Plurality: Common Humanity and Faith Sharing

# திருமறை பகுதிகள்

யோனா 4: 1 – 11

அப்போஸ்தலர் 8 :26 – 40

மத்தேயு 22: 1 – 14

 # உட்பகுமுன்

ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய நண்பர்கள், பிற சமய நண்பர்களுக்கு பிரியாணி வழங்குவதும்….பொங்கல் திருநாளன்று, பிற சமயத்து நட்பு வட்டங்களுக்கு, இந்து சமயத்தினர் சர்க்கரை பொங்கல் தருவதும்…கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சியை,  பிற சமயத்து உறவுகளுக்கு கேக் தந்து கொண்டாடுவதும் .. இறை பற்றாளர்களின் பண்பும், குணமும் ஆகும். ஒருமைப்பாட்டில் தான் இறைவன் இருக்கின்றார் என்பதை இந்த நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன…

Rev. Augusty Gnana Gandhi

> புயல்,மழை,வெள்ளம், நிலச்சரிவு ..போன்ற இயற்கை பேரிடர் நிகழும் பொழுதெல்லாம் ஆலயங்களும், மசூதிகளும், கோவில்களும் தங்கள் கதவுகளை திறந்து  கொள்கின்றன.. அனைத்து மக்களையும் உள்ளடக்கிய இல்லங்களாகவே மாறிவிடுகின்றன…

> நிறங்கள் ஒன்றிணைந்து வானவில் என்ற காட்சியை விண்ணும், மண்ணும் இணைந்து உலகிற்கு காண்பித்துக் கொண்டே இருக்கிறது அது ஒற்றுமையின் சின்னம், இறைவன் மனுக் குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ளும் இறைச் செய்தியும் அதுதான்…

> “ஒவ்வொரு மனிதனும் என் நண்பர், ஒவ்வொரு மனிதனும் சகோதரர் காரணம் அவரும் மனிதர்”என்ற ரோமன் கத்தோலிக்க பாடல் ஒன்று உள்ளது… பாடிப் பார்ப்பதற்கு அல்ல பழகி பார்ப்பதற்கு…

நாம் வாழுகின்ற பன்மை சூழலில், சமயங்களை தாண்டிய, மனுக் குடும்பத்தின் பண்பும், பற்றுறுதியும், இந்த உலகம் அமைதியோடு வாழ்வதற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமய சகிப்புத்தன்மைக்கும், சமூக மாற்றத்திற்கும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. நாமும் அதன் ஒரு துளியாக இருக்கின்றோம்…

1. நினிவே மக்களின் பண்பும், பற்றுறுதியும் “இறைவனை மனம் மாறச் செய்தது.”. (யோனா 4: 1 – 11)

தாங்கள் தான் “இறை மக்கள்” என்று நினைத்துக் கொண்டிருந்த யூதர்களுக்கு இறைவன் வகுப்படுகின்றார்.. நான் அனைத்துலகுக்கும் கடவுள். அனைத்து உலகின் மக்களும் என் மக்களே என்ற சாராம்சத்தை யோனாவின் நூல் உலகிற்கு காட்டுகின்றது…

இறைவன் நினிவே மனுக் குடும்பத்திற்கு, யோனா தீர்க்கன் வழியாக எச்சரிக்கை விடுக்கின்றார். அவர்களின் பொல்லாத வழிகளை விட்டு மனம் திரும்பும் படி செய்தி அனுப்புகின்றார். யூதர் அல்லாத நினிவே மக்களை நல்வழிப்படுத்த கடவுளே செயலில் இறங்குகின்றார்…

40 நாட்களுக்குள் நினிவே அழிக்கப்படும், என்ற இறை செய்தியை தீர்க்கர் வழியாக கேட்ட நினிவே மக்கள், யோனாவை யூத சமயம் சார்ந்த ஒரு மனிதராக பார்க்காமல், “இறை தூதுவராக” (Gods messenger) பார்த்தார்கள். அது அவர்களின் பண்பை வெளிப்படுத்துகிறது…

தீர்க்க உரைத்த செய்தியை வேற்று சமயத்தின் அருளுரையாக கருதாமல் அது தங்களுக்கு கிடைக்கப் பட்ட ஒரு “இறைச் செய்தி” (Word of God) என்று அதை ஏற்றுக் கொண்டார்கள்.  இது அவர்கள் சமயப் பற்றாளர்கள் என்பதை காட்டுகிறது….

