உவமைகள்

உவமைகள் குறித்த பின்னணி

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இறையாளுகைக் குறித்து போதிப்பதற்காக இவ்வுலகிற்கு வருகைத் தந்தார் (மாற்கு 1:14-15). இறையாளுகையின் தலைவராக கடவுளும் அதன் பறைசாற்றுபவராக இயேசுகிறிஸ்துவும் காணப்படுகின்றார். இறையாளுகையின் பின்னணியைக் குறித்து நாம் உற்று
நோக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் நமக்கு ஓர் அரசன் வேண்டும் என இறைவாக்கினரான சாமுவேலிடம் முறையிட்டனர் (1 சாமுவேல் 8). ஆரம்பத்தில் சாமுவேல் மறுப்புத் தெரிவிக்கவே
பின்னர் மக்களின் கடினத்தன்மையின் காரணமாக அரசனை நியமித்தார். அரசாட்சிகளின் விளைவாக இஸ்ரவேல் அரசு வட அரசு என்றும், தென் அரசு என்றும் கி.மு. 922ல் பிளவடைந்தது. பின்னர், வட அரசு கி.மு. 721ல் அசீரியரால் அழிக்கப்பட்டது. இதன்பின்னர், தென் அரசு கி.மு.586ல் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது.

இவ்வாறாக, மனித அரசின்வீழ்ச்சியின் பின்னர், கடவுள் தனது மக்களை தானே ஆளப்போவதாக கூறுகின்றார். இதன் பின்னணியே இறையாளுகை என அழைக்கின்றோம். மேலும், கி.பி.70ம் ஆண்டில் வெல்பசியன் மகனான தீத்துஸ் என்பவரால் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டது. மக்கள் தமது நம்பிக்கையை ஆலயத்தின்மீதும் எருசலேம் நகரத்தின்மீதும் வைத்திருந்தனர். இதன் பின்னணியிலேயே
இயேசுவின் மரணத்தையடுத்து மாற்கு நற்செய்தியாளர் கடவுளின் அரசின்மீது நம்பிக்கை வையுங்கள் என இயேசு போதித்த இறையரசு, இறையாளுகை பற்றிய போதனையை ஞாபகப்படுத்துகின்றார்.

ஆண்டவர் இயேசு இறையரசை குறித்த போதனைகளை மக்களுக்கு போதிப்பதற்காக உவமைகள், உருவகங்கள், மாதிரிக்கதைகள், நாட்டிய உவமைகள் போன்ற முறைமைகளை
கையாண் டார். இதில் உருவகம் எனும்போது ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள் அனுப்புவது போல, நான் உங்களை உலகிற்குள் அனுப்புகிறேன். மேலும், மாதிரிக்கதைகள் என்பதற்குள் நல்ல
சமாரியன் கதை (லூக்கா 10:25-37), காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு, காணமற்போன மகன் (லூக்கா 15:1-32) போன்றவைகள் அடங்கும். நாட்டிய உவமைகளுக்குள்
பாதங்களைக் கழுவுதல் (யோவான் 13:1-10), திருவிருந்து (1 கொரிந்தியர் 11:25) போன்றவைகள் அடங்கும்.