13 மார்ச் 2021

மாற்கு 2:1-12

•            மனித வாழ்வில் எம்மை அழுத்திக் கொண்டிருக்கும் காரியங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற விரும்புகின்றோம். குறிப்பாக, எம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுதலைபெறுதல் மிக அவசியமாகின்றது. இங்கு, பாவம் என்பது மனச்சாட்சிக்கும் ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி போன்றவற்றிற்கும் இடையிலான போராட்டமாகும். மனசாட்சி சொல்லுகிறபடி நாம் நடக்கும்போது பாவம் செய்யமாட்டோம். ஆனால், ஐம்புலன்கள் மனசாட்சிக்கு எதிராக செயற்படும்போது பாவம் ஏற்படுகின்றது.

•            முதலாம் உடன்படிக்கை வாசகத்தின் அடித்தளத்தில் தாவீது உரியாவின் மனைவியைக் கொன்று பச்சேபாளை தனது மனைவியாக்கினான். இப்பகுதியிலேயே நாத்தான் இறைவாக்கினர் இக்குற்றத்தை தாவீதுக்கு சுட்டிக்காண்பிக்கின்றான். இதனால், தாவீது மனந்திரும்பி பாவச்சுமையில் இருந்து விடுதலை பெறுகின்றான். திருப்பாடல்கள் 32 மற்றும் 51ம் அதிகாரங்களில் பாவமன்னிப்பு திருப்பாடல்களைக் காணலாம். அப்போஸ்தலர் / திருத்தூதர்பணிகள் 8:9-25 இப்பகுதியில் சமாரியாவில் நற்செய்திப்பணி நடைபெறுவதை நாம் பார்க்கின்றோம். இதன்படி, ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்ட சமாரியர்கள் விடுதலைப்பெற்று திருத்தூதர்களால் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். மறுகரையில், சீமோன் என்ற மந்திரவாதி கடவுளுடைய வரத்தை சொந்த பாவணைக்காகவும், தன்னுடைய புகழுக்காகவும் பயன்படுத்த முற்பட்டதை திருப்பணியாளர்கள் கண்டிக்கின்றனர்.

•            மாற்கு நற்செய்தியில் 2:1-12ல் பக்கவாதமுள்ள ஓர் மனிதர் சுகப்படுத்தப்படுகின்றார். இதன்படி, யூதர்கள் ஒரு மனிதனின் நோய்க்கும் அவனது பாவத்திற்குமிடையே தொடர்பு உண்டென நம்பினர். இதனாலேயே, ஆண்டவர் இயேசு பக்கவாதமுள்ள அந்த மனிதனின் பாவத்தை முதலில் மன்னித்தார். இதன் காரணமாக பாவங்களை மன்னிக்க கடவுளுக்கே அதிகாரம் உண்டு (ஏசாயா 43:24-25) என கருதிய பரிசேயர்கள் இச்செயற்பாடுகள் தொடர்பாக முறுமுறுத்தனர்.

•            திருச்சபை வரலாற்றில் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுதலைப் பெற வேண்டும் என்ற உணர்வுடன் ஆகஸ்டின், மார்டின், லூதர், பிரான்சிஸ் போன்றவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை வரலாறு எமக்கு கற்பிக்கின்றது. எல்லா சமயங்களும் இப் பாவமன்னிப்பின் அனுபவத்தை போதிக்கின்றனர். “நீற்றை புனைந்தென்ன நீராட போயென்ன மாற்றி பிறக்க வதை அறியேனே” இக்கூற்று பாவவிமோசனத்தை எமக்கு உணர்த்துகின்றது.

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்
அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை.