மத்தேயு 16 :13-23

சிலுவையையும், துன்பத்தையும் அடையாளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் நமக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. அவற்றை கழுத்திலே தொங்கவிடுவதில், தங்க நகைகளில் பொறிப்பதில், நாள்காட்டிகளில் பார்ப்பதில், பல்வேறு கோணங்களில், வடிவங்களில், ஓவியங்களில் சிலுவையை அலங்காரமாக வைத்துக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ‘சிலுவை ஒரு மீட்பின் பாதை’ என ஏற்று வாழ்வதில் நமக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிலுவையை எடுத்து வாழ்க்கை முழுவதும் பின்பற்றுவது கொஞ்சம் கடினமானப் பணியே! ஆண்டவர் நம்மிடம் விட்டுச்சென்ற கருத்தியலே அதுதான். அவர் மீட்பின் பாதையே சிலுவைதான் என்கிறார்.

சிலுவையும், துன்பமும் அனைவருக்கும் உரிய ஒன்று என்பதில் பல வினாக்கள் தோன்றுகின்றன. துன்பம் யாருக்குத் தேவை? ஏற்கனேவே கழுத்தளவு துன்பத்தில் மூழ்கியிருப்போருக்கு இந்தச் சிலுவைப்பாடுகள் தேவையா? காலங்காலமாக தலைமுறை தலைமுறையாகத் துன்புறுகிறவர்கள், பசியாயிருப்போர் தொடர்ந்து துன்புற வேண்டுமா? அவர்கள்தான் தியாகம் செய்ய வேண்டுமா? அவர்களிடம் மேலும் மேலும் துன்பம் கலந்த பாடுகளை எதிர்பார்ப்பது நியாயமா? யாருக்காக யார் தியாகம் செய்வது என்பது இன்றையச் சூழலில் ஏழைகள் எழுப்பும் வினாக்களாகும். இதன் ஆழமான பரிமாணத்தை இப்பகுதியில் நாம் காண முயல்வோம்.

ஆண்டவர் தம் துன்புறும் படலத்தின் முதல் அறிவிப்பை வெளியிடும் திருவிவிலியப் பகுதியில் பேதுருவிடம் தொடங்கிய ஓர் உரையாடல் மூலம் சில செய்திகளை நாம் இங்கே ஆழமாக புரிவது நல்லது. முதலில் ‘மக்கள் மனித குமாரனை யார் எனக் கூறுகின்றனர்’ என கேட்கிறார். அதற்குச் சீடர்கள் யோவான், எலியா, எரேமியா, தீர்க்கர்களில் ஒருவர் எனப் பல விடைகளைத் தந்தனர். கேட்ட வினாவுக்கு பதில் வந்துவிட்டது, ஆனால் அதையும் தாண்டி இன்னொரு வினாவை எழுப்புகிறார் ஆண்டவர். அப்படியானால், என்னை யார் என நீங்கள் சொல்லுகிறீர்கள்’ என்று ஆண்டவர் கேட்க, வாழும் கடவுளின் மகனாகிய கிறிஸ்து (மெசியாஃவாழும் கடவுளின் மகன்) என விடையளித்தார் பேதுரு. உடனே ஆண்டவர் அவரிடம் ‘நீ பேறு பெற்றவன் (17), கடவுளின் வெளிப்பாட்டால் பேசுகிறாய், நீ விசுவாசுகளின் தந்தையாவாய் (18), உன்னிடம் விண்ணரசின் திறவுகோலைத் தருவேன்’ எனப் பேதுருவிடம் பல மரியாதைகளை அடுக்குகிறார். ஆண்டவர், ஆளும் வர்க்கத்தினரிடம் பொதுவாகத் தொற்றியுள்ள ஒரு துதிபாடும் பண்பாட்டை விரும்பினாரா? எல்லோரையும் மயக்கிவிடும் புகழுக்கு ஆண்டவரும் அடிமையாகிவிட்டாரா? எனும் வினாக்களும் இங்கு எழும்பாமல் இல்லை. இருப்பினும் பேதுருவின் விடை ஆண்டவரை ஓரளவு மனம் நிறைவடைய வைத்திருக்கிறது. ‘கடவுளின் மைந்தராகிய கிறிஸ்து’ என்ற வெளிப்படையான அறிக்கையில் ஒரு சித்தாந்த ரீதியான முக்கியத்துவத்தை ஆண்டவர் காண்கிறார். ‘கிறிஸ்து’ எனும் சொல்லாட்சி முதன் முதலாக மத்தேயு நூலில் இவ்விடம் வருகிறது. இதன் பின்னரே இயேசுக்கிறிஸ்து எனும் சொல்லாட்சி இணைந்து வருகிறது. இயேசுவும் தம்மைக் ‘கிறிஸ்து’ என ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இதனை யாரிடமும் சொல்லவேண்டாம் எனத் தடை செய்வதையும் நாம் காண்கிறோம். இங்குப் புகழ்பாடும் கருத்தாக ஆண்டவர் பாராமல் வேறு ஒரு செய்தியைச் சொல்ல முனைகிறார்.

