22 மே 2022

கிறிஸ்துவுடன் திருப்பணி – கிறிஸ்துவின் ஆவி
Mission with Christ’s Spirit

மத்தேயு 28:16-20

• இன்றைய உலகில் பல திருப்பணிகள் நடைப்பெறுகின்றன. இவைகளிலிருந்து திருச்சபையின் திருப்பணி வேறுப்பட்டதாக அமைய வேண்டும். சிறப்பாக, அது கிறிஸ்துவின் ஆவியை கொண்டமைய வேண்டும் என நாம் பார்க்கின்றோம். கிறிஸ்துவின் ஆவி விடுதலையின் ஆவி என 1 கொரிந்தியர் 12:7ல் நாம் பார்க்கின்றோம். இவ் ஆவியை கொண்டவர்களும் விடுதலை உணர்வுடையவர்களாக காணப்படவேண்டும்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 2 இராஜாக்கள் 2:9-16 இப்பகுதியில் எலியா விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர், அவருடைய சீடனாகிய எலிசா எலியாவினிடமிருந்து கடவுளின் ஆவியை பரிசாக வேண்டினார். எலியாவும் அதனை எலிசாவுடன் பகிர்ந்து கொண்டார். இவ்வாறான, விடுதலையின் ஆவியின் காரணமாக எலிசா எலியாவைவிட இரட்டிப்பான புதுமைகளை செய்தார்.

• திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 7:54-60ல் திருத்தொண்டரும் இறைவாக்கினருமாகிய ஸ்தேவான் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படுகின்றார். இவரிடம் கிறிஸ்துவின் ஆவி காணப்பட்டப்படியினாலேயே கிறிஸ்துவைப் போல தவறு செய்தவர்களையும் தாராள மனதுடன் மன்னிக்கின்றார். இம்மன்னிப்பின் திருப்பணி பவுலின் மனமாற்றத்திற்கும் ஆதித்திருச்சபையின் வாழ்விற்கும் முக்கியமானதாகக் காணப்பட்டது. இதனை மையமாகக் கொண்டே தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா தன்னை துன்புறுத்தியோரை மன்னித்ததை நாம் பார்க்கின்றோம். மேலும், பேராயர் டெஸ்மன் டூடூ மன்னிப்பின்றி எதிர்காலம் இல்லை என எழுதிய நூல் இன்றும் பெறுமதி வாய்ந்ததாக உள்ளது.

• மத்தேயு 28:16-20ல் ஆண்டவர் இயேசு அளித்த இறுதிக் கட்டளையைப் பற்றி நாம் படிக்கின்றோம். இக்கட்டளை கலிலேயா பகுதியில் கொடுக்கப்படுகிறது. கலிலேயா ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியாகும். இப்பகுதியிலேயே ஆண்டவர் தனது பணியை அதிகளவில் ஆற்றினார். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டளையில் எல்லோருக்குமான திருப்பணி, போதனைத் திருப்பணி, திருமுழுக்குத் திருப்பணி போன்றவைகள் வலியுறுத்தப்படுகின்றன. இத்திருப்பணிகள் அனைத்தும் கிறிஸ்துவின் ஆவியுடன் ஆற்றப்பட வேண்டும். அவ்வாவி எல்லோரையும் உள்வாங்கும் தன்மையுடையதாகவும், வாழும் நற்செய்தியாக எம்மை மாற்றும் தன்மையுள்ளதாகும். அடையாளச் சாக்கிரமந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கிறிஸ்துவின் அருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையுள்ளதாகவும் எம்மை மாற்றுகின்றது.

• இன்றைய பல்சமய சூழலில் திருப்பணிகள் கிறிஸ்துவின் ஆவியுடன் மேற்கொள்ளாதபடியால், கிறிஸ்தவர்களுக்கும் பிற சமயத்தவர்களுக்குமிடையே போட்டி நிலை தோன்றுகின்றது. இதனால், சமயங்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுவதால் நல்லுறவு காணப்படுவதில்லை. மேலும், கிறிஸ்துவின் ஆவி அற்ற நிலையில் திருச்சபையினால் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளால் திருச்சபைக்கு இடையேயும் ஒற்றுமையற்ற தன்மைகள் காணப்படுகின்றன. இவைகள் நற்செய்திக்கு சான்று பகர்வனவாக காணப்படமாட்டாது.

ஆக்கம்:அற்புதம்

One thought on “கிறிஸ்துவுடன் திருப்பணி – கிறிஸ்துவின் ஆவி”

Comments are closed.