பல்சமய சூழலில் இயேசுவின் புதுமைகளை புரிந்துகொள்ளுதலும் விளக்கமளித்தலும்

              நாம் வாழும் சூழல் ஓர் பல்சமய சூழலாகும். பல்சமய சூழல் கடவுள் எமக்கு அளித்துள்ள ஓர் கொடையாகும். எனவே, இச்சூழலை கண்டு நாம் அச்சமுறாமல் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது அவசியமாகின்றது. இச்சூழலில் இயேசுவின் புதுமைகளை சரியாக புரிந்துக் கொண்டு விளக்கமளிக்காதப் பட்சத்தில் சமயங்களுக்கிடையே தவறான சிந்தனைகளும் முரண்பாடுகளும் போர்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பல்சமய சூழலில் இயேசுவின் புதுமைகளுக்கு சிறப்பாக விளக்கமளித்தல் அவசியமாகின்றது.

              ஆண்டவர் இயேசு இறைமைய சிந்தனையுள்ளவராக பல புதுமைகளை ஆற்றியுள்ளார். குறிப்பாக, மாற்கு 5:19ல் ‘லேகியோன்’ என்ற பேய் பிடித்தவரை குணப்படுத்திய வேளையில் இயேசு அவரை நோக்கி, “கடவுள் உனக்கு இரங்கிச் செய்த இச்செயலை நீ உன் இனத்தாரிடத்தில் சென்று சொல்லு” எனக் கூறிய வாக்குகள் இயேசு தமது திருப்பெயரின் மாட்சிக்காக புதுமைகளை செய்யவில்லை என்ற கருத்தை எமக்கு எடுத்துரைக்கின்றது. மேலும், மத்தேயு 11ம் அதிகாரத்தில் யோவான் தனது சீடர்களை இயேசுவிடத்தில் அனுப்பியபோது இயேசு புதுமைகளை இன்னொருவர் செய்வதை போன்றே விளக்கமளிக்கின்றார். இவ்வுதாரணங்கள் அனைத்தும் இயேசுவின் புதுமைகள் இறைமைய சிந்தனையில் ஆற்றப்பட்டது என்ற கருத்தை நாம் முன்வைக்கலாம்.

              இயேசுவின் புதுமைகளை நாம் பிறரை மனம்மாற்றும் கருவிகளாக பயன்படுத்தலாகாது. மாற்கு 7:24-30ம் வசனம் வரையுள்ள பகுதியில், ஆண்டவர் இயேசு தீரு சீதோன் போன்ற பகுதிகளிலிருந்து தம்மிடத்தில் உதவிக்காக வந்த கானானிய பெண்மணியைப் பற்றி பேசுகின்றார். இப்பெண்மணியின் மகள் நோயுற்றிருந்தாள். இயேசு அவளை சுகப்படுத்துகின்றார். குணமளித்த இயேசு கானானிய பெண்ணையும் அவள் மகளையும் தன்னையும் பின்பற்றுமாறு வற்புறுத்தவில்லை. மாறாக, அவர்கள் அவரிடத்திலிருந்து விடைபெற்று சென்றுவிட்டனர். எனவே, இயேசுவின் புதுமைகளை நாம் பிறரை மனமாற்றும் கருவிகளாக பயன்படுத்தி சமயமாற்றத்திற்கு சான்றாக உபயோகித்தல் தவறான ஓர் அணுகுமுறை ஆகும்.

              மாற்கு 9ம் அதிகாரத்தில், மறுரூப மலையிலிருந்த இறங்கி வந்த இயேசு ஒரு தந்தையையும் மகனையும்; சந்திக்கின்றார். அங்கு மைந்தன் தவறான ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான். இயேசுவின் சீடர்களால் அந்த ஆவியை துரத்தமுடியாது போகவே தந்தை இயேசுவிடத்தில் அம்மகனை அழைத்து வருகின்றார். அப்பொழுது இயேசு தந்தையை நோக்கி, “நான் இப்புதுமையைச் செய்ய முடியும் என நீர் நம்புகிறாயா?” எனக் கேட்கின்றார். அதற்கு அவர், “என்னிடத்தில் உள்ள அவநம்பிக்கை நீங்குமாறு உம்மை வேண்டுகின்றேன்” எனக் கூறுகின்றார். எனவே இயேசு புதுமைகளை ஆற்றுவதற்கு முன்னர் அவரிகளிடத்தில் நம்பிக்கையை எதிர்பார்க்கவில்லை. இன்று நாம் வாழும் சூழலிலே நம்பிக்கை இருந்தால் மாத்திரமே இயேசு குணப்படுத்துவார் என்ற தவறான சிந்தனைகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆகவே, புதுமைகள் நடைபெறாத பட்சத்தில் மக்களிடம் காணப்படும் அவநம்பிக்கையே காரணம் என்பதைக் கண்டு அவர்களை நியாயம் தீர்ப்பதை நாம் தவிர்த்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

              இன்றைய பல்சமய சூழலில் இயேசுவின் புதுமைகளை புரிந்துக் கொள்ள நாம் முற்படவேண்டும். அவரின் இறைமைய சிந்தனை, அவரிடத்தில் காணப்பட்ட இறையாட்சி பற்றிய சிந்தனைகள் போன்றவைகளின் அடித்தளத்திலேயே அவரின் புதுமைகள் புரிந்து கொள்ளப்பட வேண்டியவைகளாகக் காணப்படுகின்றது. எனவே, சரியான முறையில் இயேசுவையும் அவரின் புதுமைகளையும் புரிந்து கொண்டு அவற்றிற்கு விளக்கமளிப்பதன் மூலமாக உரையாடல் வழிசார்ந்த உறவு நிலைக்குள் நாம் அனைவரும் பிரவேசிப்போமாக. 

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
இலங்கை