பேதுரு பயன்படுத்திய சொல்லாட்சியில் எந்ததொரு குழப்பமுமில்லை. ஆனால், சொல்லாட்சிக்குரியப் பொருளை அவர் தவறாகக் கொண்டிருந்தார் என்பதே இங்குச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய செய்தி. இதுவரை அரமேயத்தில் ‘மெசியா’, கிரேக்கத்தில் ‘கிறிஸ்து’ என அழைக்கப்பெற்றோரை அருட்பொழிவு செய்யப்பட்டவர் (அரசர்), யூத இனத்திற்கு அரசியல் விடுதலை தருபவர், கிரேக்கர்களிடையே சிதறியவர்களை ஒருங்கிணைப்பவர், யூத பேரரசை நிறுவுபவர், பிற நாட்டினரை அடிமையாக்குபவர் எனும் அக்கால நடைமுறை கருத்தியல் புரிந்து கொள்ளுதல்களை அப்படியே உள்வாங்கிப் பேசியவரே பேதுரு. அந்த அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் புரிந்துகொண்டு, இயேசுவின் மூலம் ஒரு புதிய ஆட்சி மலரும், அதில் எமக்கும் புதிய அதிகார பீடம் கிடைக்கும், புதிய மரியாதை கிட்டும் என்றெல்லாம் கனவு காணத்தொடங்கினார். மரபு ரீதியான புரிதலைப் போன்று, இயேசு கிறிஸ்துவையும் தமது அதிகாரத்திற்கு வன்முறையைப் பயன்படுத்தி, மற்றவர்களை அடக்கி ஆளும் நபராகவே கிறிஸ்துவையும் புரிந்திருந்தார். ஆனால் இயேசுநாதர் புரிந்துகொண்ட கிறிஸ்து வேறுபட்டவர். இயேசு பார்த்த கிறிஸ்துவுக்கும், பேதுரு பார்த்த கிறிஸ்துவுக்கும் எதிர்மறையான பொருள் இருந்ததைக் காணமுடியும்.இதன் காரணமாகவே இயேசு,

இனி நீங்கள் காணும் இயேசுவாகிய கிறிஸ்து வேறுபட்டவர், அவரைப் பலர் (சமய, அரசியல் தலைவர்களால்) துன்புறுத்துவர், கொலைசெய்வர், ஆனாலும் மூன்றாம் நாள் உயிரோடெழுப்பப்படுவார்” எனும் ஒரு புதியச் செய்தியை முன்வைக்கிறார்

இப்போது இயேசு, அதிகாரம் செய்யும் கிறிஸ்து அல்லர் பாடுபடும் ஒரு கிறிஸ்து, அதிகாரமற்ற கிறிஸ்து, சிலுவையில் அடிவாங்கப்போகிற கிறிஸ்து, கொலைசெய்யப்பட போகின்ற கிறிஸ்து” என கேள்விப்பட்டவுடன் பேதுருவுக்கு ஒருவித தயக்கம் வந்துவிட்டது கூடவே ஒரு வெறியும் வந்துவிட்டது. ”கிறிஸ்து துன்புறுவதா, ஐயோ ஆண்டவரே அது வேண்டாம் அது நடக்கக்கூடாது” என குரல் கொடுக்கிறார், எச்சரித்துக் கண்டனம் செய்கிறார். இதிலிருந்து பேதுருவின் கனவுகள் எந்த அளவு தகர்ந்து நொறுங்கியுள்ளன என்பது தெரிய வருகின்றன. ஆரம்பத்தில் இயேசு நான்கு தொடர்களால் பேதுருவைப் பாராட்டினார். இப்போதோ, தலைகீழான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் பேதுரு கடவுளுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கவில்லை. பேதுருவும் ஒரு சாதாரண, சராசரி, பிற்போக்கு எண்ணம் படைத்தவர் என்பதை இயேசு அறிந்தவுடன், ”அப்பாலே போ சாத்தானே” என எச்சரிக்கிறார். ஏற்கனவே கூறிய வார்த்தைக்கும், இந்த நிகழ்ச்சிக்கும் இடையே ஒரு சில மணித்துளிகள் மட்டுமே இடைவெளி. ‘விசுவாசிகளின் தந்தை’ எனத் தகுதிபெற்ற ஒருவர் சில மணித்துளிகளில் ”சாத்தானாக” மாறுகிறதை நாம் காணலாம்.

