மரியாளும் யோசேப்பும் மிகுந்த மனவேதனையோடும் உடல்வலியோடும் தங்குவதற்கு ஓர் இடத்தை தேடிக்கொண்டிருந்தனர். மரியாள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார், தனது மனைவிக்கு குழந்தையைப் பிரசவிக்கச் சரியான ஓர் இடத்தை என்னால் ஏற்பாடு செய்ய செய்ய முடியவில்லையே! என மனவேதனையோடு யோசேப்பு ஓர் இடத்தை தேடிக்கொண்டே இருந்தார்.

இடமும் கிடைத்தது. ஆனால் அவ்விடம் குழந்தை பிரசவிக்க தகுதியான ஓர் இடம் அல்ல, ஓர் மாட்டுத்தொழுவத்தில் இயேசு பிறந்தார்.

‘அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.’ லூக்கா 2 :7

நான் சிறுவனாக இருக்கும் போது மாட்டுத்தொழுவத்தை/மாட்டுப்பட்டியை குறித்தான முதல் அனுபவம் எனக்குக் கிடைத்தது. சிறுவனாக எமது உறவினர்கள் வீட்டிற்குச் செல்லும் போது மாட்டிற்கு அவர்கள் பால் எடுக்கும் போது, மாட்டிக்கு ஆட்டிற்கு புல், புண்ணாக்கு கொடுக்கும் போது, அதை மேய்ச்சலுக்குக் கொண்டு போகும் போது, அவற்றோடு கொஞ்சி விளையாடும் போது வியப்போடு அதைப் பார்த்துக்கொண்டு இருப்பேன். மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பிறகு மாட்டுப்பட்டியைச் சுத்தம் செய்வார்கள். மாட்டுச்சாணம், சிறுநீர், சிந்திய புல், புண்ணாக்கு எல்லாவற்றையும் சுத்தம் செய்து பட்டியைத் துப்பரவாக வைத்துக்கொள்வார்கள்.

இயேசுவும் இவ்வாறான ஓர் இடத்திலே பிறக்கிறார், மாட்டுச்சாணம், சிறுநீர் வாடை, ஈக்கள், கொசுக்கள், மிருகங்கள் நிறைந்த இடத்திலேயே இயேசு பிறக்கிறார். இன்று விழாக்கோலமாக நாம் மின்விளக்குகளால் நிறைந்த ‘மாட்டுத்தொழுவத்தை’ செய்தாலும் இயேசு உண்மையாகவே பிறந்தது, அசுத்தமான மாட்டுத்தொழுவத்தில் ஆகும். இப்பிறப்பின் மூலம், அடிப்படை வசதிகளற்று, விளிம்பு நிலையில் வாழும் மக்களோடு இயேசு தன்னை அடையாளப்படுத்துகிறார். கடவுளின் மகன் அடிப்படை வசதிகளற்ற இடத்திலேயே கால்பதிக்கிறார்.

இயேசுவின் மாட்டுத்தொழுவத்தையும், நான் பார்த்த மாட்டுப்பட்டியையும் சிந்திக்கின்ற பொழுது எனது மனதை வேதனைப்படுத்தியது நம் கண்முன் இருக்கும் லயின் காம்பிராக்கள்.

லயத்துச் சிறைகள் என்று அழைக்கப்பட்ட லயின் காம்பிராக்கள். ஆரம்பக்கால கோப்பி பயிர்செய்கையின் போது கட்டப்பட்டது.தொடக்கத்தில் தோட்டத் தொழிலாளிகள் களிமண் வீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர், காலத்திற்குக் காலம் இக்களிமண் வீடுகளை மீளமைப்பு செய்யவேண்டி ஏற்பட்டதால், அதிகப் பணம் செலவாகுவதை உணர்த்த வெள்ளையர்கள் இத்தொழிலாளிகளை எப்படியாவது இங்கே தங்கவைக்க இந்த லைன் காம்பிராக்களை கட்டினர். மீண்டும் மீண்டும் மீளமைப்பு செய்ய வேண்டியதில்லை என்ற நோக்கில் நீண்ட நேர் கோட்டில் 12 முதல் 16 அறைகள் கொண்ட, தரை முதல் கூரைவரை சுவர் கட்டி 10 x12 அளவில் அறைகள் கொண்ட கட்டிடத்தைக் கட்டினர். 1850களில் இவ்லயின் என நீண்ட வரிசை கூடுகள் கட்டப்பட்டன. இந்த நீணட கட்டிடத்திற்க்கு பொதுவாக ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை பிரிக்கப்படாத நீண்ட வராந்தா காணப்பட்டது. இந்த நீண்ட வராந்தாவிற்கு முன்னால், வாசற்கதவிற்கு முன்னாலே எப்போதுமே சாக்கடை ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் அதிகமான நோயிகளுக்கு காலப்போக்கில் இவர்கள் ஆளானார்கள்.

