புதுமைகள் எமக்குத் தரும் சவால்கள்

              ஆண்டவர் இயேசு ஆற்றிய புதுமைகள் எமக்கு பல்வேறுப்பட்ட சவால்களைத் தருகின்றது. சிறப்பாக, நாம் வாழும் இவ்வுலகில் பொருளாதார சமத்துவமற்ற சூழல் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். மேலும். 20 வீதமான வளங்களை 80 வீதமான மக்களும் 80 வீதமான வளங்களை 20 வீதமான மக்களும் தம்மிடையே கொண்டுள்ளனர். இது வளப்பகிர்வில் காணப்படும் சமத்துவமற்ற தன்மையை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இயேசுவினுடைய புதுமைகள் எங்களுடைய பங்களிப்பை எதிர்ப்பார்த்து நிற்கின்றது. ஆண்டவர் புதுமைகளை ஆற்றுவதற்கு முன்னர் அல்லது புதுமைகள் ஊடாக மக்களுடைய பங்களிப்பு என்ன என்பதை அறிவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். எனவே, நாம் வெறுமனே புதுமைகளை இருகரம் கூப்பி பெற்றுக்கொள்ளும் மனநிலையைத் தவிர்த்து மாறாக, புதுமை எங்கள் வாழ்வில் நடைபெற நாங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் அல்லது எங்களுடைய பங்களிப்புக்கள் எவை என்பதை அறிதல் அவசியமாகின்றது.

              ஆண்டவர் இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு உணவளித்த சம்பவத்தில் தமது சீடர்களை நோக்கி, “உங்களிடத்தில் என்ன இருக்கின்றது?” என வினாவுகின்றார். இதனை மாற்கு 8:38ல், நாம் பார்க்கின்றோம். அதாவது, உங்களிடத்தில் இருப்பது என்ன? என்பதை நாம் எப்பொழுதும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். எங்களிடத்தில் இருப்பதை நாம் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும்போது பிறர் தாராளமாக இவ்வுலகில் வாழ முடியும். அத்துடன், எதனையும் வீணாக்காமல் நாம் ஒன்று சேர்க்கும்போது இவ்வுலகம் மிகுதியால் நிரம்பி வழியும் என்பதை மாற்கு 8:43ல், நாம் பார்க்கலாம். எனவேதான், இயேசு மிகுதியான துணிக்கைகளை கூடைகளில்; நிரப்புங்கள் எனக் கூறுகின்றார். வீண்விரயம் இறையரசுக்கு எதிரான தவறாகும். இன்று பல்வேறுப்பட்ட துறைகளில் வீண்விரயங்கள் இடம்பெறுவதை நாம் பார்க்கின்றோம். எனவே, இதிலிருந்து நாம் விடுபடுதல் அவசியமாகின்றது.

              ஆண்டவர் இயேசு லாசருவை உயிர்த்தெழச் செய்த புதுமையின்போது அங்கு ஆண்டவர் இயேசு மார்த்தாளைப் பார்த்து, “உனது சகோதரன் உயிர்ப்பெற்று எழுவான்” எனக் கூறுகின்றார். அப்பொழுது இயேசு மேலும் மக்களை நோக்கி, “கல்லறைக்குள் சென்று கற்களை புரட்டவேண்டும்” எனக் கூறுகின்றார். அப்பொழுது மார்த்தாள், “நான்கு நாள் ஆகிவிட்டது, நாறுமே” எனக் கூறுகின்றார். இங்கு, லாசருவை உயிர்த்தெழச் செய்ய வல்லமை இயேசுவிடம் காணப்பட்டால் கற்களைப் புரட்ட வேண்டிய பணியை ஏன் அவர் அங்கிருந்த மக்களிடம் எதிர்ப்பார்க்கின்றார்? அவராலே அதையும் செய்ய முடியும். எனினும், உங்களுடைய பங்களிப்பு என்ன என்பதை அவர் வேண்டி நிற்கின்றார். முதற்படியை நாங்களே எடுக்க வேண்டும் என எண்ணுகின்றார். அதுவே புதுமைக்கான ஆரம்பப் படிநிலை ஆகும்.

              யோவான் 4:47ம் வாக்கியத்தில், இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட உரையாடலின்போது ஆண்டவர் இயேசு சமாரியப் பெண்ணைப் பார்த்து, “நான் உனக்கு உயிருள்ள தண்ணீரைக் கொடுக்க முடியும்” எனக் கூறுகின்றார். எனினும், “முதலில் நீ எனக்கு குடிக்கத் தா” என வேண்டுகின்றார். முதலில் உன்னுடைய பங்களிப்பு என்ன என்பதை நீ செய்து காட்டுவாயாக. அதுவே உயிருள்ள தண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படையாகக் காணப்படும் எனக் கூறுகின்றார்.

              அன்பானவர்களே, ஆண்டவரின் இயேசுவின் புதுமைகள் எப்பொழுதும் எங்களிடத்திலிருந்து ஆரம்ப படிநிலையை எதிர்ப்பார்த்து நிற்கின்றது. முதற்படிநிலையை எடுக்க வேண்டியவர்கள் நாங்களே. அதற்கூடாக பல்வேறுப்பட்ட காரியங்களை ஆண்டவர் எங்கள் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் நிறைவேற்ற வாஞ்சிக்கின்றார். எனவே, ஆரம்ப படிநிலைகளை நாம் எடுக்க ஆயத்தமாவோம்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
இலங்கை