யோனா தீர்க்கர் வழியாக தங்களுக்கு தரப்பட்ட செய்தி, சமய மாற்றத்திற்கான செய்தியல்ல சமூக மாற்றத்திற்கான ( Not for Religious conversion but for social transformation) செய்தி என்று அவர்கள் தெளிவாக அதை ஏற்றுக் கொண்டார்கள்…

கிடைத்த 40 நாட்களில் ஒட்டுமொத்த நினிவே சமூகம், பெரியோர்களும், சிறியவர்களும், ஆண்களும், பெண்களும்,மிருகங்களும், அரசர்களும், (3: 1 – 10) :சமய தலைவர்களும் ஒன்றிணைந்து இரட்டு உடுத்தி,  சாம்பலில் உட்கார்ந்து தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பினார்கள்…

நினிவே மக்கள் மனம் மாறின செய்தி இறைவனை எட்டியது. அவர் நினிவே மக்களை அளிப்பேன் என்ற தம் நிலைப்பாட்டை இறைவன் மாற்றிக்கொண்டார். இறைவன் மனம் வருந்தினார் அதை செய்யாமல் இருந்தார் (3:10).

யோனா தீர்க்கன் 40 ஆவது நாளில், நினிவே அழிவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அது அழியவில்லை. ஆண்டவரிடம் புலம்புகிறார்.  தன் பண்பை இழக்கின்றார்…..

இறைவன் நினிவே மக்களின் ஆழமான பற்றுறுதியையும், அவர்களின் பண்பையும், பரந்த மனப்பான்மையையும், தெளிவான புரிதலையும், சமூக மன மாற்றத்தையும் ( Corporate reconciliation) ஆண்டவர் கண்டு நினிவே மக்களை அழிப்பேன் என்ற “இறைவனே மனம் மாறுகின்றார்”…..

மானுட பண்பும், ஆழமான பற்றுறுதியும் பன்மை தன்மையில் தான் வெளிப்படும். பன்மையை கொண்டாடுவோம்……

2. ⁠ அன்னகரின் பண்பும், பற்றுறுதியும் “சமய நல்லிணக்கத்திற்கு வழி வகுத்தது”. (அப்போஸ்தலர் 8 :26 – 40)

நாம் வாழுகின்ற உலகில் ஆண், பெண் என்ற வட்டத்தை தாண்டி “மூன்றாம் பாலினமும்” ( Third gender) உண்டு என்பதை திருச்சபை நினைவில் கொள்ள வேண்டும். இறைவனின் சாயல் அவர்களிலும் உண்டு என்பதை உணர வேண்டும். அன்னகர்கள் இறை பணியாளர்களாக பணியாற்றியதையும் நாம் மறவாமல் நினைத்திடல் வேண்டும்…

அன்னகர்களாக பிறந்தவர்களும் உண்டு, அன்னகர்களாக மாற்றப்பட்டவர்களும் உண்டு என்பதை திருமறையை சுவாசித்தவர்களுக்கு நன்கு விளங்கும்….

எத்தியோப்பிய நாட்டில் இருந்து ஒரு மூன்றாம் பாலினம் சார்ந்த மந்திரி அவர்கள் எருசலேமுக்கு வருகிறார். திரும்பிச் செல்லும் பொழுது ஏசாயா நூலை வாசிக்கின்றார்….

பிலிப்பு என்கின்ற இறை மனிதரோடு கடவுள் பேசுகின்றார். நீ எழுந்து எருசலேமில் இருந்து காசா பட்டினத்திற்கு போகிற வனாந்தரமாக போ (8:26) என்று பணிக்கின்றார். …

ஆண்டவர் பிலிப்பு விடம் நீ யாரைப் பார்க்க செல்கிறாய் என்று சொல்லவில்லை, ஆனால் அவர் புறப்பட்டு செல்கின்றார். அவர் சந்தித்த மனிதர், ஒரு “மூன்றாம் பாலினத்தவர்” மேலும் பிற சமயத்தவர் என்பதை அறிந்து கொள்கிறார். 

இறைவன் தெரிந்து கொண்ட எத்தியோப்பிய நாட்டு அண்ணகரை, பிற சமயத்தை சார்ந்தவரை,பிலிப்பு முழு மனதோடு ஏற்றுக்கொள்கின்றார். ஏசாயா நூலை வாசித்து காட்டும்படியாக ரதத்தோடு அவரும் சேர்ந்து ஓடுகின்றார். ….

ஒரு கட்டத்தில் அண்ணகர் ரதத்தை நிறுத்த சொல்லி, தன்னோடு உட்காரும்படியாக பிலிப்பை வேண்டிக் கொள்கிறார். ஒரு யூதராகிய பிலிப்பு, பிற மதத்தைச் சார்ந்த எத்தியோப்பிய நாட்டு அன்னகர்கரோடு சமய உரையாடலை மேற்கொள்கின்றார். அந்த உரையாடலில் இறுதியில், சகிப்புத்தன்மையும், சமய பொறுமையும், நல்லிணக்கமும் உண்டாகிறது. …

பிலிப்பு எனும்  யூதர், சுத்த ரத்தமாக கருதுகின்ற யூதர், யூதர் அல்லாதவர்களை ஏற்றுக் கொள்ளாத யூதர் அன்னகரோடு சரிக்கு சமமாக உட்காருகின்றார். அவருக்கு திருமுழுக்கும் கொடுக்கின்றார்.  இதுதான் இறைச்செய்தி…..

இறைவன் எப்போதும் சமய நல்லிணக்கத்தை பேணுகின்றவர், அதை விரும்புகின்றவர், சமய நல்லிணக்க தூதுவராக தாமே செயல்படுகின்றவர்.

பிலிப்புவைப்போன்று திருச்சபையை அழைக்கின்றார். அன்னகர்களுக்கு நற்செய்தி சொல்வதற்கு மட்டுமல்ல, மூன்றாம் பாலினமாகிய அன்னகர்களோடு , இயேசுவின் கூற்றின்படி பரலோக ராஜ்ஜியத்தில் ஏற்கனவே இடம் பெற்ற அன்னகர்களோடு, பிற சமயத்தினரோடு இணைந்து உறவாட , இணைந்து ஒரு குடும்பமாக வாழ பெற்றோராம் கடவுள் திருச்சபையாகிய நம்மை அழைக்கின்றார்…..

பிலிப்பு முழு மனதோடு அதை நிறைவேற்றினார். இறை விருப்பத்தை நிறைவேற்றுகின்றவர்கள் மட்டுமே இறை மக்களாக, இறை பணியாளர்களாக வாழ முடியும். திருச்சபையாக வாழ்ந்து காட்டுவோம்…  சமய நல்லிணக்கத்திற்கு அடையாளமாக வாழ்வோம் எத்தியோப்பிய நாட்டின் அண்ணகரை போல….

3. ஏழைகளின் பண்பும் பற்றுறுதியும், “சமூக மாற்றத்திற்கு “வித்திட்டது. (மத்தேயு 22: 1 – 14)

நற்செய்தி பகுதியில் இயேசு ஒரு உவமையை தம் சீடர்களுக்கும், மக்களுக்கும் கூறுகின்றார். அது இறை அரசை பற்றியது…

ஒரு அரசன் தன் மகனுக்கு திருமணம் செய்கின்றார். திருமண விருந்துக்கு தனக்கு சமமாக உள்ளவர்கள், அந்தஸ்திற்கு நிகரானவர்கள், தனக்கு மேலே உள்ள அனைத்து மக்களையும் விருந்துக்கு அழைக்கின்றார்….

இந்த விருந்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் எவர்கள் என்றால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகள், வறுமையில் வாழ்பவர்கள், வீதிகளில் தஞ்சம் அடைந்தவர்கள், வழிப்போக்கர்கள் யாசிக்கின்றவர்கள்….

