வசந்தகாலப் பூக்கள் 5


ஐந்தாம் தியானம்

மனித வாழ்வில் உறவுகள் அவசியமாகின்றன. ஆரம்பத்தில் நாம் தெரியாத ஒருவருடன் நின்று பேசுவோம். பின்னர் நாம் இருந்து பேசுவோம். அதன் பின்னர் நாம் உட்கார்ந்து பேசுவோம். இந்நிலை உறவின் வளர்ச்சி நிலையாகும். நாம் பாவத்துடனும் இப்பேர்ப்பட்ட உறவுமுறையே கொண்டுள்ளோம். முதலில் நடக்கும் நிலை. பின்னர் பாவத்துடன் நிற்கும் நிலை. நிறைவில் பாவத்துடன் உட்காரும் நிலை. பாவத்துடன் உட்காரும்போது அதிலிருந்து எம்மால் எழுந்துவிட முடியாது. இதனையே, சங்கீதக்காரன் திருப்பாடல் 1:1-2ல் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் இருங்கள் எனக் கூறுகின்றார். 

மத்தேயு 26:69-75 வரையுள்ள பகுதியில் பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்ததை நாம் காணலாம். ஏனெனில், பேதுரு தன்னுடைய இருப்பிடத்தை இயேசுவுக்கு விரோதமான எதிராளிகளுடன் அமைத்துக் கொண்டார். இதனாலேயே, பேதுரு வீழ்ந்து போவதற்கு காரணமாக அமைந்தது. 

2 சாமுவேல் 11ம் அதிகாரத்தில் தாவீது பத்சேபாளுடன் தவறாக நடந்துக் கொண்டார். இவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணமென்னவெனில் அவர் தனிமையில் அரண்மனையில் இருந்தார். போர்வீரர்களும் தளபதிகளும் யுத்தகளத்தில் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இவர் ஓர் அரசராக போர்க்களத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்  நிராகரித்து தனிமையில் அரண்மனையில் உட்கார்ந்து இருந்ததே அவரது வீழ்ச்சிக்கு காரணமாகும். எனவே, எமது இருப்பிடத்தை சரியான முறையில் அமைத்துக் கொள்வது அவசியமாகின்றது. 

செபம்: இறைவா எனது இருப்பிடத்தை சரியாக அமைத்துக் கொண்டு தவறிலிருந்து விலகி வாழ அருள்புரிவாயாக.