ge4672b2aec33d589d2b99334e65496cc8d491709da81cc1894bcb91ea08a3c63ad87cb163ea06f1fc0ee827dc43df4f8_1280-735942.jpg

திருநிலைப்படுத்தும் திருப்பணி – இயேசுவின் காயங்களால் திருநிலைப்படுத்தப்படல்
யோவான் 21:15-19

திருநிலைப்படுத்தல் என்பது அருட்கொடைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. பாவமன்னிப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருவிருந்து, திருமணம், எண்ணெய் பூசி செபித்தல், திருநிலைப்படுத்தல் ஆகிய ஏழு அருட்கொடைகளை நாம் நினைந்துக் கொள்கிறோம். இவ் அருட்கொடைகளினூடாக இறை அருள் எமக்குள் உள்வாங்கப்படுவதை நாம் உணரலாம்.

1 சாமுவேல் 22:12-23 வரையுள்ள பகுதியில், இறைவாக்கினர் சாமுவேல் புதிதான ஓர் பணிக்காக தாவீதை திருநிலைப்படுத்துவதை பார்க்கிறோம். மக்களை மேய்க்கும் பணியை தாவீது ஏற்றுக்கொள்கின்றார். எனவே, திருநிலைப்படுத்தும் பணி ஓர் சிறப்புப் பணியாகவும், திருநிலைப்படுத்துபவர் அதற்கூடாக பணிக்காக அழைக்கப்படுதல், அமர்த்தப்படுதல், அனுப்பப்படுதல் ஆகிய மூன்று நிலைகளுக்கு ஊடாக அவர் கடந்து செல்வதை நாம் காணலாம். இத்திருநிலைப்படுத்தப்படும் பணி ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் உரித்தானது என்பதை திருமறை எமக்குக் கூறுகின்றது. இதனை மையமாகக் கொண்டே தென் இந்தியத் திருச்சபை ஆரம்பத்திலும், அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டம் 2006ம் ஆண்டிலும், குருணாகலை மறைமாவட்டம் 2012ம் ஆண்டிலும், மெதடிஸ்த திருச்சபை 1981ம் ஆண்டிலும் பெண்களைத் திருநிலைப்படுத்தியதை வரலாற்றிலே நாம் காணலாம்.

யோவான் 21:15-18 வரையுள்ள வாக்கியத்திலே ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த அனுபவத்திற்குப் பின்னர் பேதுருவை சந்திப்பதை நாம் காண்கிறோம். “நீ என்னை நேசிக்கிறாயா?” என்ற வினாவை அவரிடத்திலே எழுப்புகின்றார். பேதுரு இயேசுவை நேசிக்கின்றேன் என்று பதிலளித்தவுடன் நேசிப்பதன் பிரதிவிளைவாக பொறுப்புடைமை கொடுக்கப்படுகிறது. “என் ஆடுகளை நீ மேய்ப்பாயாக” என்ற பொறுப்பு அவனுக்கு வழங்கப்படுகின்றது. புதிதான ஒரு பணிக்காக பேதுரு இங்கு அபிஷேகம் பண்ணப்பட்டு அனுப்பப்படுவதை நாங்கள் காணலாம். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு திருச்சபை பிரிவுகளும் இத்திருநிலைப்படுத்தல் பணியை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றனர்.

திருப்பணியாளர்கள் முதலில் உதவித்திருப்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டு பின்னர் முழுத் திருப்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்படுகின்றனர். இதற்கூடாக அவர்கள் பரிசுத்த பணிக்காக தங்களைப் பிரித்தெடுக்கின்றனர். பரிசுத்தம் என்பது ஒருவர் ஓர் குறிக்கப்பட்டப் பணிக்காக பிரித்தெடுக்கப்படுதலையே குறிக்கின்றது. 1 பேதுரு 2:9ல் அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியிடத்திற்கு இறைவன் எங்களை அழைத்துள்ளார். பரிசுத்த ராஜரீக ஆசரிய கூட்டமாக எங்களை அழைத்துள்ளார். எனவே இத்திருநிலைப்படுத்தப்படும் பணி எல்லோருக்கும் உரியதாகவும் பணிகளுக்கிடையே எத்தகைய வேறுபாடுகளும் காணப்படுவதில்லை என்று 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்த்திருத்தவாதியாகிய மார்டின் லூதர் எடுத்துக்கூறுகின்றார்.

வில்லியம் டெம்பள் என்ற கென்டபரி பேராயரின் அவதானிப்பின்படி திருநிலைப்படுத்தப்படும் பணி அது எமக்காக அன்று பிறருக்காகவே நாம் திருநிலைப்படுத்தப்படுகின்றோம் என்ற மனநிலையை நாம் எமக்குள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இயேசு எவ்வாறு பேதுருவை திருநிலைப்படுத்தி அனுப்பினாரோ அதுபோல எம்மையும் அவர் உலகத்திற்குள் அனுப்பியுள்ளார். மேலும், சாமுவேல் எண்ணெயால் தாவீதை திருநிலைப்படுத்துகின்ற அதேவேளை நாம் கிறிஸ்துவின் காயங்களினால் திருநிலைப்படுத்தப்படுகின்றோம். அவரது இரத்தத்தினால் திருநிலைப்படுத்தப்படுகின்றோம். இதனூடாக எமது திருநிலைப்படுத்தல்பணி மற்றவர்களை காயப்படுத்துவது அல்ல மாறாக, நாம் பிறருக்காக காயப்பட இறைவன் எம்மை அழைக்கின்றார். எனவே அந்த உன்னத அழைப்புக்குள் அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் பிரயாணிப்போமாக.

ஆக்கம்: அற்புதம்