உலகில் தோன்றிய மனிதனும் தெய்வமாகலாம் சமயத்தலைவர்களாக உயிருள்ள
சமயங்கள் அனைத்தினதும் காணப்படுபவர்கள் ஓர் காலத்தில் சமூகத்தலைவர்களாக செயற்பட்டவர்களாவர். இவர்கள் சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட்டதன் விளைவாகவே பிற்காலத்தில் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு தற்போது எல்லோராலும் போற்றப்பட்டு, வணங்கப்படுகிறார்கள்.

21 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீன பூமியில் இயேசு என்னும் வரலாற்று நபர் பிறந்தார். அக்காலத்தில் நிலவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட இவர் கடவுளால் அனுப்பப்பட்டார். குறிப்பாக, அக்காலத்தில் சிறுவர்கள், பெண்கள், விலைமாதுக்கள், வரி தண்டுவோர், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோர் பலதரப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்கப்பட்டனர்.

இவர்கள் மனித மாண்பை இழந்து பொருட்களை போலவே கையாளப்பட்டனர். இவர்கள் வாழ்வில் விடுதலை என்னும் ஒளியை கொடுக்கவே இயேசு மனுவுரு எடுத்தார். அவரின் மனு அவதாரம் குறிக்கப்பட்ட சூழலில், புவியியல் பின்னணியில், அரசியல், பொருளாதார, கலை, கலாசார பின்னணியில் இடம்பெற்றது. இவ் வரலாற்று நிகழ்வை கிறிஸ்து பிறப்புத் திருநாள் என மார்கழி 25 இல் நினைந்து கொள்கிறோம். எளிமை, தாழ்மை, விடுதலை போன்ற குண இயல்புகளை மையப்படுத்தியே இந் நிகழ்வு அன்று இடம் பெற்றது. கடவுளின் பார்வையில் தாமே மேலானவர்கள் எனக் கருதப்பட்ட யூதர்கள் நிராகரிக்கப்பட்டு ஞானிகள் அவரைக் கண்டு அகமகிழ்ந்ததும்

இயேசுவின் பிறப்பு கடவுளின் புரட்சிச் செயலாகும். இதனையே மரியாள் தனது பாடலில் கடவுள் பலமுள்ளவர்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, எளிமையானவர்களையும், வலுவிழந்தவர்களையும்
உயர்த்துகின்றார் எனக்கூறிய இறைவாக்கு இங்கு நிறைவேறுகின்றது.

இயேசுவின் பிறப்பு லூக்கா 2: 13, 14 இன் அடித்தளத்தில், ‘நல்மனதோருக்கு அமைதியைக் கொடுக்கின்றது’ எனக் கூறப்படுகின்றது. அமைதி என்பது போர் அற்ற ஒரு நிகழ்வு அல்ல. மாறாக, போரின் மத்தியிலும் நிலவ வேண்டிய அமைதியையே இது எடுத்துக் காண்பிக்கிறது. இவ் அமைதியை மரியாள் அனுபவித்தாள். மாறாக, அமைதி இழந்த ஏரோது இயேசுவின் பிறப்பைக் குறித்து கேள்விப்பட்ட வேளையில் தனது அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என எண்ணி கலக்கமடைந்தார்.

இக் கலக்கத்திலிருந்து தெளிவடைய பெத்லகேமில் பிறந்த இரண்டு
வயதுக்குற்பட்ட பிள்ளைகளை கொலை செய்தான். இன்றும் எமது அதிகாரங்களை தக்க வைக்கும் நோக்குடன் பலர் கொல்லப்படுவதை நாம் காணலாம். இங்கு இயேசு என்பது வெறும் நபர் அல்ல, அவர் வாழ்வு, உண்மை, விடுதலைக்கான ஆற்றல். எனவே, இயேசுவை அளிப்பது என்பது வாழ்வை, உண்மையை, விடுதலையை அளிப்பதற்கு சமனாகும்.

இயேசுவின் பிறப்பில் யோசேப்பு எனும் நபர் முக்கியத்துவம் பெறுகின்றார். இவர் மரியாளை இரகசியமாக தள்ளிவிட விரும்பினார். இதனால் நீதியை மறைத்து, உண்மையை மறைத்து அமைதியாகத் தூங்கலாம் என எண்ணினார். ஆனால், கடவுள் இவரை அமைதியாகத் தூங்க இடமளிக்கவில்லை. இன்றும் உண்மையை, நீதியை மறைக்க விரும்புகின்ற மக்களை கடவுள் குழப்புகின்றார். இது இயேசுவின் பிறப்பில் கடவுளின் புரட்சிகரமான செயலாகும்.

இப் புரட்சிகரமான செயற்பாட்டை ஆற்றவே கடவுள் இயேசுவை உலகிற்குள் அனுப்பினார். அதனை ஆற்றியதன் விளைவாகவே இயேசுவும் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டார். கிறிஸ்து பிறப்பை நினைந்துகொள்கின்ற நாமும், இன்று கடவுளின் புரட்சிப் பணியில் எம்மை இணைத்துக் கொள்ளும்போது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாளர்களாக எம்மால் மாற முடியும், அப்பொழுது நாமும் தெய்வமாகலாம். இதனை ஒரு சவாலாக ஏற்று கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் மகிழ்ச்சி, நீதி,
உண்மை, வாழ்வு, விடுதலை போன்றவைகள் எமது தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும், தேசிய வாழ்விலும் உதயமாக கடவுளை பிரார்த்திப்போமாக.

Painting Courtesy: Rev. W. Jebasingh Samuvel.

ஆக்கம்:

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்,

பரி. யாக்கோபு ஆலயம், நல்லூர்

இலங்கை திருச்சபை.