24 மே 2023

தூய ஆவியருக்கான வாக்குறுதி
யோவான் 14:15-21

கடவுள், மைந்தன், தூய ஆவி ஆகிய திரித்துவக்கடவுளை நாம் நம்புகின்றோம். இங்கு தூய ஆவியரின் வருகையைக் குறித்த முன்னறிவித்தலை இன்றைய நாளில் நாம் நினைந்து கொள்கின்றோம். யோவேல் 2:28-32 வரையுள்ள பகுதியில், கடவுள் ஆண்டவரின் நாளென்று தூய ஆவியை அனைவர்மீதும் ஊற்றுவதாக வாக்குறுதி கொடுக்கின்றார். வயது வேறுபாடின்றி அவரவரின் பிரயோஜனத்திற்கு ஏற்ற வகையில் இவ்வாவியர் வழங்கப்படுகிறார். பழைய ஏற்பாட்டில் எபிரேய மொழியில் நீயூமா என்ற அர்த்தத்துடன் ஆவியர் அறிமுகப்படுத்தப்படுகின்றார். அதாவது காற்று, சுவாசம், மூச்சு போன்ற அர்த்தத்தில் அவர் காணப்படுகின்றார். அவர் படைப்புடனும் தொடக்கநூல் – ஆதியாகமம் 1:1-4, வாழ்வளிப்பவராகவும் (எசேக்கியேல் 37), விடுதலையாளராகவும் (ஏசாயா 61:1-3) ஆகிய பகுதிகளில் நாம் காணலாம்.

திருப்பாடல் – சங்கீதம் 42ல், மான் நீரோடையை வாஞ்சித்து கதறுவதுபோல, தேவனே எங்கள் ஆத்துமா உம்மில் தாகமாயிருக்கின்றது. அதாவது, இறைவனில் நிலைத்திருத்தல் மிக அவசியமாகின்றது.

கலாத்தியர் 5:19-23ல், பவுல் ஆவியின் கனிகளைப் பற்றி பேசுகின்றார். புதிய ஏற்பாட்டில் நீயூமா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்படும் தூய ஆவியர் அவரது கனிகளை பவுல் பட்டியல்படுத்துகிறார். ஒருவர் ஆவியரால் நிரப்பப்பெற்றவராக இருப்பின் அவரிடத்தில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், விசுவாசம், இச்சையடக்கம் ஆகிய பண்புகள் வெளிப்படுத்தப்படும். ஒருவரின் கனியினால் அவர் அடையாளப்படுத்தப்படுவார்.

ஒத்தமை நற்செய்திகள் ஆண்டவர் இயேசு தூய ஆவியால் நிரப்பப்பட்ட முறைகளைக் குறித்து அவரது செயற்பாடுகளைக் குறித்தும் எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. ஆனால், யோவான் நற்செய்தியில் மாத்திரம் தூய ஆவியர் பற்றிய படிப்பினைகள் பொதிந்துள்ளன. யோவான் 4:24ல், தூய ஆவியர் புதிய வழிபாட்டை எதிர்ப்பார்க்கின்றார். யோவான் 7:35-37ல், தூய ஆவியர் வாழ்வளிக்கும் ஊற்று எனக் காட்டப்படுகிறது. யோவான் 14:15,16ல், தூய ஆவியரை சரக்கிளிற் என்ற கிரேக்க மொழியுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. அதாவது, நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு சட்டத்தரணியற்ற சூழலில் ஒருவருக்காக வாதாடுபவராக சரக்கிளிற் அல்லது துணையாளர் காட்டப்படுகின்றார். குறிப்பாக, குரலற்ற மக்களின் குரலாக தூய ஆவியர் இங்கு காட்டப்படுவது நம் எல்லோருக்கும் பொருத்தமானதொன்றாகும்.

தூய ஆவியர் வருகைக்காக காத்திருத்தல் என்பது அவரை ஏற்றுக்கொள்ள ஆயத்தப்படுதலே ஆகும். எனவே, ஆயத்தமாகுதலின் ஊடாக அவரை ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது. மேலும், ஆவியர் ஒருவராக எபேசியர் 4:1-6 ஆகிய வசனங்கள் போதிக்கின்றன. எங்கே ஆவியர் உண்டோ, அங்கே விடுதலை உண்டு என்பது ஆவியரின் இன்னுமொரு பண்பாகும். ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்