‘இறையரசின் திறவுகோலைக் கொண்டிருந்தவர்’ திடீரென ‘சாத்தானாக’ மாறுகிறதை நம்மால் நம்ப முடியவில்லை. இங்குப் பேதுருவை ஒரு தனிநபராகப் பார்க்கத் தேவையில்லை. மாறாக, பொதுநலத்திற்காக துன்பத்தை, தியாகத்தை ஏற்கவிரும்பாத ஒரு சுயநல அமைப்பின் பிரதிநிதி எனப் பார்க்க அழைக்கப்படுகிறோம். பாடுகளைக் குறித்து இடறல் அடைந்து கொண்டிருக்கும் ஒரு கும்பலின் பிரதிநிதி. உலகச் சிந்தனைப் போங்கின் ஒரு கருவூலம். எனவேதான் அவர் அந்நேரம் சாத்தானாகக் கருதப்பட்டார்.

ஆண்டவரின் இந்த அணுகுமுறையை நம் வாழ்வில் அப்படியே எடுத்துக்கொண்டால் நம்மையும் சீர்துôக்கிப் பார்ப்பதற்கு இது ஓர் அளவீடாக அமையலாம். திருவிவிலியத்தைக் கையில் ஏந்திய நாம், பலருக்குப் புனிதராக, தெய்வீக சக்தி கொண்டவராக, சிறப்பு அருள் படைத்தோராகத் தென்படலாம். பல நேரங்களில் பல்வேறு தாலந்துகள் மூலமாக பல வளங்கள் மூலமாக, சிறப்புப் பொறுப்புகள் மூலமாக கடவுள் நம்மை உயர்த்தியிருக்கலாம். அதேநேரத்தில் நம் வழிகள் சிலுவையின் பாதை இல்லை எனத் தெரிந்து கொண்டவுடன் நம்மையும் ‘சாத்தானே!’ என ஆண்டவர் அழைக்கத் தயங்கமாட்டார். நாம் கடவுளின் பிள்ளைகளே நினைத்துக் கொண்டிருந்தாலும், எந்நேரமும் நாமும் ஒரு சாத்தானாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

இன்று நாம் எப்படிப்பட்டக் கிறிஸ்துவைப் புரிந்து கொண்டிருக்கிறோம்? எப்படிப்பட்டக் கிறித்தவத்தோடு நம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம்? அதிகாரத்தை, அந்தஸ்தை, ஆணவத்தை, சுயநலத்தை முன்நிறுத்திக் கிறிஸ்துவைப் பின்பற்ற விழைகிறோமா, அல்லது தீமைகளைக் களையக்கூடிய பண்பாட்டு ரீதியான, சமயரீதியான ஆதிக்க எண்ணங்களை ஏற்காமல் நிராகரித்து ஒரு புதிய மானிடத்தைக் காணுகின்ற ஒரு கிறிஸ்துவைக் காண விழைகிறோமா? அதிகாரம் நிறைந்த ஒரு கிறிஸ்துவைப் பின்பற்ற நினைக்கிறோமா அல்லது அதிகாரமற்ற இயேசுவை பின்பற்ற நினைக்கிறோமா? என்ற வினாக்கள்தாம் நம்மைப் 'பாக்கியவான்' என்ற தகுதிக்கோ அல்லது 'சாத்தான்' என்று அழைக்குமாறோ இட்டு செல்கின்றன.

‘இயேசுவின் இரத்தம்’

