23 ஜூலை 2023

குருத்துவப்பணி – சமூக மாற்றத்திற்கான அழைப்பு
யோவான் 21:15-19

• கடவுளின் சிறப்பழைப்பிற்கு பதிலுரை அளித்தலையே குருத்துவ பணி என நாம் அழைக்கலாம். இப்பணி கடவுள் சார்பில் மக்களுடனும், மக்கள் சார்பில் கடவுளுடனும் இணைந்து செயற்படுதல் ஆகும். இதனை நாம் ஓர் அருட்கொடையாக கருதுகின்றோம். குருத்துவப்பணி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இறைவன் எம்மை அழைத்துள்ளார் என்ற சமூகப் பொறுப்பையும் உத்தரவாதத்தையும் காண்பித்து நிற்கின்றது.

• எசேக்கியேல் 33:1-8ல், பாபிலோனிய அடிமைத்தனத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ராயேல் மக்கள் மத்தியில் எசேக்கியேல் பணியாற்றுகின்றார். ஆசாரியனாகிய இறைவாக்கினராகிய எசேக்கியேலை இறைவன் ஓர் காவல்காரனாக வைத்துள்ளார். இறைவனின் வார்த்தையை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா இல்லையா எனப் பார்க்கும் ஓர் காவல்காரனாக எசேக்கியேலின் பணி காணப்படுகிறது.

• திருப்பாடலிலும்கூட இறைவன் நம்மை தமது பணிக்காக அழைத்துள்ளார் எனவும், அப்பணியில் எம்மை பயன்படுத்துகின்றார் என்பதையும் ஆசிரியர் எடுத்துக் காண்பிக்கின்றார்.

• 1 தீமோத்தேயு 3ம் அதிகாரத்தில், ஓர் திருப்பணியாளனின் வாழ்வு எவ்வாறு அமைய வேண்டுமென பவுல் தீமோத்தேயுவிடம் கூறிநிற்கிறார். வீண்பேச்சிலிருந்து விலகுபவராகவும், ஓர் மனைவியை உடையவராகவும், சிறந்த அறவாழ்வு உள்ளவராகவும், மற்றவர்களால் குற்றப்படுத்தப்படாதவராகவும் இவர் இருக்க வேண்டிய கருத்து வலியுறுத்தப்படுகின்றது.

• யோவான் 21:15-18 வரையுள்ள பகுதியில், உயிர்த்தெழுந்த ஆண்டவர் பேதுருவைப் பார்த்து, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்ற கேள்வி கேட்டப்போது பேதுரு, “நான் உம்மை நேசிக்கின்றேன் என்பதை நீ அறிவாய்” என்று பதிலளிக்கின்றார். அப்பொழுது ஆண்டவர் அவனை நோக்கி, “என் ஆடுகளை நீ மேய்ப்பாயாக” என்ற உத்தரவாதத்தைக் கொடுக்கிறார். எனவே, ஒரு திருப்பணியாளன் மந்தையை மேய்க்கும் உத்தரவாதத்தை உடையவன் ஆகின்றான். எனவே, தனது திருப்பணி ஒரு வேலையாக சுமையாக அல்லாமல் அது கிறிஸ்துவிடம் கொண்டுள்ள ஓர் அன்பின் வெளிப்பாடாக காணப்படுகின்றது.

• இன்று சில சந்தர்ப்பங்களில் சீடத்துவம் கிறிஸ்தவத்தாலும், சீடத்துவம் குருத்துவத்தாலும் மறைக்கப்படுகின்றன. குருத்துவத்தை ஓர் சீடத்துவத்தின் நிறைவாக நாங்கள் பார்க்க அழைக்கப்படுகின்றோம். எனவே, சமூகத்தில் மாற்றங்களை உண்டுபண்ணும் திருப்பணியாளர்களாக மாறுவோமாக.

ஆக்கம் : அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்