‘நான் பாடுபடு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தேன்’ (லூக் 22:15)

வாழ்வில் கிறிஸ்து ஆசைப்பட்டவை என்பவை மிக மிக சொற்பம். தேவைக்கும், ஆசைக்கும் வேறுபாடு உண்டு. ஆசை பேராசையோடு தொடர்புடையது. இருப்பினும் ஆண்டவரின் ஆசை என்பது நன்மைக்கான ஆசை எனக் காணுதல் வேண்டும். தன் நண்பர்களோடு உணவு உண்ணும் ஒரு எளிய ஆசை. ‘நான் பாடுபடுமுன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தேன்’.

பஸ்கா விருந்தும், இயேசுவின் மரணமும்

எகிப்தில் தொடங்கப்பெற்ற இசுரவேலரின் பஸ்கா விருந்தும், இயேசுவின் மரணமும் ஒரே நாளில் நடந்தவை எனலாம். எருசலேம், யூதர்களின் உலகம் பஸ்காவை கொண்டாடும்போது இயேசுவின் உடல் ஒரு பலி ஆட்டைப்போல கிழிக்கப்பட்டது, உதிரம் கொட்டப்பட்டது. ஆண்டவர் தன் உடலைப் பகிர்வதையே ஒரு விருந்தாக பார்த்தாரா? அல்லது புதிய பஸ்கா ஆடு அடிக்கப்படும் போது உலகமக்களுக்கும் விடுதலை பிறக்கிறது என பார்த்தாரா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விருந்தா? என பல கேள்விகள் எழும்பலாம்.

இந்த பஸ்கா விருந்துக்கு ஓர் ஆழமான, உணர்வுபூர்வ வரலாறு உண்டு – இரு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடந்தன (யாத்.12:12). எகிப்திலிருந்து தப்ப வேண்டும், அடிமைத்தன வீட்டிலிருந்து விலகி ஒட வேண்டும். இந்த விடுதலைப் பயண ஓட்டம் திகிலையும், மகிழ்வையும் ஒரே நேரத்தில் கலந்து கொடுத்தது. யாத்.11:4-7- இல் முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்ளை நோய் (வாதையை) அனுப்பப்படுகிறது. எகிப்து நாடேங்கும் மிகப்பெரிய கூக்குரல், அழகையின் ஓலம். ‘இதுபோன்ற கூக்குரல் இதுவரை கேட்டதில்லை, இனிமேலும் கேட்பதில்லை’ என்கிறது விவிலியம். எகிப்தியர் தலைப்பிள்ளைகளை இழக்கின்றனர். மறுபுறம் எபிரேயர் வீட்டுக்கொரு ஆட்டுக்குட்டியை சாப்பிட முனைகின்றனர். விடுதலையைக் கொண்டாட வீட்டுக்கொரு ஆடு பலியிடப்படுகிறது. சாப்பிட்ட பின் மீதிவராத அளவு ஓர் ஆட்டுக்குட்டியைத் தெரிவு செய்து, நெருப்பில் சுட்டு புளிப்பில்லா அப்பத்தோடு, தடியை ஊன்றிக்கொண்டு, செருப்பை அணிந்துகொண்டு, அவசர அவசரமாய் உண்ணுகின்றனர் எபிரேயர். விடுதலையைக் கொண்டாட வீட்டுக்கொரு ஆடு பலியிடப்படுகிறது (யாத்.12-ஆம் பிரிவு).

ஆக பஸ்காவும் இயேசுவின் மரணமும் ஒன்றாக இணைந்த நாள் உருவாகிவிட்டது. இரண்டையும் தெளிவாக ஒப்பிடலாம். எகிப்தில் பலியாடு குறிப்பு வருகிறது. பஸ்காவிலும் வீட்டுக்கொரு ஆடுகள் பலியிடப்பட்டன. ஆனால், பின்னர் இயேசுவின் காலத்தில் பலி ஆடு யார் குறிப்பு பல இடங்களில் வராவிடினும், லூக்.22:1-இல் ஆட்டுக்குட்டி குறிப்பு வருகிறது. மாறாக, ஆண்டவர் தன்னையே ஒரு ஆடாக அடிக்கப்படவும், பஸ்கா கொண்டாடவும், புதிய விடுதலை பயணத்தைத் தொடங்கவும் ஒப்புக்கொடுக்கிறார்.

