ரஷ்யா – உக்ரைன் போர் களம்

ரஷ்யா – உக்ரைன் போர் களம் காணும் இந்நேரத்தில் சில கிறிஸ்தவ ஊழியர்கள், “இது கடைசிகாலம், முன்னுரைக்கப்பட்ட போர்கள் நடந்தே தீரும், இதை நாம் தடுக்கக்கூடாது” என்று பேசிக்கொண்டிருப்பது எனக்கு வியப்பை தந்தது. ஒரு தேவ ஊழியர் ஒருபடி மேலே சென்று, ”போர் இல்லாமல் சமாதானம் ஏற்படாது, போர்கள் நடக்கவேண்டியிருக்கிறது” என்று கூறினார். அவரிடம் நான் சொன்னேன், “அப்படியென்றால் இயேசு இவ்வுலகத்தில் வந்து சமாதானத்தை கொடுக்க போர் அல்லவா புரிந்திருக்கவேண்டும்? அவர் தம்மையே அல்லவா கொடுத்தார்? என்று. அவரிடம் பதில் இல்லை.

சமாதானம் உண்டுபண்ண ஒரே வழி

கிறிஸ்தவர்கள் எப்படி விவிலியத்திற்கு எதிரான மனித கோட்பாடுகளில் சிக்கி சகமனிதர் அழிவதையும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது.

அவர் கூறுவது போலவே இந்த உலகமும் போர், வன்முறை, வாய்ச்சண்டை, சூழ்ச்சி மூலமாக தங்களுக்கு சமாதானம் ஏற்படும் என்றே நம்புகிறது. அதனால் தான் மக்கள் அவ்வழிகளில் சென்று சமாதானத்திற்கு பதிலாக விரோதத்தையே வளர்த்துக்கொள்கின்றனர். நோவாவின் காலத்தில் ஒருவரை வைத்துக்கோண்டு உலக மக்களனைவரையும் அழித்து போர்புரிந்தார் கடவுள். ஆனால் அதினால் பாவம் ஒழியவில்லை, சமாதானம் ஏற்படவில்லை என்பதை அறிந்து, மனஸ்தாபப்பட்டு, போரைக் கைவிட்டு “இனி அப்படி நான் அழிப்பதில்லை” என்று கலிங்கத்து போர் கண்டு மனம்மாறிய பேரரசர் அசோகர் போல வாக்களிக்கிறார். பிறகு ஆபிரகாமை அழைத்து “உன் மூலமாக உலக மக்களனைவரும் ஆசிபெறுவர்” என்று தன் முறையை நேரெதிராக மாற்றிக்கொள்கிறார். அதாவது, ஒருவரை வைத்துக்கொண்டு அனைவரையும் அழிக்கும் போரை கைவிட்டு ஒரு மனிதர் வழியாக இவ்வுலகையே மீட்கும் ‘தியாகத்தின் வழியை’ மீட்பின் திட்டமாக கடவுள் தேர்ந்துகொண்டு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார். போர் எவ்வகையிலும் நமக்கு தீமையே விளைவிக்கும், வன்முறையையும் பகையையும் கையிலெடுப்பவர்கள் அவைகளினாலேயே மடிந்துபோவார்கள். எனவே சமாதானம் உண்டுபண்ண நமக்கு இருக்கும் ஒரே வழி அந்த தியாக வழிதான், அதுதான் சிலுவையின் வழி.

சமாதானம் உண்டுபண்ண நமக்கு இருக்கும் ஒரே வழி அந்த தியாக வழிதான், அதுதான் சிலுவையின் வழி.

Rev. Christy

“நமக்கு சமாதானம் உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் விழுந்தது” அதாவது, கடவுள் தன் ஒரே மகனை நமக்காக தந்தருளி அந்த ஒருவரின் தியாகத்தின் வழியாக இந்த உலகிற்கே சமாதானத்தை அருளினார் என்பதே இதன் பொருள். “சமாதானம் பண்ணிகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்களே கடவுளுடைய பிள்ளைகள்” என்றார் ஆண்டவர். ஆனால் சமாதானம் செய்துவைப்பதும் அதை நாடுவதும் நம்மை பிரச்சனையில் சிக்க வைக்கிற மற்றும் நம் பொறுமையை அதிகம் சோதிக்கிற வலி நிறைந்த செயல்பாடாகும். அந்த வலியே சிலுவையாகும். போருக்கும், பகைக்கும், வன்முறைக்கும் எதிரான பண்பாடே சிலுவையாகும். அதைதான் ஆண்டவர் இயேசு தன் வாழ்நாள் முழுதும் சுமந்தார். “அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, (பிரிவினையின்)சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்”(எபே. 2:14-16) பிரியமானவர்களே, இந்த உலகம் சமாதானம் பெற நமக்கு கடவுள் கொடுத்துள்ள கடைசி வாய்ப்பு சிலுவையாகும். எனவே இப்படிப்பட்ட சிலுவையை அநுதினமும் நாம் சுமந்து இயேசுவைத் தொடரும் சீடராக திகழவேண்டும் என்பதே கடவுளின் திருவுளமாகும். இந்த லெந்துகாலங்களில் சிலுவையை போருக்கும் விரோதத்திற்கும் எதிரான பகைக்கொல்லியாக நாம் நோக்கி, சமாதானத்துக்கானவைகளை நாடி தெய்வீக அமைதி பெற கடவுள் தாமே நமக்கு தூயாவியாரின் ஆற்றலை அருள்வாராக!

அருள்பணி. பா. கிருஸ்து அடியான்
அருள்பணி. பா. கிருஸ்து அடியான்

தென்னிந்திய திருச்சபை,
சென்னைப் பேராயம்.