என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங்.23:5,6a)

தியானம்:

கடவுள் நமக்கு அளிக்கும் கிருபைகளிலேயே உயர்ந்தது எதிரிகளையும் நம்மோடு ஒப்புறவாக்கி நிம்மதியான வாழ்வை நமக்கு அருள்வதுதான். இங்கு எதிரிகள் முன்பாக அமரும் விருந்தை ஆயத்தம் செய்வதே சமாதானத்திற்கான குறியீடாகும். ஏனெனில் விருந்தும், உடன் உணவருந்துவதும் உறவிற்கான அடையாளமாகும். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்”(வெளி. 3:20).


மேலும் கடவுள் நம் பாத்திரம் நிரம்பிய பிறகும் வழிய வழிய ஊற்றிக்கொண்டே இருக்கிறார், இதை அவர் அறிந்தே செய்கிறார், ஏன்? எண்ணை கீழே வழிந்து ஓடும்போது எதிரில் எதிரிகள் அல்லவா அமர்ந்திருக்கிறார்கள்? அவர்களையல்லவா அது சென்று சேரும்? உண்மையில் கடவுள் எப்படி நம் எதிரிகளோடு நம்மை ஒப்புறவாக்குகிறார் என்பதற்கான விடையாகவே இப்பகுதி அமைந்திருக்கிறது. ஆம்! நம் பகைவர்களை நம்மூலமாகவே சிறந்த நன்மை பெரும்படிச் செய்து அதன் மூலம் கடவுள் நம்மை அவர்களோடு ஒப்புறவாக்குகிறார்.


நம் பகைவர்களை நாம் பழிவாங்கும் வாய்ப்பிருந்தும் பழிவாங்காமலும், அவர்களுக்கு நம்மூலம் கிடைக்கவேண்டிய நன்மையை தடுக்காமலும் இருந்து, நன்மைசெய்து அதை ஒப்புறவாகும் வாய்ப்பாக நாம் பயன்படுத்திக்கொள்வதே கடவுளின் திருவுளமாகும். தாவீது சவுலைக் கொல்ல சரியான வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தாமல், அவர் சால்வையின் ஓரத்தைமட்டும் அறுத்து தூர சென்றபின் அதை காட்டி “நான் உம்மை கொல்ல வாய்ப்பிருந்தும் அதை நான் செய்யவில்லை” என்று ஒப்புறவிற்கான வாய்ப்பாக அதை பயன்படுத்தியது (1சாமு.24:11) நம் அனைவருக்கும் மிகச்சிறந்த பாடமாகும்.
இவ்வாறு தீமையை நன்மையினால் வென்றால் மட்டுமே நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம் நம்மைத் தொடரும், இல்லையேல் பகைமையும், கசப்புமே நம் வாழ்நாளெல்லாம் தொடர்ந்து நம் நிம்மதியை கெடுக்கும்.

இங்கு ‘தொடரும்’ (raw-daf’) என்ற சொல்லிற்கான உண்மையான பொருள் ‘துரத்தி பிடிப்பது’ என்பதே ஆகும். கடவுளின் கிருபை மெதுவாக ஒரு நாய்க்குட்டி நம்மை தொடர்வது போலல்ல, வலிமையும் வேகமுமான போர்க்குதிரையைப்போல் அது நம்மை துரத்திப்பிடித்து சடுதியில் காக்கும் என்பதுதான் இதன் ஆழமான பொருள்.

எதிரி என்றால் “நம்மை எதிர்பவர்கள்” என்பது மட்டும் இதன் பொருளல்ல “நாம் எதிர்ப்பவர்கள்” என்ற பொருளும் இதில் இருக்கிறது. எனவே நாமும் நம் பகையை ஒழித்து ஒப்புறவாக வேண்டும். இதற்காகவே ஆண்டவர் இயேசு சிலுவையில் மரித்தார் (எபே.2:14-18) என்பதே நம் ஆழமான பற்றுறுதி.

பா. கிறிஸ்தடியான்,
பா. கிறிஸ்தடியான்,

அருட்பணியாளர், சென்னை.

2 thought on “சத்துருக்களுக் கு முன்பாக பந்தி”

Comments are closed.