3 ஜுலை 2022

யோவான் 20:24-29

இந்திய அப்போஸ்தலராகிய தோமா

•            ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினுடைய சீடர்களின் ஒருவனாக தோமா காணப்படுகின்றார். இவரைக் குறித்து யோவான் நற்செய்தியிலேயே படித்தறிகிறோம். யோவான் 11ம் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு லாசரு மரித்து விட்டான். அவனை எழுப்புவதற்கு செல்ல வேண்டும் எனக் கூறியபோது, தோமா நாமும் செல்வோம். அவரோடு மரிப்போம் எனக் கூறுகின்றார். மேலும், யோவான் 14:1-6ல் ஆண்டவர் தான் பிதாவிடத்திற்கு புறப்பட்டு செல்லவுள்ளேன் எனக் கூறிய வேளையில் தோமா ஆண்டவரிடத்தில் நீர் போகிற இடத்தை அறியோமே. வழியை எப்படி அறிவோம் எனக் கேட்கின்றார்.

•            ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து தோமாவுக்கு காட்சியளிக்கும் வேளையில் தோமாவை நோக்கி, என் காயத்திற்குள் உன் விரல்களைப் போடு என்கிறார். அப்பொழுது தோமா, என் ஆண்டவரே என் தேவனே என அறிக்கையிடுகிறார். இதனை, யோவான் 20:24-29 பகுதியில் நாம் காணலாம். மேலும், இவ்வறிக்கை ரோம அரசுக்கு விரோதமான அறிக்கையாகும். அதாவது, ரோம மக்கள் தங்கள் அரசனையே ஆண்டவர் எனக் குறிப்பிட்டனர். ஆனால், தோமா அதற்கெதிராக இயேசுவையே ஆண்டவர் என அறிக்கையிடுகின்றார். இங்கு, யோவான் ஞானவாதக் கொள்கைக்கு எதிராக இயேசுவின் மனிதத்தன்மையையும் எடுத்துக் காண்பிக்கின்றார்.

•            முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி சமாதானத்தின் செய்தியை அறிவிக்கும் பாதங்கள் எவ்வளவு மேன்மையானவைகள் எனப் பார்க்கின்றோம். இங்கு தோமா சமாதானத்தின் நற்செய்தியை இந்தியாவுக்கு எடுத்துவந்து பின்னர் அவர் இலங்கைக்கும் வருகை தந்து நிறைவில் இந்தியாவில் இரத்தசாட்சியாக மரித்ததாக வரலாறு கூறுகின்றது. அத்துடன், திருப்பாடல் அல்லது சங்கீதம் 29லும் நற்செய்தி அறிவிப்பதனை நாம் காணலாம்.

•            இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 2 தீமோத்தேயு 3:10-17ல் பவுல் தீமோத்தேயுவுக்கு நற்செய்தியைப்பற்றி ஆலோசனைக் கூறும் வேளையில் வேதவாக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்கின்றார். தோமாவும் இவ்வார்த்தைகளை சுமந்துகொண்டு உலகெங்கும் சென்றார்.

•            மாற்றியல்புள்ளோர் அல்லது அங்கவீனத் தன்மையுள்ள மக்கள் பக்கத்திலிருந்து இச்செயலை நாம் பார்க்கும்போது அநேகரை குணப்படுத்திய ஆண்டவர் தனது சொந்தக் காயங்களை குணப்படுத்தாமல் இன்னமும் காயப்பட்டவராகவே காணப்படுகின்றார். இது அங்கவீனத்தன்மையுள்ள மக்களின் பலமாகவும் அவர்களின் அடையாளமாகவும் காணப்படுகின்றது.

ஆக்கம்: அற்புதம்