(மத்தேயு 26:15)

இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?

மூன்றரை ஆண்டு காலமாக குரு - சீடர் என இருந்த இயேசு - யூதாஸ் ஆகிய இருவரின் உறவும், நட்பும் இப்போது வியாபாரத்திற்குரிய ஒரு முத­லீடாகப் பார்க்கப்படுகிறது. 'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கேள்வியில் ஒருவித வியாபாரத் தொனி கேட்கிறது. இங்கு ஒருவித முதலீ­டும், ஒருவித இலாபமும் சுட்டப்படுகிறது, யாரிடத்தில் விற்கப்படுகிறது, யாருக்காக விற்கப்படுகிறது என்ற கேள்விகளைக் கேட்க அன்றைய சீடராகிய யூதாசுக்கு நேரமில்லை.  அப்படிப்பட்ட உறவையும், நட்பையும் விற்பதற்குத் தயாராகிவிட்ட ஒரு சூழலில் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க அவருக்கு நேரமில்லை. 

இது இன்று நம்மிடையேயும் குடி புகுந்துள்ள ஒரு மனப்பான்மை ஆகும்.

‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற நோக்கினை மட்டும் வைத்துச் செயல்படும் போங்கு பரவலாக இன்று அதிகரித்து வருகிறது. பலனை எதிர்பார்த்துச் செயல்படும் வாழ்க்கை முறைகளில் மக்கள் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அரசு அலுவலர்களில் பலர் எளிய மக்களிடம், ‘உனக்கு கடன் (கர்ஹய்) வழங்கினால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என்கின்றனர். ‘ஏன் எனக்கு இத்தனை விழுக்காடு கொடுக்கக் கூடாது? இந்த கோப்பை (File) நகர்த்தினால் எனக்கு என்ன தருவீர்கள்? போலிச்சான்றிதழ் தந்தால் எனக்கு என்ன கிடைக்கும்? அடுத்தவர் சொத்தை போலி ஆவணம் மூலம் திருட்டுத்தனமாக விற்றால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்? கள்ளக்கடத்தலுக்கு உதவினால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?’ ஆக, மாதச் சம்பளத்தினர்கூட ‘சம்பளத்திற்காகத்தான் பணியாற்றுகிறேன்’ என்ற தமது நிலைமை மாறி ‘கிம்பளத்திற்காகவே வாழ்கிறேன்’ என்பது போன்ற மனப்போங்குகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச இலாவண்யங்கள் இப்படித்தான் ஒருவரிடம் உருவாகின்றன. யூதாசைப் போன்ற எண்ணங்கள் இன்றும் எல்லாரிடமும் துளிர்விட ஆரம்பிக்கின்றன.

இதே கேள்வி இன்று கிறித்தவர்களையும் வேறு கோணத்தில் அலைக்கழிக்கிறது.  சபைகளில் நிலவும் 'ஆசீர்வாதத் தட்டை எடுத்தால் எனக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்?' என பலரும் நம்புகின்றனர். நிபந்தனையுடன் ஆசீர்வாதத்தை இணைத்துப் பார்க்கின்றனர். முத­லீடு செய்து ஆசியை வரவழைக்க நினைக்கின்றனர். 'நீதிக்காக உழைத்தால் எனக்கு என்ன கிடைக்கும்? நான் நல்லவராக நடந்தால் எனக்கு என்ன கிடைக்கும்? ஏழைகள்மீது கரிசனை கொள்வதால் எனக்கு என்ன கிட்டும்?' ஆக, கடவுள் பயத்திலும் ஒரு சுயநலம் உள்ளதோ? பரதீசும், மோட்சமும், பரலோகமும், ஆசீர்வாதம் போன்ற எண்ணங்கள்கூட 'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற ஆசையின் நோக்கில்தான் உருவாகியதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

இந்த எண்ணம் அண்மையில் நம்மை தாக்கிய நோயன்று. இயேசுவின் சீடர்களில் பலருக்கும் இந்த கேள்வி உள்ளத்தில் இருந்தது. 'ஆண்டவரே! எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றினோமே? (மத்.19:27; லூக்.18:28). எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்ற கேள்விகள் அன்று சீடர்களையும் அலைக்கழித்தன. 

தியாகம், இழப்பு, ஒப்படைப்பு, பொதுநலன் என்ற சொற்களுக்கான பொருள் மாறுகிறது. புதிய தலைமுறையினரின் மதிப்பீடுகள் மாறுகின்றன. சுயநலனுக்காக பொதுநலத்தை தியாகம் செய்ய மக்கள் முன்வருகின்ற காலமாகிவிட்டது இன்று. ‘கிறிஸ்துவுக்காக நாம் எதை இழந்தோம்?’ என்ற கேள்வியை மீண்டும் நமக்குள்ளே கேட்கத் தொடங்க வேண்டும்.

நம் குருவாகிய ஆண்டவர் ஒருநாளும் ‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற கேள்வியை முன்னிறுத்தி பணி செய்யவில்லை. ‘நரிகளுக்கு குகைகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளுமுண்டு. மானிட மைந்தருக்கு தலைசாய்க்க இடமில்லை’ என்பதுதான் அவருக்கு மிச்சம்.

