7 ஜனவரி 2024

• கிறிஸ்தவ வாழ்வு, அழைப்பு ஆகியவை முக்கியமானவைகளாகக் காணப்படுகின்றன. கடவுள் எங்களை ஓர் குறிக்கப்பட்ட நோக்கத்திற்காக அழைத்திருக்கிறார் என்பது முக்கியமானதாகும். அதாவது, பரிசுத்தம் எனும் சொல் ‘பிரித்தெடுக்கப்படுதல்’ என அர்த்தமாகும். 1 பேதுரு 2:9ல், நாம் பிரித்தெடுக்கப்பட்ட ராஜரீக ஆசாரிய கூட்டம் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, எமது பிரித்தெடுப்பின் நோக்கம் மக்கள் பிரயோஜனத்திற்கான ஏற்ற வகையில் கனிகொடுத்தல் ஆகும். ஏசாயா 5:1-5 வரையுள்ள பகுதியில் இஸ்ராயேல் மக்களை இறைவன் திராட்சை செடியாக வர்ணிக்கிறார். எனவே, அவர்களின் அழைப்பு இனிப்புள்ள திராட்சைப் பழங்களைக் கொடுப்பதாகும். ஆனால், அவர்களோ புளிப்புள்ள பழங்களைக் கொடுத்ததன் விளைவாக இறைவன் அவர்கள் மட்டில் திருப்தியடையவில்லை என்ற செய்தியை ஏசாயா முன்வைக்கின்றார்.

• புதிய ஏற்பாட்டிலும் ஆண்டவர் இயேசு இத்தகைய செய்தியை வலியுறுத்துகின்றார். மத்தேயு நற்செய்தி இயேசுவின் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. மத்தேயு 5,6,7,13,16,18,23 ஆகிய அதிகாரங்கள் இயேசுவின் போதனையை மையப்படுத்திய அதிகாரங்களாகும். இங்கு மத்தேயு 7:16-23 வரையுள்ள பகுதி கனியுள்ள வாழ்வைப்பற்றி பேசப்படுகின்றது. பழைய அல்லது முதலாவது மோசே சீனாய் மலையில் கட்டளைகளை கற்பலகைகளில் பெற்று இஸ்ராயேல் மக்களுக்கு கையளித்தார். இங்கு புதிய மோசேயாகிய ஆண்டவராகிய இயேசு மலைபொழிவினூடாக புதிய கட்டளைகளை மக்களுக்கு கையளிக்கின்றார். மேலும், ஆண்டவர் இயேசு மோசேயினுடைய சட்டத்திற்கு புதிய விளக்கங்களை அளிப்பதாகவும் இந்நூற்போதனையில் நாம் காணலாம். அத்துடன், மலைப்பொழிவு ஒருநாளில் நடைப்பெற்ற நிகழ்வு அல்ல. மாறாக, பல போதனைகளின் தொகுப்பு என்பதையும் நாம் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

• திருமுழுக்கு யோவான் தன்னுடைய போதனைகளிலும் கனி கொடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகின்றார். லூக்கா 3:10-17 வரையுள்ள பகுதியில் கனியில்லாத கொடிகள் அனைத்தும் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்பது இறுதி நடுத்தீர்ப்பைப்பற்றி பேசுகின்றது. இங்கும் ஆண்டவர் இயேசு கனியுள்ள வாழ்வு அவசியம் என்பது மாத்திரமன்றி கனிகளினூடாக நாம் ஒவ்வொருவரும் ஏனையவர்களை அறிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக் காண்பிக்கின்றார். மேலும், ஒவ்வொரு மரங்களும் ஒவ்வொரு கனிகளைக் கொடுக்க அழைக்கப்பட்டிருப்பதைப் போன்றே ஒவ்வொரு மனிதரும் தம்முடைய அழைப்பை உணர்ந்துக்கொள்ளுதல் அவசியம் என்பதை காண்பிக்கின்றார். யோவான் நற்செய்தியாளன் இக்கனியுள்ள வாழ்வு கிறிஸ்துவில் நிலைத்திருப்பதன் ஊடாகவே புறப்பட வேண்டியது என்பதை காண்பிக்கிறார். யோவான் 15:1-10 வரையுள்ள பகுதியில், இயேசுவில் நிலைத்திருத்தல் மிக முக்கியமானது என்கிறார். இயேசுவின் ‘நானே’ என்ற கூற்றுக்களின் ஊடாக இது புலப்படுத்தப்படுகின்றது. அன்றைய சமூகத்தில் இறை மையத்திலிருந்து மக்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தனர். எருசலேம் ஆலயத்தினுடைய அழிவு, இயேசுவின் வருகை தாமதப்படல், ஞானவாதக் கொள்கையினரின் செல்வாக்கு போன்றவற்றால் மக்கள் மத்தியில் கனியற்ற வாழ்வும் தங்களின் அழைப்பை உணர்ந்துகொள்ளாத்தன்மையும் காணப்பட்டது. இதற்கு எதிராகவே யோவான் தனது நற்செய்தியை திராட்சை செடியாக கிறிஸ்துவில் நிலைத்திருப்பதே கொடிகளின் அழைப்பு என கூறுகிறார்.

