இக்காலத்தில் நடைபெறும் அடையாளங்கள் இயேசுவின் வருகைக்கான ஆயத்தங்கள் எனக்
கூறமுடியுமா?

எல்லா சமயங்களிலும் இறுதியியல் பற்றிய எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக: பௌத்த சமயத்தில் மைத்திரிய புத்தரின் வருகை, இந்து சமயத்தில் கல்கியின்
அவதாரம் போன்றவைகளும் இரண்டாம் வருகையுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றன. இயேசுவின் இரண்டாம் வருகையில் நடுத்தீர்ப்பு, உருமாற்றம் (1 தெசலோனிக்கேயர் 4:3-7), கிறிஸ்துவுக்குள் மரித்தோர் உயிரோடு எழுப்பப்படல் (1
கொரிந்தியர் 15:10-45) போன்றவைகள் நடைபெறும் என திருமறை கூறுகிறது.

எனவே, ஆதித்திருச்சபை இதற்காக தன்னை பல வழிகளில் ஆயத்தப்படுத்தியது. குறிப்பாக, தங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் விற்று பொதுவான வாழ்க்கையை அனுபவித்தல் (அப்போஸ்தலர், திருத்தூதர்பணிகள் 5:1-10). மேலும் ஆண்டவரின் வருகை சமீபமாக இருந்தபடியால் தெசலோனிக்கேயா திருச்சபை மக்கள் வேலைகளுக்கு செல்லாமல் ஆலயத்தில்
சோம்பேறிகளாக இருந்ததை பவுல் கண்டிக்கின்றார். மேலும் இயேசுவின் வருகை சமீபமாக இருக்கின்றபடியால் திருமண வாழ்வில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு பவுல் கொரிந்து திருச்சபை மக்களுக்கு ஆலோசனைக் கூறுகின்றார் (1 கொரிந்தியர் 7). அத்துடன் ஆண்டவர் இயேசுவின்
வருகை சமீபமாக இருந்தபடியால் புதிய ஏற்பாட்டு திருச்சபை நற்செய்தி நூல்களை எழுத்து வடிவில் தயாரிப்பதற்கு தாமதப்படுத்தினது.

இவ்வாறாக இயேசுவின் வருகை ஆதித்திருச்சபையில் பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கி.பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த மொன்டேனியஸ் என்பவர் இயேசுவின் வருகை எருசலேமில் உள்ள பெப்புசா என்ற மலையில் இடம்பெறும் என குறிப்பிட்டு தன்னுடைய மக்களை
மலை உச்சிக்கு அழைத்து சென்றார். எனினும் இயேசுவின் வருகை இடம்பெறாதபடியினால் அவர்கள் அங்கிருந்து பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்தனர். இந்தளவிற்கு
ஆதித்திருச்சபையிலும் செல்வாக்கு செலுத்தியது. இச்சிந்தனை இன்றும் செல்வாக்கு செலுத்துகின்றது.

திருமறையில் இயேசுவின் வருகையுடன் தொடர்புபடுத்தப்பட்ட இயற்கை அடையாளங்கள் திருச்சபைக்குள் நிலவுகின்ற அடையாளங்கள் திருச்சபைக்கு வெளியே ஆட்சியாளர்களுடன்
தொடர்புபட்ட அடையாளங்கள் ஓர் இல்லத்திற்குள் காணப்படும் அடையாளங்கள் போன்ற பல அடையாளங்கள் திருமறையில் காணப்படுகின்றன. குறிப்பாக மத்தேயு 24ம் அதிகாரம்
மாற்கு 13ம் அதிகாரம் வெளிப்படுத்தல் நூல் போன்றவற்றை உதாரணமாக நாம் குறிப்பிடலாம். இவையனைத்தும் மறைப்பொருள் வெளிப்பாட்டு இலக்கியத்துடன் தொடர்புபட்டவைகள் ஆகும். இவைகள் அக்காலத்தில் இடம்பெற்ற செயல்பாடுகள் ஆகும். மத்தேயு, மாற்கு
போன்ற நற்செய்திகள் எருசலேம் ஆலயத்தின் அழிவின் பின்னரே எழுதப்பட்டவைகள் ஆகும்.


அதாவது எருசலேம் ஆலயம் கி.பி. 70ம் ஆண்டில் வெல்பசினின் மகனாகிய தீத்துஸ் என்பவரால் அழிக்கப்பட்டது. கி.பி. 64-68 வரை கிறிஸ்தவர்கள் நீரோவின் ஆட்சிக்குள்ளும்
கி.பி. 91-96 வரை தொமித்தியனின் ஆட்சிக்குள்ளும் கிறிஸ்தவர்கள் காணப்பட்டனர். இவர்களை
ரோம அரசர்கள் பல்வேறு காரணங்களுக்காக துன்பப்படுத்தினர். இப்பின்னணியிலேயே
இயேசுவின் சீடனாகிய யோவானை தொமித்தியன் என்ற அரசன் கொதிக்கும் எண்ணெக்குள் போட்டான். எனினும், யோவானுக்கு எதுவும் ஏற்படாதபடியால் அவரை எண்ணெயிலிருந்து
வெளியே எடுத்து பத்மோஸ் தீவுக்கு நாடுகடத்தினார். அங்கிருந்து அவர் கண்ட தரிசனமே வெளிப்படுத்தல் நூலாகும். இங்கு பயன்படுத்தப்படும் அடையாளச் சின்னங்களாகிய இலக்கம் 666, கொடிய மிருகம் போன்ற உருவங்கள் உரோம அரசர்களை குறிப்பிடுவதற்காக
பயன்படுத்தியுள்ள அடையாளச் சின்னங்கள் ஆகும். இவைகள் அக்காலத்திற்கு உரியவைகளாக காணப்பட்டாலும் அவைகள் நிகழ்கால பொருத்தப்பாடு உடையவைகளாக விளக்கமளிக்கப்படுவதை நாம் காண்போம்.

இயேசுவின் வருகை பற்றி அவர் கூறிய உவமைகள் எதிர்கால பொருத்தப்பாடுடையவைகளாக
விளக்கப்படுத்தப்பட்டாலும் அவைகள் நிகழ்காலத்துடன் தொடர்புபட்டவைகள் ஆகும். உதாரணமாக: 10 கன்னியரின் உவமை (மத்தேயு 25:1-12), தாலந்து உவமை (மத்தேயு 25:13-30),
இறுதித்தீர்ப்பு (மத்தேயு 25:31-46) போன்றவைகள் இதனொளியிலேயே படிக்கப்பட வேண்டும்.

இயேசுவின் வருகையைப்பற்றி பிதா ஒருவரே தவிர வேறு யாரும்
அறிந்திருக்கமாட்டார்கள். சிறப்பாக இயேசுவே அறிந்திருக்கவில்லை எனக் கூறுகின்றார்
(மாற்கு 13:32).

(மாற்கு 13:32)

ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது

எனவே இயேசுவின் வருகையை குறித்த காலத்தை நாம் ஆய்வு செய்வதைவிட ஒவ்வொரு நாளும் நாம் ஆயத்தமாக இருப்பதே அவசியமானதென அன்னை தெரேசா குறிப்பிடுகின்றார். ஆண்டவர் இயேசு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் எம்மிடத்தில் வருகை தருகின்றார் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

<strong><sup><sub>அருள்பணி. அருளம்பலம் ஸ்டீபன்</sub></sup></strong>
அருள்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

இறையியலாளர், இலங்கை.