30 தை 2022

யோவான் 2:13-22

•             கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையும் ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையினாலோ அல்லது செயல்களின் மூலமோ செலுத்துவதையே வழிபாடு என்கிறோம். இவ் வழிபாட்டில் நன்றி செலுத்துதல், கடவுளை துதித்தல், பாவங்களை அறிக்கையிடல், மற்றவர்களுக்காக மன்றாடுதல், எமக்காக மன்றாடுதல் ஆகிய பகுதிகள் பிரதானமானவைகளாக கருதப்படுகின்றன.

•             பழைய ஏற்பாட்டு பகுதியில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திய அடிமைகளாக இருந்த வேளையில் விடுதலையாளராகிய மோசே பார்வோனிடத்தில் சென்று இஸ்ரயேல் மக்களை கடவுளுக்கு பலிசெலுத்த வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுமாறு கேட்கின்றார். ஆனால், பார்வோன் மறுத்து விடுகின்றார். இதன்மூலம், வழிபாடு பாதிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சூழலில் நடைமுறைப்படுத்துவதின் கடினத் தன்மையை நாம் காண்கின்றோம். அவ்வழிபாடு விடுதலை உணர்வுடன் இடம்பெற வேண்டும். திருப்பாடல் 137ல் ஆண்டவரின் பாடலை அந்நியரின் தேசத்தில் பாடுவது எப்படி? என்ற கேள்வியை 137வது திருப்பாடலில் இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவேளையில் இதை உணருகின்றனர். எனினும், அவர்கள் கடவுளின் அனைத்துலக தன்மையை உணர்ந்து கொள்கின்றனர்.

•             புதிய ஏற்பாட்டு பாடத்தில் ஆதித்திருச்சபை மக்கள் உரோம அரசின் அடிமைத் தனத்திற்குள்ளும் துன்புறுத்தலுக்குள்ளும் உட்பட்டிருந்தனர். கி.பி. 64ம் ஆண்டில் நீரோவும், கி.பி. 96ம் ஆண்டில் தொமித்தியனும் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினார்கள். எனினும், திருவெளிப்பாடு அல்லது வெளிப்படுத்தினவிசேஷம் 5:1-14ல் கடவுளை துதிக்கும் சமூகத்தை நாம் காண்கின்றோம்.

•             நற்செய்தி பகுதியில் வழிபாட்டில் காணப்படவேண்டிய தூய்மையைப் பற்றி நாம் பார்க்கின்றோம். ஆலயத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு ஒத்தமை நற்செய்திகளின்படி இயேசுவின் இறுதிக் காலத்தில் நடைபெறுகின்றது. ஆனால், யோவான் நற்செய்தியின்படி அவரது பணிக்காலத்தின் ஆரம்பத்திலேயே நடைப் பெறுகின்றது. இங்கு ஆடு, மாடு விற்பவர்களை இயேசு துரத்துகின்றார். பொதுவாக யூதர்கள் பண்டிகைகளுக்காக எருசலேம் ஆலயத்திற்கு வரும்போது பாவமன்னிப்பின் அடையாளச் சின்னமாக ஆடு, மாடுகள் பலியிடப்படும். எனவே, இவ் ஆடு மாடுகளை விற்பதற்காக எருசலேம் ஆலயத்தில் புற இனத்தவர் வழிபாடு செய்யும் பகுதி பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம், புற இனத்தவர் வழிபடுவதை யூதர்கள் தடுத்தனர். இத்தகைய செயற்பாட்டினால் ஆத்திரமுற்ற இயேசு சவுக்கை எடுத்து இவர்களை துரத்துகின்றார். ஆனால், புறா விற்பவர்களைப் பார்த்து, அவைகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறுகின்றார். ஏனெனில், அவைகள் ஏழைகள் பலியிடுவதற்காக பயன்படுத்தப்படும் காணிக்கைகள் ஆகும். மேலும், நாணயமாற்று பலகை தலைகீழாக புரட்டப்படுகின்றது. ஏனெனில், யூதர்கள் காணிக்கையாக கலிலேயா நாட்டு நாணயத்தையே படைத்தனர். வேற்று நாணயங்கள் கொள்ளப்படுமானால் அது கலிலேயா நாணயத்திற்கு மாற்றப்படும். ஆனால், நாணயமாற்று வீதம் அதிகமாக பின்பற்றப்பட்டது. இதனாலேயே, சமத்துவம் இல்லாத பலகையை ஆண்டவர் இயேசு தலைகீழாக புரட்டி சமத்துவ பலகையாகிய திருவிருந்தை ஏற்படுத்தினார்.

•             எமது வழிபாடு சூழலுக்கு ஏற்றவகையிலும் நீதியை ஏற்படுத்தும் வகையிலும் எல்லோரையும் உள்வாங்கும் வகையிலும் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமையவேண்டும். அவ்வாறு அமையும்போதே நாம் கர்த்தருக்கு துதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை