயேசுவின் இரகசிய சீடனாகிய அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு அவருடைய உடலை தன்னுடைய புதிய கல்லறையில் அடக்கம் செய்கின்றார். இதற்கூடாக, கல்லறையை இயேசுவுடன் பகிர்ந்துகொள்ளுகின்றார். எனவே, பகிர்வினூடாக வருகின்ற வாழ்வைப் பற்றி இங்கு பார்க்கின்றோம். ஆண்டவர் இயேசு வாழ்வளிப்பதற்காகவே இவ்வுலகிற்கு வந்ததாக ஆசிரியர் கூறுகின்றார் (யோவான் 10:10). இதுவே, யோவான் நற்செய்தியின் பிரதான நோக்கமுமாகும் (யோவான் 20:31).

ஓவியம்: அரிமத்தியாவின் யோசேப்பு அடக்கம் செய்த கிறிஸ்து, ஜியாசின்டோ பிராண்டி.

ஆக்கம்: அற்புதம்