26 ஜுன் 2022
யோவான் 1:35-42

• யூதப் போதகர்களுக்கு சீடர்கள் இருந்ததைப் போன்று இயேசுவும் தமக்குரிய சீடர்களை அழைத்தார். அத்துடன் எம்மையும் சீடர்களை உருவாக்கும் பணியில் இணைத்துக் கொண்டார் (மத்தேயு 28:19-20).

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி (1 இராஜாக்கள் 19:11-21) கடவுள் மெல்லிய அமர்ந்த காற்றின் மத்தியில் மக்களோடு பேசுகின்றார். அத்துடன், எலிசாவின் அழைப்பும் இங்கு இடம் பெறுகின்றது. கடவுள் தமது பணியை ஆற்றுவதற்காக எம்மில் தங்கியுள்ளார். நாமே அவர்களுடைய கைகளும் கால்களும் ஆவோம். அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களாகவும் நாம் இருக்கின்றோம். கடவுள் படைக்கும் பணி, விடுதலைப் பணி, ஒருமைப்படுத்தும் பணி, நீதியின் பணி, அமைதியின் பணி, சமத்துவப் பணி போன்ற பல பணிகள் எம்மால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி (ரோமர் 16:3-16) பவுல் சீடர்களின் பட்டியலை எமக்குத் தருகின்றார். அப் பட்டியலில் பெண்களும் உள்வாங்கப்படுகின்றனர். எனவே, சீடத்துவத்தில் பால் வேறுபாடு கிடையாது. மேலும், சீடத்துவம் சலுகைக்குரியது அல்ல. மாறாக, அது பொறுப்புக்குரியதாகவும் காணப்படுகின்றது.

• நற்செய்தி வாசகத்தின்படி யோவான் 1:35-42 வரையுள்ள பகுதியில் இயேசுவின் சீடர்களாகிய அந்திரேயா, சீமோன், பிலிப்பு, நாத்தான்வேல் போன்றவர்களின் அழைப்பை நாம் காண்கின்றோம். சிறப்பாக, அந்திரேயா மெசியாவைக் கண்டதாக பேதுருவுடன் கூறுகின்றார். அதாவது, நாம் கண்ட உண்மையை மற்றவர்களுக்கு அறிவிக்க சீடன் கடமைப்பட்டுள்ளான். மேலும், பிலிப்புவின் அழைப்பு ஆயத்துறைக்கு பிரியாவிடைக் கொடுத்து ஆண்டவருக்கு பின்னே செல்லும் அழைப்பாகும். அத்துடன், நாத்தான்வேலை அழைக்கும் வேளையில் அவன் நாசரேத்தூரிலிருந்து நன்மை ஏதும் உருவாகுமோ என்ற வினாவோடு இயேசுவைப் பின்பற்ற தொடங்கினான். இதன்மூலம், சீடத்துவத்தின் அழைப்பு மனமாற்றத்திற்குப் புதியவைகளை கற்றுக் கொள்வதற்குமான அழைப்பாகும்.

• இன்றைய சூழலில் நாம் சீடர்களை உருவாக்குவதில் ஈடுபடாமல் கிறிஸ்தவர்களையே அதிகம் உருவாக்குகின்றோம். மேலும், எண்ணிக்கை ரீதியான வளர்ச்சியை கருத்தில் கொள்ளுகிறோமே தவிர தகைமை ரீதியான வளர்ச்சியை நினைவில் கொள்வதில்லை. எனவே, சீடர்களை உருவாக்குவதில் அறமற்ற முறைகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். மேலும், இயேசுவின் போதனைகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இவைகளைக் கருத்திற் கொண்டு சீடர்களை உருவாக்குவோமாக.