இயேசுவாகிய ஆட்டுக்குட்டி

தான் பலியிடப்படப்போகும் முந்தின இரவு இதனை ஓர் அடையாள பூர்வமாகச் கடைபிடிக்க ஆசைப்பட்டார். இயேசுவே தன்னை ஆட்டுக்குட்டியாக அடிபடுவதை போன்று உருவகப்படுத்தி பேசினார். உடலை பிடுதல், உதிரத்தை பகிர்தல். ஆனால் ஆண்டவர் அக்கடைசி விருந்துக்கு ஆசைப்பட்டார். பொதுவாக தான் உயிரிழக்கப்போவதை மனிதர்கள், விலங்குகள் உணர்ந்தால், கொல்லப்படுமுன் சாப்பிடுவதை நிறுத்திவிடுவர். ஆண்டவர் தைரியமாக இருந்தார் என்பதற்கு இது ஓர் உதாரணம். ‘உங்களோடுகூட இதனை புசிக்க ஆசைப்பட்டேன்’, ‘உங்களோடு’ என்றால் யார் யார் அடங்குவர்? தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட 12 சீடர்களில் ஒருவராகிய யூதாஸ் அவ்விருந்தில் அவரைக் காணவில்லை (லூக்.22:3-6). வேறு ஒரு சிலர், யார் அடுத்த தலைவர் என்ற வாக்குவாதம் செய்தனர் (22:24). அப்போது சாவிலும் உம்மைத் தொடர்வேன் என்ற பேதுருவின் வாக்குறுதி மறுபுறம் (22:33-34). இன்னொருபுறம் காட்டிக்கொடுக்கப்போகும் யூதாஸ், தற்கொலை செய்யப்போகும் யூதாஸ், மறுதலிக்கப்போகும் பேதுரு, சந்தேகிக்கப்போகும் தோமா ஆகியோர். இவைகளுக்கு நடுவில் நடந்ததே ஆண்டவரின் கடைசி ஆசைப்பட்ட விருந்து ஆகும்.

மொத்தத்தில் இறையரசின் தகவுகள், கனவுகள் தவிடு பொடியாகிப் போய்க் கொண்டிருக்கும் ஒர் இருண்ட வேளை. இந்நேரத்தில் ஆண்டவர் தன் உடலைப் பகிர்வதையே தற்செயலான ஒரு விருந்தாக பார்த்தாரா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விருந்தா? அல்லது பஸ்கா ஆடு அடிக்கப்படும் போது உலகமக்களுக்கு மீண்டும் ஒரு விடுதலை பிறக்கிறது எனப் பார்த்தாரா? என்பது நம் கேள்வி.

இப்படிப்பட்ட பின்னணியம் கொண்ட நபர்களைத் தெரிந்தும் விருந்திற்காக இது போன்றோர் யாரையாவது நம்மில் அழைப்பார்களா? நாமெல்லாம் தவிர்த்துவிடுவதுண்டு. ஆனால் ஆண்டவர் தம்மோடு கூட இந்த விருந்தை சீடர்களுடன் புசிக்க ஆசைப்படுகிறார். நம்பிக்கை இழக்காமல் அடியவரோடு விருந்துண்ண ஆசைப்படுகிறார்.

இன்று நாம் எந்த நிலையிலிருந்து திருவிருந்தில் பங்கு கொள்கிறோம்?

இன்று அப்படியில்லை, நம் கிறித்தவ விசுவாசிகள் மிக நல்லவர்களாக மாறிவிட்டனர் என உறுதிகூறிட முடியுமா? காட்டிக் கொடுக்க போகிறவர்களோடு, மறுதலிக்கிறவர்களோடு, தலைவர் பதவியை அதிகாரத்தைப் பெற வேண்டும் என துடிப்பவர்களோடு தாம் ஆசைப்பட்ட விருந்துக்கு இன்னும் ஆண்டவர் அழைக்கிறார்.

காட்டிக்கொடுத்தல், மறுதலித்தல், அதிகாரச் சண்டை நடுவிலும் விருந்தையும், விருந்தின் நடுவில் விடுதலையையும் பகிர்வையும், சமத்துவத்தைத் தேடுதலும் அவசியம் உள்ளது. விருந்து என்பது ஒரு சிறப்பு உணவு மட்டுமல்ல ஆன்மாவையும், உடலையும் குளிரவைக்கும் ஒரு செயல்.

