16 ஜூலை 2023

கடவுளின் மக்கள் : கிறிஸ்துவின் பிரதிநிதிகள்

மாற்கு 6:7-13

•          இஸ்ராயேல் மக்கள் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டனர். தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிறருக்கு இறைவார்த்தையை அறிவிக்கும் தூதுவர்களாக உலகுக்குள் அனுப்பப்பட்டனர் (ஏசாயா 49:6). இறைவன் ஆபிரகாமை பார்த்து, “நீ உன் இனத்தையும், நாட்டையும், வீட்டையும் விட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு போ’’ எனக் கூறி அவரை ஆசீர்வதித்தார். ‘’இதோ உன்னிமித்தம் பூமியிலுள்ள மக்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” எனக் கூறிநின்றார் (தொடக்கநூல் – ஆதியாகமம் 12:1-3). எனவே, இறைமக்களின் அழைப்பிலும் ஆசீர்வாதத்திலும் பொறுப்பும் உத்தரவாதமும் காணப்படுகின்றது.

•          யோசுவா 1:1-9 வரையுள்ள பகுதியில், மோசேயின் மரணத்தின் பின்னர் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பொறுப்பு யோசுவாவிடம் கையளிக்கப்படுகின்றது. இங்கே இஸ்ராயேலரை தனிமையிலே வழிநடத்த முடியாமல் யோசுவா பயமுற்ற வேளையில் இறைவன் அவரை நோக்கி, “நீ பலங்கொண்டு திடனமனதாயிரு” என உட்சாகப்படுத்துகின்றார். எனவே, கடவுளின் திருப்பணியில் கடவுளின் மக்களாக அழைக்கப்பட்டிருக்கும் நாம் ஒருவரையொருவர் உட்சாகப்படுத்துதல் மிக அவசியமாகின்றது.

•          திருப்பாடல் – சங்கீதம் 18ல் ஆசிரியர், கடவுளே தனது அடைக்கலம், பாறை என்று அறிக்கையிடுகிறார். இதற்கூடாக திருப்பணியில் இறைவனில் தங்கியுள்ள தன்மையை நாம் காணலாம். இதனையே, மாற்கு 6ம் அதிகாரத்தில் இயேசு தமது சீடர்களை பணிக்காக அனுப்பும்போது, நீங்கள் எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றார். இறைவனில் முழுமையான நம்பிக்கையை வையுங்கள் என அறிவுரை கூறுவதும் இதன் பின்னணியிலிருந்தே எழுகின்றது.

•          2 கொரிந்தியர் 5ம் அதிகாரத்திலிருந்து நாம் பார்க்கும்போது, கிறிஸ்து இவ்வுலகில் கடவுளுடன் நம்மை ஒப்புரவாக்குகின்றார். அதாவது, இவ் ஒப்புரவாகுதல் என்பது ஒரு பிரதானமான தூதுப்பணி ஆகும். சிறப்பாக, நற்செய்திபணியை மாத்திரம் தூதுப்பணி எனக் கருதும் நாங்கள் நீதிப்பணி, அமைதிப்பணி, ஒப்புரவாகுதல்பணி, ஒருமைப்பாட்டுபணி, அறப்பணி, சமூகப்பணி போன்ற பணிகளையும் தூதுப்பணியின் ஒரு அங்கமாக கருதிக் கொள்ளுதல் வேண்டும். எனவே, கடவுளின் பிரதிநிதிகளாக நாம் அனைவரும் எம்மை இவ்வுலகிற்கு காண்பித்துக் கொள்ளுதல் அவசியமாகின்றது.

•          எமது திருப்பணி மாதிரியில் நாம் கடவுளின் மக்களாகவும், கிறிஸ்துவின் பிரதிநிதிகளாகவும் இன்றைய பல்சமயச் சூழலில் வாழுதல் மிக அவசியமாகின்றது. எமது வாழ்வு பிறருக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகிறோம். யோவான் 13:34-35ல், நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். அன்பாயிருப்பதன் ஊடாகவே நீங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை உலகத்தார் கண்டுகொள்ளுவார்கள். எனவே, கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக நாம் எமது அன்பை பிறருடன் பகிர்ந்து கொள்ளுவோமாக.

ஆக்கம் : அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்