25 ஏப்ரல் 2022
மாற்கு 14:43-52

• இன்று மாற்கு என்ற இறையியலாளர், எழுத்தாளர்,, நற்செய்தியாளரின் வாழ்விற்கும் பணிக்கும் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றோம். இவர் பவுலின் பயணத்தோழனாக இருந்தபோதிலும் இரண்டாவது பயணத்தில் பவுல் இவரை சேர்த்துக்கொள்ளவில்லை. ஏனெனில், இவர் முதலாம் பிரயாணத்தின்போது, இடைநடுவில் விட்டுச் சென்றமையே காரணமாகும். எனினும், இவரிடத்தில் காணப்பட்ட நற்பண்புகளை பவுல் பாராட்டுகின்றார் (கொலோசேயர் 4:10). இவ்வாறு உற்சாகப்படுத்தப்பட்ட மாற்கு முதலாவதாக தனது நற்செய்தியை எழுதியதாக புரட்டஸ்தாந்து மக்கள் நம்புகின்றனர். இவரை பயன்படுத்தியே மத்தேயு, லூக்கா போன்றவர்கள் தமது நற்செய்தியை எழுதினர்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி நீதிமொழிகள் 15:28-33 ஆண்டவருடைய வார்த்தையில் வெளிப்படும் ஞானத்தைப் பற்றி நாம் பார்க்கின்றோம். இஞ்ஞானம் கடவுளுக்கு பயப்படுவதனூடாக ஏற்படுகின்றது. இதனையே, திருப்பாடல் 119ல் நாம் காணலாம். நாம் பாவம் செய்யாதபடி இறைவார்த்தையை உள்ளத்தில் பதித்து வைக்கவேண்டுமென தாவீது கூறுகின்றார்.

• இரண்டாம் உடன்படிக்கையில் 1 பேதுரு 5:5-14 பகுதியில் இவ் ஆசிரியர் துன்பச் சூழலில் இறைவார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுகின்றார். ஏனெனில், அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ரோமர்களினால் துன்புறுத்தப்பட்டனர். எனவே, இறைவார்த்தை எம்மை பலப்படுத்துகிறது என்கிறார்.

• நற்செய்தி வாசகத்தில் மாற்கு 14:43-52ல் மாற்கு என்ற இளைஞன் இயேசுவை கைது செய்த வேளையில் ஓடிச் செல்கின்றார். இவ்வேளையில் அவருடைய பாடுகளுடன் இணைந்து பங்குபற்றாத சூழ்நிலை காணப்பட்டபோதிலும் ஈற்றில் இயேசுவுக்காக துன்பப்படவும் சாட்சியாக மரிக்கவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

ஓவியம்: கியூசெப் கேலெட்டி

ஆக்கம்: அற்புதம்