24 ஜுலை 2022
Ordained Ministry

திருநிலைப்படுத்தும் பணி


லூக்கா 10:1-11

• திருநிலைப்படுத்தும் திருப்பணி அருட்கொடைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இப்பணி பொதுநிலையாளர்களுக்கும் ஏற்ற பணி என 1 பேதுரு 2:9ல் நாம் படிக்கின்றோம். ஆனால், மார்டின் லூதர் எல்லா பணிகளும் திருப்பணிகள் எனக் கூறுகின்றார்.

• கடவுள் தனது திருப்பணிக்காக லேவி கோத்திரத்தை தெரிந்தெடுத்துள்ளார். ஏனெனில், அவர்கள் பலவீனமானவர்கள். ஏனைய கோத்திரங்கள் போருக்கு சென்று அவர்கள் கைப்பற்றி கொண்டுவரும் நாடுகள் மற்றும் பொருட்கள் போன்றவற்றில் ஒரு பகுதி லேவியருக்கு வழங்குவர். லேவியர் யுத்தத்திற்கு செல்லும் ஏனைய கோத்திரங்களுக்காக மன்றாடுவார்கள். இப்பணிகளின் நிலை பற்றியே யாத்திராகமம் அல்லது விடுதலைப்பயணம் 29:1-9 வரை நாம் காணலாம். திருப்பாடல் 99ல் கடவுளின் அரசாளுகையைப் பற்றி பேசப்படுகின்றது. இத்திருப்பாடல் அரசாட்சி அமைவதற்கு முன்பதாக எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது (1 சாமுவேல் 8ம் அதிகாரம்).

• இரண்டாம் உடன்படிக்கை பகுதியில் எபேசியர் 5:1-14ல் பவுல் எபேசு திருச்சபை மக்களை வாழும் திருப்பணியாளர்களாக அழைக்கின்றார். இதன்படி, மிருகங்களை பலியிடுவது அல்ல மாறாக, அவர்களுடைய வாழ்வு பலியாகவும் அவர்களின் நடத்தை பரிசுத்தமாகவும் அமைய வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றார்.

• நற்செய்தி பகுதியில் லூக்கா 10:1-11 வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு எழுபது பேரை திருப்பணிக்காக அனுப்புகின்றார். இவர்கள் யூதரல்லாத பிரதேசங்களில் திருப்பணியை ஆற்ற அனுப்பப்படுகின்றனர். இவர்களிடத்தில் கொடுக்கப்படும் பிரதான பணியாக சமாதானத்தைக் குறித்து பேசுமாறு கட்டளைக் கொடுக்கிறார். மேலும், இவர்கள் திருச்சபையால் அல்ல, நிறுவனங்களால் அல்ல இயேசுவினால் அனுப்பப்படுகின்றார்கள். இதன்மூலம், திருப்பணி இயேசுவுக்கே சொந்தம் எனலாம். மேலும், எமது பணிகளில் நாம் கடவுளில் தங்கி இருக்கவேண்டும். அதனால், பணப்பையோ, வேறு எதுவுமோ பணிக்காக, நாம் எடுத்துச் செல்லக் கூடாது. மேலும், எமது திருப்பணிகளில் நியாயந்தீர்ப்பு கடவுளுக்குரியது என நம்பவேண்டும். அத்துடன், திருப்பணியினால் கடவுளுடைய பேருக்கு மாட்சிமை உண்டாக்க வேண்டுமே ஒழிய எமது பெயருக்கு புகழ் உண்டாக்க நாம் செயற்படக் கூடாது.

• இன்றைய திருநிலைப்படுத்தும் திருப்பணிகளும் இத்தகைய மாதிரிகளைக் கொண்டு செயற்படுதல் மிகவும் அவசியமானதாகும்.

ஆக்கம்: அற்புதம்