200 ஆண்டுகளாக ‘மலைகளை குடைந்து, தமது உழைப்பின்மூலம் தேயிலை பயிர்செய்கையில் உலகம் போற்ற முன் நின்று உழைக்கும் மலையக மக்களுக்கு இன்னும் சரியான வீட்டு வசதிகள் இல்லை. மீள் கட்டுமானம் செய்ய வேண்டியது இல்லை எனக் கட்டப்பட்ட லயின் காம்பிராக்களில் இன்னும் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். பொதுவான அடிப்படை வசதிகள் அற்ற இவ்விடங்கள் இன்றும் உலகிற்கு இயேசுக்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருக்கிறது. மலையகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மை. ஆனாலும் இன்னும் பின்தங்கிய உள்ளூர் தோட்டங்கள் மிக மோசமான நிலைமைகளில் தன் இருக்கிறது.

‘பாதர் புது வீடு கட்டியாச்சு,புது வீட்டுக்குப் போக போறோம் பாதர் வந்து எங்களுக்காக ஜெபிக்கவேணும் என்றாள் ஒரு அம்மா, கிடைத்த அழைப்பின் பெயரில் அது தோட்டத்திற்குச் சென்றேன். கிடைக்கப்பெற்ற இடத்தில் அவர்களுக்கு ஏதுவான முறையில் முழுமையை முடிக்கப்படாவிட்டாலும் வாழ்வதற்கான தகுதி நிலையிலிருந்த வீட்டிற்கு ஜெபிக்க சந்தோஷமாக ஒன்றுகூடினோம். அவ்வேளையில் லயின் காம்பிராககளில் இருந்து எட்டிப் பார்க்கும் குழந்தையின் கண்கள் ‘நாங்க எப்ப இந்த மாதிரி தனி வீட்டுக்குப் போக போறம்’ என்ற ஏக்கத்தோடு என்னைப் பார்ப்பதை நான் உணர்ந்தேன்.

லயின் காம்பிராக்களில் வாழ்வது சவால் மிக்கது முழுக்குடும்பமே ஒரே நீண்ட அறையில் ‘ அம்மா, அப்பா,குழந்தைகள்,வாலிப பிள்ளைகள், வயோதிபர்கள்’ எல்லாரும் ஒரே அறையில் தங்கும் அவல நிலை இலங்கையின் மலையகத்தில் காணப்படுகிறது. இவ்வாறு ஒரே அறையில் அனைவரும் உறங்குவதால் பலவிதமான பிரச்சனைகளும், அசெவ்கரியங்களுக்கு குடும்பத்தினர் ஆளாகின்றனர். வாலிபப்பிள்ளைகள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு நாளுக்கு நாள் ஆளாகின்றனர். மழையில் ஒழுகும் லயின் காம்பிராக்களே இங்கு அதிகம்.

ஆசிரியர் பாவ செல்லதுரை சொல்லுவது போல ‘ சதுரங்க போட்டியில் நகர்த்தப்படும் காய்களைப் போல மழைக்காலத்தில் பாத்திரங்கள் இங்கு நகர்த்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறது’.