கிறிஸ்து இன்னும் நம் திருச்சபையின் நற்கருணை மேசையைச் சுற்றி காண இயலாத விருந்தினராக உலவிக்கொண்டிருக்கிறார்.

இந்த விருந்தை தம் மமதையை மனதில் கொண்டும் ஒருவர் கொடுக்கலாம். இந்த விருந்து நம்மிடையே உள்ள அதிகாரப் போட்டியை மனதில் வைத்தும் கொடுக்கப்படலாம். இந்த விருந்து பகிர்வை மனதில் கொண்டும் கொடுக்கப்படலாம். இந்த விருந்து பசியைப் போக்கும் தர்மமாகவும் கொடுக்கப்படலாம். ஆனால், ஆண்டவரின் விருந்து மூன்று செயல்பாடுகளை அடிப்படையாகக் கூறுகின்றன.

இது ஒர் இறுதிக்கூடுகை, அனைவரும் சந்திக்கலாம் என்ற உணர்வு. நிரந்தரமாக பிரிந்து விடுவோமோ, சிதறி விடுவோமோ என்ற உணர்வு கொப்பளித்த நேரம் இந்த விருந்து நடந்தது.

துன்பங்களின்,நெருக்கடிகளின் காலங்களில் இந்த விருந்து நினைவுட்டவும், கொண்டாடவும் உதவ முடியும்.

பலவினரான நாம் பிறரால் காட்டிக்கொடுக்கப்படும்போது, மறுதலிக்கப்படும்போது ஆண்டவரோடு கொண்டாட்டத்தை தொடர முடியும்.

இறையரசும் விருந்தும் இணைந்து செல்வது ஒரு மன்னா அனுபவம். பாலைவனச் சூழலில் மட்டும் கிடைக்கும் ஒரு விருந்து. இதன் இறுதி நோக்கு – இறைவரின் உயர்ந்த பொருளாதாரம் மன்னா நெறியின் வழி கட்டமைப்பதாகும். எல்லாரும் அள்ளிக்கொள்ளலாம், ஆனால் சேமிக்கவோ, குவித்து வைக்கவோ முடியாது. குறைந்த அளவு சேர்த்தாலும் நிறைவாகிவிடும், நிறைய சேர்த்தால் குறைவாகிவிடும்.

காட்டிக்கொடுக்கப்போகும் யூதாஸ், தற்கொலை செய்யவிருக்கும் யூதாஸ், மறுதலிக்கப்போகும் பேதுரு, சந்தேகிக்கப்போகும் தோமா இவர்களோடு ஆண்டவரின் கடைசி விருந்து, ஒர் ஆசைப்பட்ட விருந்து. காட்டிக் கொடுக்க போகிறவர்களோடு, தலைவர் பதவியை பெற வேண்டும் எனத் துடிப்பவர்களோடு, மறுதலிக்கிறவர்களோடு அவ்விருந்து இருந்தது.

இப்படிப்பட்டவர்களை தெரிந்தும் யாராவது விருந்திற்காக அழைப்பார்களா?
நாமெல்லாம் தவிர்த்துவிடுவதுண்டு. ஆனால் ஆண்டவர் இன்னும் நம்மோடு கூட இந்த விருந்தை புசிக்க ஆசைப்படுகிறார். நம்மீது நம்பிக்கை இழக்காமல் அடியவரோடு விருந்துண்ண ஆசைப்படுகிறார். இன்று நாம் எந்த நிலையிலிருந்து திருவிருந்தில் பங்கு கொள்கிறோம்? இன்று அப்படியில்லை கிறித்தவ விசுவாசிகள் மிக நல்லவர்களாக மாறிவிட்டனர் எனக் கூறிவிடமுடியுமா?

காட்டிக்கொடுத்தல், மறுதலித்தல், அதிகாரச் சண்டை நடுவிலும் விருந்தையும், விருந்தின் நடுவில் விடுதலையையும் பகிர்வையும், சமத்துவத்தைத் தேடுதலும் அவசியமாக உள்ளது.

அருட்பணி. முனைவர். சாலமன் விக்டஸ்,
அருட்பணி. முனைவர். சாலமன் விக்டஸ்,

இறையியல் பேராசிரியர்,
தமிழ்நாடு.