17 ஜுலை 2022

கடவுளின் மக்கள் : இயேசுவின் மந்தை

People of God: Flock of Christ

யோவான் 10:1-6

•            ஆண்டவர் இயேசுவுக்கு பல உருவகங்கள் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பாக, ஆயத்துவ உருவகமாகிய நல்ல மேய்ப்பன் என்ற உருவகம் யோவான் 10:1-6ல் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பாக, இஸ்ரவேல் மக்களின் வட அரசு அசீரியர்களாலும், தென் அரசு பாபிலோனியர்களாலும் அழிக்கப்பட்ட பின்னர் மக்கள் அரசு இன்றி அரசன் இன்றி காணப்பட்ட வேளையில் நல்ல மேய்ப்பன் என்ற வாக்குறுதி கொடுக்கப்படுகின்றது. ஏனெனில், மேய்ப்பர்கள் இஸ்ரவேல் மக்களை சரிவர மேய்க்கவில்லை (எசேக்கியேல் 34:10).

•            நானே என்ற பதம் கடவுளை அல்லது கடவுளால் அனுப்பப்படும் மேசியாவை குறித்து குறிப்பிடப்படுகின்றது (விடுதலைப்பயணம் 3:14). மேலும், ஆண்டவர் இயேசு ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாக எங்கள் அனைவரையும் கூட்டு இணைக்கின்றார். இதனையே, முதலாம் உடன்படிக்கையில் 35:1-15ம் கடவுள் யாக்கோபுவை அந்த உன்னத உறவுக்குள் அழைக்கின்றார். அவனுக்கு தன்னை வெளிப்படுத்தி தன்னுடைய மந்தைக்குள் அவனைக் கொண்டுவருகின்றார்.

•            திருப்பாடல் அல்லது சங்கீதம் 95ல் கடவுள் தமது மக்களை மந்தைகளாக உரிமை பாராட்டுகின்றார். மேலும், அவர்கள் கடவுளே படைப்பாளன் என அறிக்கையிட்டு அவரை புகழ்பாடும் சமூகமாக மாறவேண்டும் என எதிர்ப்பார்க்கின்றார். அத்துடன், இஸ்ரயேல் மக்கள் தவறு செய்த போதிலும் அவர்களை மன்னித்து, தன்னுடைய மந்தைகளாக ஏற்றுக் கொண்டமை மேய்ப்பராகிய கடவுளின் பேரன்பைக் காண்பிக்கின்றது.

•            புதிய ஏற்பாட்டு வாசகத்தில் அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 16:11-15 இப்பகுதியில் பரிசுத்த பவுல் புதிய மந்தைகளுக்காக தூதுப்பணியாளனாக பிரயாணப்பட்டு கிறிஸ்துவுக்காக அவர்களை ஒன்று சேர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்துகின்றார். மேலும், அப்பணியில் தான் அனுபவிக்கும் துன்பங்களையும் குறித்து குறிப்பிடுகின்றார்.

•            எனவே, இன்றைய உலகில் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையை நாம் பல துண்டல்களாக பிளவுபடுத்தி உள்ளோம். எனவே, நாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் வருவதில் எமக்கு பல சவால்கள் காணப்படுகின்றன. ஒரே பற்றுறுதியை அறிக்கையிடுகின்றோம். ஒரே திருமுழுக்கை பெறுகின்றோம். ஒரே பாத்திரத்தில் திருவிருந்து பெறுகின்றோம். ஆனால், ஒரே மேய்ப்பனாகிய கிறிஸ்துவின் குடைக்குள் வருவதற்கு இன்னமும் தாமதப்படுகின்றோம்.