14 ஏப்ரல் 2022
பெரிய வியாழன்

மாற்கு 14:17-25

• பரிசுத்த வாரத்தின் பெரிய வியாழன் முக்கியமானதொன்றாகும். குறிப்பாக, இந்நாளில் இயேசு சீடர்களின் பாதங்களை கழுவியமை, அவரின் இறுதி இரா உணவு போன்றவைகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றதை நினைவுகூறும் வகையில் பஸ்கா விருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதுவோர் விடுதலைச் சின்னமாகும். இதனையே, திருப்பாடலிலும் நாம் படிக்கின்றோம். ஆட்டுக்குட்டிகளை வெட்டி ரத்தத்தை கதவு நிலையில் பூசும் சடங்கு எகிப்தில் வழமையான நிகழ்வாகும். ஏனெனில், நிலையில் பூசப்பட்ட இரத்தத்தை ஆடுகள் பார்க்கும்போது அது அதிக குட்டிகளை ஈனும். எனவே, இஸ்ரவேல் தங்கள் ஆட்டுக்குட்டிகளை வெட்டி அதன் இரத்தத்தை நிலையில் பூசியபோது எகிப்தியருக்கு இதுவோர் புதிய செயலாக தோன்றவில்லை.

• நற்செய்தி வாசகத்தின்படி இயேசு திருவிருந்தை ஏற்படுத்திய நிகழ்வு கூறப்படுகின்றது. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இதனை பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் போன்றவற்றோடு நினைந்து கொள்ளுகின்றனர். ஆனால், யோவான் 5 அப்பங்களையும் 2 மீன்களையும் இயேசு ஆசீர்வதித்த நிகழ்வுடன் தொடர்புபடுத்துகின்றார்.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 1 கொரிந்தியர் 11:23-34 வரையுள்ள பகுதியில் பவுல் திருவிருந்தைப் பற்றி பேசுகின்றார். முதல் முதல் பவுலே திருவிருந்தைப் பற்றி எழுதுகின்றார். இதன் பின்னரே, நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளதை நாம் அறிகின்றோம். இங்கு திருவிருந்து உடன்படிக்கை உறவை நியாபகப்படுத்துகின்றது. இதற்கா பவுல் ‘கொய்னோனியா’ என்ற கிரேக்க வார்த்தையை பயன்படுத்துகிறார். இதன்படி, அதிக பணமுள்ள ஓர் வியாபாரி ஓர் ஏழை வியாபாரியிடம் தன்னிடம் உள்ள ஒரு பணத்தின் ஒரு பகுதியை கொடுத்து நீயும் வியாபாரம் செய்து எனது நிலைக்கு உயர்ந்து வா என்பதே இவ்வழைப்பாகும். இதன்படி, திருவிருந்தின்போது நாம் எம்மிலும் பார்க்க குறைந்த நிலையிலுள்ள மனிதனை எமது நிலைக்கு உயர்த்துவோம் என இறைவனுடன் செய்துகொள்ளும் ஓர் பொருத்தனை ஆகும். மேலும், ஆதித் திருச்சபை திருவிருந்து பெற்ற பின்னர் இயேசு எவ்வாறு தன்னை உடைக்கவும் சிந்தவும் கொடுப்பாரோ அதேபோல தங்களையும் அர்ப்பணித்தனர். மேலும், இயேசு ஒருமுறை மாத்திரம் திருவிருந்தைப் பெற்றுக் கொண்டார். சிலுவைக்கு செல்லுவதற்கு அது அவருக்கு போதுமான சக்தியை வழங்கியது.

திருவிருந்து இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல், மீண்டும் வருதல் போன்றவற்றை ஞாபகப்படுத்துகின்றது. அத்துடன், நாம் கடவுளுடனும் மக்களுடனும் ஐக்கியப்படுவதற்கு உதவுகின்றது. அத்துடன், எதிர்காலத்தில் நாம் இறைவனுடன் அருந்தப் போகும் விருந்திற்கான முன்னடையாளமாகும். மேலும், இயேசுவின் மரணத்தில் சமயத்தினதும் அரசியலினதும் அநீதிகள், காட்டிக்கொடுப்புக்கள், மறுதலிப்புகள், திட்டமிடப்பட்ட தீமைகள் போன்றவைகளும் நியாபகப்படுத்தப்பட வேண்டும்.

ஆக்கம்: அற்புதம்