பவுலடியாரும் இதனையே பின்பற்றினார். ‘… நான் எவர் மூலமாவது ஆதாயம் (இலாபம்) தேடினேனா?’ என்கிறார் (2கொரி.12:17). துன்பம் கலந்த இறப்பைத்தான் தன் ஆதாயமாகக் கருதுகிறார் (பிலி.1:21). அவர் வாழ்வின் இறுதியில் பெற்ற அனுபவம் – சிலுவையைப் பற்றிய போதனை கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாகவும், மீட்படைகிறவர்களுக்கோ கடவுள் பலமாகவும் உள்ளதாகப் பார்க்கிறார். இழப்பை இவர் ஓர் ஆசியாகப் பார்க்கிறார். சராசரி மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக உயிர்த்துடிப்புடன் கூறப்பட்ட சாத்ராக், மேசாக், ஆபெத்நேகோ ஆகிய மூவரின் வார்த்தைகள், ‘நாங்கள் நம்புகிற கடவுள் எங்களை விடுவித்தாலும், விடுவிக்காமல் போனாலும் உம் பொற்சிலைகளை வணங்கப் போவதில்லை’ (தானி.3:18) இன்றைக்கும் அசைக்க முடியாத அறைகூவலாக நம்முன் நிற்கின்றன.

யூதாஸின் இறுதி நிலை
'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற யூதாசின் மனநிலை அவருக்கு முப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுத் தருகிறது. அவன் பல வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தான். அந்த வாய்ப்பும் வாய்த்தது. தரகுப் பேசியவர்களும் முப்பது வெள்ளிக்காசுகளை அவனிடம் எடையிட்டு சரியாகக் கொடுத்தனர். தங்கள் பேரத்தில் நியாயமாக நடந்து கொண்டனர். ஆனால் 'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற  அவனது வேட்கை பல துரோகங்கள் அரங்கேற காரணமாகியது. இரவில் பல பேரங்கள் நடந்தேறுகின்றன. ஒரே இரவில் பலர் கட்சி மாறுகின்றனர்.  தூக்கத்திற்கும், ஓய்வுக்கும், அமைதிக்கும், உறவுக்கும் பயன்பட வேண்டிய இரவுகள், இப்போது பேரத்திற்கும், காட்டிக் கொடுத்தலுக்கும், மறுதலிப்புக்கும், கட்சி மாறுதலுக்கும், அணிகள், ஓட்டுகள் மாறுவதற்கும் உரிய நேரமாகி விட்டன.

முப்பது வெள்ளிக்காசுகளால் யூதாஸ் தன் வாழ்வை முன்னேற்றவோ, அனுபவிக்கவோ முடியவில்லை. எந்த சாதனையையும், ஆசைகளையும் நிறைவேற்ற முடியவில்லை. அவன் எண்ண ஓட்டத்திற்கும், மனச்சாட்சிக்கும் இடையே போராட்டம் வலுத்தது.  சரியான போராட்டம்!  இறுதியில் மனச்சாட்சியே வென்றது!  மனச்சாட்சியின்முன் இலாபம் நிற்க முடியவில்லை.  குற்ற உணர்வு விஞ்சியது.  தலைமைக் குருவிடமும், மூப்பர்களிடமும் திரும்பிச் சென்று, 'பாவமில்லாதவரை காட்டிக் கொடுத்து பாவம் செய்தேன்' என்று குமுறினான் (மத்.27: 3-5).  

அதற்கு அவர்கள், ‘எங்களுக்கென்ன, நீயே அதைப் பார்த்துக் கொள்’ என்றனர். யூதாஸ் என்பவன் கிறித்தவ உலகம் வெறுப்பு காட்டும் அளவிற்குக் கொடியவன் அல்ல, மாறாக அவனை தனது வாழ்வில் மனச்சாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து மனந்திரும்பிய ஒர் ஆன்மா எனலாம்.

ஆனால், இந்த மனவருத்தத்தைக் கடவுளிடம் கூறுவதற்குப் பதிலாக தலைமைக் குருவிடமும், மூப்பரிடமும் கூறியதுதான் சிக்கல். அது அவரது வாழ்வை சீர்குலைத்தது. எந்தப் பணத்தை யூதாஸ் எதிர்பார்த்தாரோ, அதே பணத்தை வழங்கிய நபர்கள் தங்கள் பேரம், நன்றிக்கடன், வியாபாரம் முடிந்துவிட்டது என அவனைக் கைகழுவி விட்டனர்.

'எனக்கு என்னக் கிடைக்கும்?' என்ற நாட்டம் மற்றவர்களைச் சுரண்டி, ஏமாற்றி, அடகுவைத்து, காட்டிக் கொடுப்பது என்பது இறுதியில் நிராசையில்தான் முடியும். உழைக்காத ஒன்றிற்காக ஆசைப்படுவது அப்படித்தான் முடியும். எனவே, வரிதண்டுவோரிடமும், படைவீரரிடமும் யோவான் திருமுழுக்குநர் கூறும்போது, 'உங்களுக்கு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்' எனவும், 'நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்...உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்' எனவும் கூறி எச்சரித்தார் (லூக்.3:12-14). பலனை எதிர்பார்க்காத சேவையும், தியாகமும், ஒப்படைப்பும், கடமையும் மட்டுமே கடவுளின் பார்வையில் ஏற்புடையதாக அமையும் (லூக்.17:10). தன்னலமற்ற ஆண்டவரின் தொடர்க் கேள்வியே, 'மனிதன் உலகம் முழுவதையும் தனக்கு இலாபமானதாக ஆக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழப்பாரெனில் அவனுக்குப் பயன் என்ன?' என்பதாகும் (லூக்.9:25). இதனை உணர்ந்து வாழ்வைக் காண கடவுள் அருள் செய்வாராக!  ஆமென்.
முனைவர். சாலமன் விகட்ஸ்,
முனைவர். சாலமன் விகட்ஸ்,

இறையியலாளர், தமிழ்நாடு.

ஓவியம்: வில்ஹெல்ம் மார்ஸ்ட்ராண்ட்