சமூகத்தில் உள்ள படிநிலைகளையும், வர்க்க வேறுபாடுகளையும், உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஏழை – பணக்காரன் என்ற சமனற்ற நிலைகளையும் உவமை வழியாக இயேசு வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றார்…

திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அரச விருந்தினை நிராகரிக்கின்றார்கள். அழைக்க சென்றவனை கொலையும் செய்து விடுகிறார்கள். தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற மனிதரிடத்தில் உள்ள தீயபண்புகளையும், குணங்களையும் ஆண்டவர் இயேசு தோலுரித்துக் காட்டுகின்றார்….

அதே சமயத்தில் அரசன் இந்தப் படிநிலைகளை உணர்ந்து, தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பண்பாடற்ற மனிதர்களை புறக்கணித்து, புறந்தள்ளி, ஒதுக்கிவிட்டு, அரச விருந்திற்கு ஏற்றோர் ஏழைகள் தான் என்று கருத்தியலை உள்வாங்கிக் கொள்கின்றார். மன மாற்றம் அடைகின்றார்….

புதிய விருந்தினர்களுக்கு சொல்லப்போனால் புதிய சொந்தங்களுக்கு, விருந்தினருக்கு சமமான மதிப்பும், மரியாதையும், ஆடையும், விருந்தோம்பலும், சம பந்தியும் வழங்கப்படுகிறது….

இந்த சமத்துவ பந்தியில் தங்களை இணைத்துக் கொள்ளாத மனிதர்களுக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது….

ஏழைகள் ஆக்கபட்டோர் பண்புகள் மிகவும் உயர்ந்தவை. அதுவே சமூகத்திற்கு அவசியமானவை என்பதை இயேசுவின் உவமை எடுத்துக்காட்டுகிறது…..

ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், மரியாதை செலுத்தும் விதமும், பாசத்தோடு பழகும் மாண்பும், சகிப்புத்தன்மையும், விட்டுக்கொடுத்தலும், தாராள மனப்பான்மையும், சகோதரத்துவமும், நட்பு உணர்வும், கூட்டு வாழ்வும், மன்னித்தலும், அன்பும், எளிமையும்… ஏழைகளுக்கு கடவுள் தந்த வரம்….

இறையரசு ஏழைகளுக்கு உரியது என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து எடுத்துக்காட்டுகின்றார். ….

நாம் வாழுகின்ற சமுதாயத்தில் பன்மை சூழலில், விளிம்பு நிலையில் வாழும் ஏழைகளோடு ஏழையாக ஆண்டவர் வாழுகின்றார். இயேசு தரித்திரர் ஆனார் என்று வாசிக்கின்ற நாம் அவர் ஏழையானார் என்று புரிந்து கொள்வோம். அந்த ஏழையோடு இறைவன் வாழுகின்றார். இறைவன் எங்கு இருக்கிறாரோ அங்கு இறை மக்களும், இறை பணியாளர்களும் இருக்கும் பொழுது உலகில் சமத்துவம் உருவாகும், சமூக மாற்றம் நடைபெறும்.  திருச்சபை சமூக மாற்றத்திற்கான செயல்களில் இணைந்து முன்னேறுவோம்….

# நிறைவாக…..

தாசரே இத்தரணியை அன்பாய்..
இறைவனுக்கு சொந்தமாக்குவோம்…
நேசமாய் இயேசுவை கூறுவோம்…
இயேசுவை காண்பிப்போம்…
மா இருள் நீக்குவோம்…
வெளிச்சம் வீசுவோம்….

நினிவே நாட்டு மக்களின் பண்பும், பற்றுறுதியும் “இறைவனையே மனம் மாற” செய்தது….

அன்னகரின் பண்பும், பற்றுறுதியும் “சமய நல்லிணக்கத்திற்கு” வழி வகுத்தது…..

ஏழைகளின் பண்பும், பற்றுறுதியும் “சமூக மாற்றத்திற்கு” வித்திட்டது….

திருச்சபை ஆகிய நம்முடைய வாழ்வும், பணியும், பண்பும், பற்றுறுதியும் பன்மை சூழலில் இறை சாயலை பிரதிபலிக்கட்டும்….

இறை பண்போடு வாழ்வோம்…

இறை பற்றோடு வளருவோம் …

இறை சாயலாய் மாறுவோம்….

இறைப்பணியில் உங்களோடு

Rev. Augusty Gnana Gandhi,

CSI Trichy Tanjore Diocese.