15 ஆகஸ்ட் 2022
சுதந்திர தினம்

Participatory Decision making
பங்குபெறும் முறை


லூக்கா 20:20-26

• ஆசிய நாடுகள் அனைத்தும் ஏதோவொரு காலனித்துவ ஆட்சியின் கீழ் பல கொடுமைகளை அனுபவித்தனர். குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய நாடுகளுக்கு கீழ் 400 வருடங்களுக்கு மேல் பல துன்பங்களை அனுபவித்தனர். இதற்கூடாக தன்னிறைவு விவசாயத்தை அழித்து ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்தை உருவாக்கினர். மேலும், பிளவுப்பட்ட கிறிஸ்தவத்தை எமது தேசத்தில் விதைத்தனர். சுயமொழிகளில் இறைவனை வழிபடுவதைத் தவிர்த்து மேலைத்தேய கலாசாரத்தை பல வழிகளில் அறிமுகப்படுத்தினர்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தில் யாத்திராகமம் அல்லது விடுதலைப்பயணம் 18:13-27 மோசேயின் மாமாவாகிய எத்திரோ மோசேயை நோக்கி, நீர் தனியாக சுமைகளை சுமக்க வேண்டாம். மாறாக, உன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்காக மக்களை குழுக்களாக பிரித்து அவர்கள் பொறுப்பை ஒவ்வொருவரிடத்தில் கையளிக்குமாறு கேட்கின்றார். இதுவோர், பங்குதாரர் அணுகுமுறை ஆகும். இத்தகையே அணுகுமுறையே ஜனநாயக நாட்டில் அவசியமானதாகும். ஆனால், இன்று சர்வாதிகார ஆட்சிமுறையினால் பலர் அடிமைத்தனத்துக்குள் உள்வாங்கப்படுகின்றனர்.

• திருப்பாடல் அல்லது சங்கீதம் 2க்குள் வரும்போது, அங்கே தாவீது தன்னை அச்சுறுத்தும் அனைத்து மக்களிடமிருந்தும் பாதுகாத்து கொள்ளுமாறு கடவுளை மன்றாடுகின்றார். இன்று நாம் பேரளவில் சுதந்திரங்களை பெற்றிருக்கிற போதிலும், எமது தேசங்கள் இன்னமும் பல அடிமைத்தனங்களால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக, பொருளாதார ரீதியில் இன்னமும் காலனித்துவ கொள்கைகள் எம்மை சிறைப்பிடித்துள்ளன. எமது கலாசாரங்களையும் அவைகள் சிறைப்பிடித்துள்ளன.

• திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 15:22-29 இப்பகுதியில் பவுலின் தூதுப்பணி பயணத்தை நாம் பார்க்கின்றோம். இப்பயணம் ஓர் விடுதலை அளிக்கும் பணியாகும். பல இடங்களில் பல்வேறுப்பட்ட விடுதலை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனவே, நற்செய்தி மக்களை அடிமைப்படுத்தாமல் அடிமைத்தனத்திலுள்ள மக்களை விடுதலை அளிக்க எம்மை அழைக்கின்றது.

• நற்செய்திபகுதியில் லூக்கா 20:20-26 ஆண்டவர் இயேசுவை குற்றம் பிடிக்கும் வகையில் இராயனுக்கு வரி செலுத்துவது அவசியமானதா என கேள்வி எழுப்புகின்றனர். இங்கு இயேசு உரோம அதிகாரத்தை விமர்சித்த போதிலும், ஆட்சியின் கொள்கைக்கு கட்டுப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். எனினும், அவர் அனைத்து அதிகாரங்களும் கடவுளிடமிருந்தே வருகின்றன என்பதில் உறுதியாயிருந்தார். எனவே, நாம் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. நாம் அதிகாரங்களுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் போதித்தார். எனினும், இன்று காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்ற நாங்கள் எமது சொந்த நாடுகளில் வாழும் மக்களை எவ்வாறு அதிகாரங்களால் துன்பப்படுகின்றோம் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். திருச்சபையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மேலும், இஸ்ரவேல் மக்கள் சுதந்திரத்தை பெற்ற போதிலும் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி ஏனைய தேசங்களை ஒடுக்கியதையும் நாம் மறந்து விடக்கூடாது..