திருப்பாடல் 145

அரசராம் கடவுள் போற்றி

நூற்று நாற்பத்தைந்தாம் திருப்பாடல் எபிரேய அகரவரிசையில் அமைந்துள்ள திருப்பாடல்களுள் ஒன்றாகும். ஆனால், இத்திருப்பாடல் பதின்மூன்றாம் கவிக்கு பிறகு “நூன்” எனும் எபிரேய எழுத்தினை முதலெழுத்தாகக் கொண்ட கவி இடம்பெறவில்லை என்பதால் இது அகரவரிசை அமைப்பில் முழுமைத் தன்மையற்றதாக உள்ளது. இந்த “நூன்” என்ற எழுத்தை உடையதாக பதினான்காம் கவி தொடங்கியிருக்குமானால் இலக்கியத்தன்மை இன்னும் சிறப்புடையதாக இருந்திருக்கும்.

இத்திருப்பாடல் கடவுள் ஒன்றிலும் குறைவுபடாமல் எல்லாவற்றிலும் அளவற்றதாக நிறைவான நன்மையருளும் கடவுள் என கடவுளின் ஈகைப்பண்பை முதன்மைப்படுத்தி கடவுளைத் துதித்துப் பாடும் திருப்பாடலாக உள்ளது. இத்திருப்பாடல் யூத திருக்கோவில்களில் காலைநேர வழிபாடுகளில் பாடப்படும் சிறப்பான திருப்பாடலாக உள்ளது. மேலும், எல்லா திருச்சபைகளிலும் திருக்கோவில்களிலும் பயன்படுத்தத்தக்க சிறப்புத்தன்மை உடைய திருப்பாடலாக உள்ளது. இத்திருப்பாடல் திருப்பாடல்களின் தொகுப்பில் தாவீதின் திருப்பாடல் எனப்படுபவற்றின் கடைசி திருப்பாடலாக உள்ளது.

திருப்பாடலின் ஐந்தாம் கவியில் உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன் என்று எழுதப்பட்டுள்ளது. இச்செய்தி ஒவ்வொரு கடவுள் நமக்கருளிய நன்மைகள், அவர் நமக்கு தந்துள்ள அருட்கொடைகள் அருள்வரங்கள் அனைத்தையும் நினைந்து ஒவ்வொரு நாளின் காலையிலும் கடவுளின் முந்தின வழிநடத்துதல்களை எண்ணி நன்றி செலுத்தவும் கடவுளை போற்றி புகழவும் அவரது கட்டளைகளை ஆராய்ந்து அறிந்திடவும் வாக்குத்தத்தங்களை சிந்திக்கவும் வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

பதின்மூன்றாம் கவியில் “உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது” என்ற செய்தி மட்டுமே பெரும்பாலான மொழிப்பெயர்ப்புகளில் உள்ளது. இக்கவியின் விடுபட்ட ஒரு பகுதியை “செப்த்வசிந்த்” எனும் எபிரேயத் திருமறையின் கிரேக்க மொழிப்பெயர்ப்பான எழுபதின்மர் மொழிப்பெயர்ப்பில் “ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்” என்ற இணைத்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாக்கின்படி கடவுள் தம் வாக்குகளில் உண்மையுள்ளவராகவும் செயல்களில் தூயவராகவும் இருப்பதை போல நாமும் இருந்திட இந்த வார்த்தைகள் நமக்கு அறைகூவல் விடுக்கின்றன.

எனக்கன்பானவர்களே! இன்றைய சமூகத்தில் உண்மையைப் பேசாதவர்கள் மாபெரும் தலைவர்களாக உள்ளனர். மனிதநேயமற்ற செயல்களில் அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர். இத்தகைய சூழலில் நாம் கடவுளின் உண்மையையும் தூய்மையையும் கொண்டாடவும் அத்துடன் அவரைப் போலவே நாம் நம்முடைய வார்த்தைகளில் உண்மையுள்ளவர்களாகவும் செயல்களில் தூய்மையுள்ளவர்களாயும் இருக்க முயற்சிக்க வேண்டும். அப்படி நாம் இருப்போமேயானால் அவரது அன்பும் அருளும் ஆசியும் நம் வாழ்வில் தலைமுறை தலைமுறையாய் இருக்கும். அத்தகைய வாழ்வு வாழ ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை சிந்திப்பதன் வழியாக ஆண்டவரிடம் நம்மை ஒப்படைப்போம். ஆண்டவர் தம் ஆவியானவரின் வழியாய் ஆற்றல் அளிப்பாராக.

மூவொரு கடவுளின் அன்பும் அருளும் ஆசியும்

நம்மை நிறைத்து காப்பதாக.

Rev. Daulton
மறைத்திரு. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை

2 thought on “அரசராம் கடவுள்”

Comments are closed.