எனக்கூறி இறைவேண்டலை அலங்கரிப்பதிலோ, சிலுவையை ஒரு பண்பாட்டுச் சின்னமாக ஏற்பதாலோ பெரிய மாற்றத்தை நாம் கொண்டுவர முடியாது. வெறும் இரத்தம் சிந்தும் தியாக நிகழ்ச்சிகளை மட்டுமே சிலுவைகள் எனவும் சுருக்கிவிடக்கூடாது. சிலுவை என்பது ஒவ்வொருநாளும் நடக்கும் நிகழ்வுகளில் தென்படவேண்டும். இழப்பில்லாத அறிவுரைகள், அருளுரைகள், கருத்துரைகள் கிறிஸ்தவர்களிடம் பரவலாக இன்றைய நாள்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை சிலுவையை ஒருபோதும் பிரதிபலிப்பதில்லை. இழப்போடு சேர்ந்த வேதனைகள், இழப்போடு இணைந்த நீதிக்கான தேடுதல்கள் போன்றவைகளே வலுவாக சிலுவையைப் பிரதிபலிக்கின்றன. பாரபட்சமில்லாமல் அன்பைக் காட்டுவதில் சிலுவை தொடர்கிறது. ஏனெனில் இனம், சாதி, மொழி, வர்க்கம் இவற்றைத் தாண்டுவதை, சமத்துவத்தை நிலைநாட்டுவதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. நீதியைச் செயல்படுத்தும் தீர்மானங்களில் சிலுவை பிரதிபலிக்கிறது. மக்கள் பங்கேற்பினால் வரும் தீர்மானங்களை ஒடுக்கி, தானே முடிவெடுத்து செயல்படுத்துவதில் எந்தச் சிலுவை அனுபவங்களும் இல்லை. தலைமைத்துவத்தில் இருப்போர் மக்கள் பங்கேற்பை அதிகரித்து அளிப்பதே, சிலுவையின் பாதையாக கருத வேண்டும். மக்களுக்கான முடிவுகளை எடுக்கும்போது பல சிலுவைகள், துன்பங்கள், வசதியின்மைகளும் ஏற்படலாம். அதிகாரத்தை புறந்தள்ளினால்கூட துன்பம் வரமுடியும், தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் துன்பம் பெருக முடியும். இவை அனைத்தும் சிலுவையின் வடிவங்களாக நம் வாழ்வில் பிரதிபலிப்பதைத் தவிர்க்க நினைத்தால், நாமும் பேதுருவைப் போல சாத்தானாக மாற முயல்கிறோம் என்பதுதான் பொருள்.

ஒருவகையில் ஆண்டவர் கூறும் சிலுவை, அனைத்து மக்களுக்கும், குறிப்பாகக் கிறித்தவர்களிடமும் முழுமையாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை ஒருவர் பண்பாட்டு ரீதியாக ஆதிக்கங்கொண்ட தலைவர்களை ஏற்றுத் துன்புறுகையில் சிலுவையை சுமக்கிறேன் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதிக்க உணர்வு கொண்டோரை எதிர்ப்பவர்கள் சிலுவை சுமப்பவர்கள். ஆனால் இதில் ஈடுபட்டு தத்தளிக்கிற நிலையே தூய ஆவியானவரின் அருளை வரவழைக்கும் செயல்பாடாகும். முயற்சிசெய்ய முனையும்போது ஏற்படும் இழுவை நிலையைப் பெற்றிருப்பது கூட மேற்கண்ட சிலுவையின் பாதைக்கு வழி நடத்தும். பவுல் அடிகாளாருக்குக்கூட இந்த இழுவை நிலை இருந்தது. எனவே தன்னை ”ஒரு நிர்ப்பந்தமான மனிதர்” என அழைத்தார். இழுவை இல்லாமல் தைரியமாக, துணிகரமாக ஆதிக்கத்தையும், சுயநல முடிவுகளையும் தக்க வைப்போர் சிலுவைப்பாதையில் ஒருபோதும் பங்கேற்பதில்லை. அவர்கள் போலிக் கிறித்தவர்கள். ஆட்டுக்குட்டிகளைப் போன்று உடையணிந்து ஓநாய்களாக திரிபவர்கள். பேதுரு தம் வாழ்வில் கொண்டிருந்த ஆதிக்க சித்தாந்தங்களின் காரணமாகவே வாழ்வில் துன்பங்களை மெதுவாக நிராகரித்தார். தாமாகவே தலைமைத்துவத்தைத் தக்கவைக்க வேண்டும் என விரும்பியவர் பின்னர், மிகக் கொடுமையான மரணத்தை (சிலுவையை) கிறிஸ்துவுக்காக சந்தித்தார் என வரலாறு கூறுகிறது. பேதுருவிடம் ஏற்பட்ட இழுவை நிலையை நாம் பெற்றிருப்பினும் அதனைத் தாண்டிய கிறிஸ்துவின் பாதையில் செல்ல நம்மை கடவுளிடம் ஒரு முறை கூட அர்ப்பணிப்போம். சராசரி மனிதர்க்கு ஏற்றவைகளை மட்டும் சிந்திக்காமல், ஆண்டவரின் ஆளுகையை மையமாகக் கொண்டு செயல்படுவோம்!

(21.02.2006 சாம்பல் புதன் கிழமையன்று தமிழ்நாடு இறையியல் கல்லூரி கிறிஸ்தரசர் வழிபடுமனையில் ஆற்றியது)

முனைவர். சாலமன் விக்டஸ்,
முனைவர். சாலமன் விக்டஸ்,

இறையியல் பேராசிரியர்.
தமிழ்நாடு.