துயருரும் மக்களுடன் மரியாளின் வாழ்வையும் பணியையும்

பொதுவாக இன்றைய திருச்சபைகளில் மரியாள் புனிதவதியாகவும் திருத்தாயாகவும்
கூண்டிற்குள் அடைக்கப்பட்டு வணக்கத்தைப் பெறுகின்ற ஓர் வணக்கப் பொருளாகவும்
காணப்படுகின்றார். இத்தகைய காரியங்கள் அவரின் விடுதலை உணர்வினை மங்கச் செய்வதாகக்
காணப்படுகின்றது. சிறப்பாக, லூக்கா 1:46-55ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் மரியாளின்
பாடலை நாம் பார்க்கலாம்.

சமூகப்புரட்சியாளர் மரியாள்
இங்கு மரியாள் ஓர் சமூகப்புரட்சி செய்பவராகவும் அரசியல்
புரட்சியின் அடித்தளமாகவும் பொருளாதார புரட்சியின் ஊற்றாகவும் காணப்படுகின்றார். இன்றைய இலங்கைச் சூழலில் மரியாளை நாம் எடுத்துக் கொண்டால்; மரியாள் காணாமல்
ஆக்கப்பட்ட மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துகின்றாள். உதாரணமாக: லூக்கா 2:41-52ம் வசனம்
வரையுள்ள பகுதியில் இயேசு எருசலேம் ஆலயத்திற்கு பஸ்கா பண்டிகைக்காகச் சென்ற வேளையில்
பண்டிகை நிறைவடைந்ததுடன் காணாமற் போய்விட்டார். மரியாள் அவரை நண்பர்களிடத்திலும்
பிரயாணக்காரரிடத்திலும் தேடுகின்றார். இறுதியில் ஆலயத்திற்கு சென்று
பார்க்கும்போது அவரைக் காண்கின்றார். இன்றும் பெண்கள் தமது பிள்ளைகளையும் சகோதரர்களையும் கணவன்மாரையும் பல ஆண்டுகளாக தேடுகிறார்கள். எனினும், அவர்களை
காணவில்லை. மனித உரிமைகள் நிறுவனத்திலும் காவல்துறையிலும் சென்று தேடுகின்றார்கள்.
ஆனால், அவர்களை காணவில்லை. எனவே, ஆலயத்திலும் வந்துப் பார்க்கிறார்கள். அங்கும் அவரைக் காணவில்லை. இவ்வாறா, வேதனையோடு இருக்கும் இலங்கைப் பெண்களுக்கு மரியாள் ஓர் எடுத்துக்காட்டாகவும் துயரப்படும் மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துபவராகவும்
காட்டப்படுகின்றார். இன்றைய போர்க்காலத்துக்கு பின்னான சூழ்நிலையில் வாழும் பெண்கள் தாம் அனுபவித்த
துன்பங்களை யாருடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் தமக்குள்ளேயே அடக்கி வைக்கின்றனர். அதாவது, நம்பிக்கை உள்ளவர்களை கண்டறிவது மிகக் கடினமாகக் காணப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் ஆற்றுப் பணியில் ஈடுபடுகின்றோம் எனக் கூறி இம்மக்களுடன் சென்று
அவர்கள் துன்பங்களை கேட்டறிந்த பின்னர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல
துன்பங்களை அனுபவித்து மரணங்களை அனுபவித்த பெண்கள் ஏராளம். இப்பெண்கள் அனுபவிக்கின்ற துன்பங்களைப் போன்றே மரியாளும் துன்பத்தை அனுபவித்தாள். அவள் கருவுற்றிருந்த சந்தர்ப்பத்தில் சவால் நிறைந்த இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக யூதேயா நாட்டிற்கு
சென்றிருந்தாள் (லூக்கா 1:39-45). இவள் எலிசபெத்திடம் சென்றிருந்தபோது மரியாள் ஆகிய இருவரும் தாம் கருவுற்றிருந்த அனுபவங்களை ஒருவரோடுருவர் பகிர்ந்து கொண்டுஆறுதலடைந்தனர். இவ்வாறாக போருக்குப் பின்னான சூழ்நிலையில் ஆறுதலுக்காக
காத்திருப்போர் ஏராளமாகக் காணப்படுகின்றனர்.

போருக்கு பின்னான சூழ்நிலையில் மக்கள் இங்கு நல்லிணக்கம், ஒப்புரவாகுதல்ஆகியவற்றைக் குறித்து அடிக்கடிப் பேசி வருகின்றனர். இதற்காக நல்லிணக்க குழுக்கள்,
காரியாலயங்கள் இலங்கையில் அமைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். யோவான் 19:25-28ம் வசனம் வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு சிலுவையிலே தொங்குகின்ற வேளையில் ‘தாயேஇதோ உன் மகன்’;’யோவான் இதோ உன் அன்னை’ எனக் கூறினார். அதாவது, கலிலேயா
பாரம்பரியத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணாகிய மரியாளைநோக்கி, எருசலேம்
பாரம்பரியத்தைச் சார்ந்த கற்றறிந்த செல்வந்த மகனாகிய யோவானை உன்னுடைய மகனாக
ஏற்றுக்கொள்ள முடியுமா? மேலும், யோவானை நோக்கி, ஏழைப் பெண்ணாகிய எனது தாயை நீஉன்னுடைய தாயாக ஏற்றுக்கொள்ள முடியுமா என கேட்கின்றார். ஆண்டவர் இயேசு இறையரசின்புதிய அன்பின் உறவுக்குள் இருவரையும் வருமாறு அழைக்கிறார். இதற்கு இருவரும்
சம்மதிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் ஒப்புரவாகுதல் என்பது உண்மை, நீதி, பகிர்வு
போன்ற கருத்துக்களை மையப்படுத்திக் கொண்டு அமையுமெனில் அவ் ஒப்புரவாகுதல் எப்பொழுதும்
நிலைத்திருக்கும். இன்றைய இலங்கைச் சூழலில் அநாதரவான நிலையில் இருக்கும் பிள்ளைகளை எங்கள்
பிள்ளைகளாகவும், கைவிடப்பட்ட தாய்மார்களை எங்கள் தாய்மார்களாகவும் ஏற்றுக் கொள்ள
ஆயத்தமா? அவ்வாறு, ஏற்றுக்கொள்ளும் போது நிரந்தர அமைதி உருவாகும். எனவே,இலங்கையில் போர்க் காலத்துக்கு பின்னான அனுபவங்களுடன் மரியாள் இணைந்து

எமது பெண்களை பலப்படுத்துகின்றார்.

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்,
அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்,

இலங்கை.