g11f0faf47fccbe379458bc4bbe5728af3696c0b08b7cac7e717a4c909d21aef8cfa2383447706311bee47b00671bc70c_1280-70198.jpg

மத்தேயு 5:13-16

•             இஸ்ராயேல் மக்கள் கடவுளின் மக்களாகவும் கடவுளைத் தங்கள் ஆண்டவராகவும் சீனாய் மலை உடன்படிக்கையின்போது ஒரு சமூகமாக வருகின்றனர். இதனை விடுதலைப்பயணம் 19:1-10ல் நாம் பார்க்கிறோம். உடன்படிக்கை உறவில் நிலைத்திருக்கும் மக்கள் “இதோ நீங்கள் எனது ஜனமாகவும் நான் உங்கள் தெய்வமாகவும் இருப்பேன்” என்ற ஆண்டவரின் வாக்கை நினைந்து வாழ்ந்து வந்தனர். இதனை அடிக்கடி நீதித்தலைவர்களும் இறைவாக்கினர்களும் இஸ்ராயேலர் மக்களுக்கு ஞாபகமூட்டி வந்தனர். யோசுவா 24:15ல், “நானும் என் வீட்டாருமோவென்றால் கடவுளையே சேவிப்போம்” என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். இந்த புதிய உடன்படிக்கை உறவுக்குள் வருமாறு எரேமியா 31:31-33 வரையுள்ள பகுதியும் எம்மை அழைத்து நிற்கின்றது.

•             புதிய இஸ்ரவேலராகிய மக்கள் கடவுளின் மக்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அழைப்பை நாம் மத்தேயு 5:13-16லே நாம் பார்க்கலாம். புதிய இஸ்ரவேலரைப் போன்றே பழைய இஸ்ரவேலர்களுக்கும் அழைப்போடே கூடிய பொறுப்புணர்வு கொடுக்கப்பட்டிருந்தது. ஏசாயா 49:1-7ல், பிறரை இறைவனிடத்தில் கொண்டுவரும் வகையில் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். தொடக்கநூல் 12:1-3ல், இறைவன் ஆபிரகாமை ஆசீர்வதித்ததன் நோக்கம் அவர் ஏனைய மக்களுக்கு ஆசியாக அமைய வேண்டும் என்பதே ஆகும். இதன்படி, இஸ்ராயேலர் மக்களும் இருளில் இருக்கும் மக்களை ஒளியினிடத்திற்கு கொண்டு வருவதே அவர்களின் பிரதான அழைப்பு என ஏசாயா 49:6ல் நாம் காண்கின்றோம்.

•             இயேசுவின் மலைப்பொழிவு பிரசங்கத்தில் புதிய இஸ்ராயேலர்கள் புதிய கட்டளைப் பிரமாணங்களுடன் வாழ அழைக்கப்பட்டனர். மத்தேயு 5:13-16ல் உப்பு, ஒளி போன்ற இரண்டு உருவகங்கள் காண்பிக்கப்படுகின்றன. இவை இரண்டும் சிறியவைகளாகக் காணப்பட்டப்போதிலும் இவற்றின் பயன்பாடுகள் பெரிதளவானவைகள். கடவுளின் மக்களும் சமூகத்தில் இப்பேர்ப்பட்ட பண்புள்ளவர்ளாக வாழ அழைக்கப்படுகின்றனர். உப்பு தன்னை இழந்து மற்றவர்களுக்கு ருசி ஊட்டுவதைப் போன்று, ஒளி தன்னை உருகவைத்து மக்களுக்கு வெளிச்சம் ஊட்டுகின்றதை போன்று தங்களை இழந்து மக்களை வாழ வைப்பதே ஒவ்வொரு புதிய இஸ்ராயேலனுடைய பண்புகள் ஆகும். மேலும், உப்பு உணவுப் பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு உதவுகின்றது. அதுபோன்று புதிய இஸ்ராயேலரும் சமூகத்தில் நிலவுகின்ற ஒவ்வொரு தீமைகளிலிருந்தும் மக்களைப் பாதுகாத்து நற்செய்தியின் விழுமியத்துக்குள் அவர்களை வாழ வைப்பது ஒவ்வொரு புதிய இஸ்ராயேலரின் பணியாகும். மேலும், உப்பும் ஒளியும் பரபரப்பற்ற முறையில் தமது பணியை ஆற்றுவதைப்போல கடவுளின் மக்களும் பரபரபற்ற முறையில் பிறர் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது வேண்டப்படுகின்ற உண்மையாகும். மேலும், இயேசுவின் மலைப்பொழிவு பிரசங்கத்தில் உப்பு, ஒளி ஆகியவைகள் எல்லைகளைக் கடந்தவைகள். குறிப்பாக, ஒளி எல்லோருடனும் தன்னை பகிர்ந்துக் கொள்வதைப் போல நாமும் எல்லைக் கடந்த திருப்பணியை ஆற்றுவது அவசியமாகும். எமது அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, புரிந்துணர்வு போன்றவைகள் எமது குழு உணர்வுக்குள்ளும் திருச்சபைப் பிரிவு உணர்வுக்குள்ளும் அடக்கி வைக்கப்படாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மேலானதொன்றாகும்.

•             இஸ்ராயேல் மக்கள் தம்முடைய பணியை சரிவர ஆற்றாத பட்சத்தில் கடவுள் ஏனையவர்களை தமது திருப்பணியை ஆற்றுமாறு அழைத்ததை நாம் பார்க்கிறோம். ஏசாயா 45:1ல், பாரசீக அரசனாகிய சைரஸ் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்த இஸ்ராயேலர்களை மீட்டு உதவியது போன்று புதிய இஸ்ராயேலர்களும் தமது பணியை சரிவர ஆற்றாத பட்சத்தில் அவர்களை இறைவன் கைவிட்டு ஏனையவர்களை தமது திருப்பணியை நிறைவேற்ற பயன்படுத்துவது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.