லயின் காம்பிராக்கள் சிறியதாகவும், மழைக்கு ஒழுகும் நிலையிலிருந்தாலும் இம்மக்களின் மனங்கள் எப்போதும் பெரியதாகவே இருக்கும். இருப்பதைப் பகிர்ந்து கொண்டு வீட்டிற்கு , வருபவர்களைப் போஷித்து அன்போடு நடத்தும் குணம் போற்றத்தக்கது. இம்மக்களின் விருந்தோம்பல் பண்பு எப்போதும் எம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

இருநூறு வருட வரலாற்றில் லயின் காம்பிராக்கள் 150 வருடத்தைத் தாண்டி எம்மத்தியில் உடைந்து போன நிலையில் உழைப்பாளர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருக்கிறது ஆனாலும் அதில் வாழும் மக்களின் நிலை கண்ணீராய் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த லயின் அறைகளில் படிக்கும் பாடசாலை மாணவர்கள் நாளுக்கு நாள் பலவிதமான சவால்களைத் தாண்டியே தமது கல்வியைத் தொடருகிறார்கள். லயின் அறைகள் ஒன்றோடு ஒன்று ஓட்டியிருப்பதால், ஒரு அறையில் படிக்க முயற்சிக்கும் பிள்ளைக்கு பல்வேறு தடைகள் அவனது கவனத்தைச் சிதைத்துக்கொண்டே இருக்கும், வீட்டாரின் உரையாடல்கள். பக்கத்துக்கு விட்டு சண்டைகள், பக்கத்துக்கு லயின் வீட்டின் வானொலி, தொலைக்காட்சி தொல்லைகள், எல்லாமே அவர்களது மன அமைதியைப் பாதிக்கும். இதையெல்லாம் சகித்து கொண்டே இன்று அதிகமானோர் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். குழந்தைகள்,வாலிபர்கள்,புதுமண தம்பதிகள்,வயோதிபர்கள் ஆண்டாண்டு காலமாய் இவ்லயின் காம்பிராக்களில் பட்ட துன்பங்களையும், கண்ணீரையும் இந்த லைன் சுவர்களே சொல்லும்.

இன்றும் இருநூறுவருட காலத்தைச் சிலர் கொண்டாட்டமாக கொண்டாடினாலும், அடிப்படைத் தேவையான மலசல வசதி கூட இல்லாத தோட்டங்கள் எவ்வளவோ எம் கண்முன் காணப்படுகிறது. இன்றும் மற்றவர் வீட்டிலோ, மறைவான காட்டிலோ, ஒதுக்குப்புறத்திலோ தமது அடிப்படை வேலைகளைச் செய்யும் உறவுகள் எத்தனையோ!

வியர்வை சிந்தி நாட்டுக்காக உழைக்கும் மக்களுக்குச் சரியான அடிப்படை வீட்டுவசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். அவர்களது உரிமைக் குரலுக்குத் தோட்ட நிர்வாகமும், பிரதிநிதிகளும்,அரச தலைவர்கள் செவிகொடுக்க வேண்டும். இவர்களின் வாழ்வுரிமையை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, அதை நடைமுறைப்படுத்துவதிலும் மக்களின் வாழ்வை வளப்படுத்தவும் பொறுப்பானவர்கள் முயற்சிக்கவேண்டும். வாழ்வில் கஷ்டங்கள், கவலைகள், கரடுமுரடான பாதைகளை ஒவ்வொரு நாளும் இவர்கள் சந்தித்தாலும் தமது உழைப்பையும், முயற்சியையும் இவர்களை கைவிடுவதேயில்லை. இம்மக்களின் வாழ்வில் உள்ள தாகம் ஓர் பெரிய கல்வி சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்,

அடிப்படை வசதிகள் இன்றி 2000 வருடத்திற்க்கு முன் பிறந்த இயேசுவும், 200 ஆண்டுகளாக லயின் காம்பிராவில் வாழும் உறவுகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நான் பார்க்கிறேன்.

Rev. Ruben Pradeep Rajendran, St. Margaret’s Church, Kotagala

இவ்உழைக்கும் மக்களின் வாழ்வு சிறக்கவேண்டும், தொழிலாயின் மகனான இயேசு இவர்களுடன் வாழ்கிறார்.

ஆக்கம்: ரூபன் பிரதீப், அருட்பணியாளர்,
இலங்கை திருச்சபை.