• பொதுவாகவே, கொடிகள் செடியில் நிலைத்திருந்தால் மட்டுமே கனியுப்பு, காற்று போன்றவற்றை பெற்றுக்கொண்டு அவைகளால் கனிகொடுக்க முடியும். அதேபோன்று, ஓர் கனியுள்ள வாழ்விற்கு இறைவனில் நிலைத்திருத்தல் அவசியம் என்கின்றார். எமது அழைப்பில் இறைபலமின்றி இறைதுணையின்றி எங்களால் எதுவும் செய்துவிட முடியாது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். கலாத்தியர் 5:19-23 வரையுள்ள பகுதியில் ஆவியின் கனியைப் பற்றி பவுல் பேசுகின்றார். அக்கனி எல்லோருக்கும் அவசியமானது என்பதை அவர் காண்பிக்கின்றார். எமது அழைப்பில் காணப்பட வேண்டிய உறுதித் தன்மையை முதலாம் இரண்டாம் பேதுரு நிருபங்களில் நாம் படிக்கின்றோம். அங்கும் துன்பத் துயர சூழல்களில் மத்தியில் திருச்சபை இயேசுவில் விசுவாசம் கொள்ள வேண்டும் என்ற செய்தியை பேதுரு வலியுறுத்துகின்றார். எனவே, எமது அழைப்பு இறைமையத்தில் பேணப்பட வேண்டியதாகக் காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கும்போது மாத்திரமே எம்மால் கனியுள்ள வாழ்வை வாழ முடியும். எமது அழைப்பு பிரயோஜனமுள்ளதாக காணப்படும்.

அழைப்பு பிழைப்பு அல்ல. அது ஓர் சலுகையும் அல்ல. மாறாக, சிலுவை மையம் சார்ந்ததாகவும் சீடத்துவத்தை அடையாளமாகக் கொண்டு வாழ வேண்டியதாகவும் காணப்படுகின்றது. அவ்வாறு வாழும்போதே ஆண்டவர் விரும்பும் கனியை எம்மால் கொடுக்கமுடியும். இல்லையேல் அத்திமரம் இலைகள் நிறைந்ததாக காணப்பட்டபோதிலும் அதில் கனிகளைக் கண்டுகொள்ளா ஆண்டவர் வேதனையோடு அதனை உற்றுநோக்கினார். ஆகவே, எம்மை படைத்த ஆண்டவர் வேதனையோடு விரக்தியோடு எம்மை உற்றும்நோக்காதப்படி கனியுள்ள வாழ்வை நாம் வாழுவோமாக. இரவும் பகலும் அவரது வாக்கியங்கள் தியானமாயிருந்து அதன்படி நடப்பவர்கள் ஓர் கனியுள்ள வாழ்வை வாழமுடியும் என திருப்பாடல் 1:1-2 ஆகிய வார்த்தைகள் எங்களை உற்சாகப்படுத்துகின்றன.

ஆக்கம்: அற்புதம்