Stephen the first Martyr

15 பெப்ரவரி 2022


மத்தேயு 10:16-22

• திருமறையில் பல இரத்தசாட்சிகளை நாம் பார்க்கின்றோம். திருமறைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்படாமல் திருச்சபை வரலாற்றிலும் கி.பி.64-313 வரையுள்ள காலப்பகுதியிலும் அநேகர் தமது உயிரை அர்ப்பணித்தனர். இவ்வாறாக, அர்ப்பணிப்புக்கள் இன்றும் தன்னார்வ முறையிலும் கட்டாய முறையிலும் உலகில் இடம் பெறுவதை நாம் பார்க்கின்றோம். புதிய உடன்படிக்கையில் முதலாவது இரத்தசாட்சியாகிய ஸ்தேவானின் வாழ்விற்கும் பணிக்கும் இந்நாளில் நாம் நன்றி செலுத்துகின்றோம்.

• முதலாம் உடன்படிக்கையில் இரத்தசாட்சியாக மரித்த சகரியாவைப் பற்றி 2 குறிப்பேடு / 2 நாளாகமம் 24:17-22ல் வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இதற்கு முன்பதாகவே துன்புற்று மரித்த ஆபேலை மறந்துவிடமுடியாது (தொடக்கநூல் 4:1-10). இவர்களின் இரத்தம் பூமியில் இருந்து இன்றும் கூக்குரலிட்ட வண்ணம் உள்ளன. இவர்கள் கடவுளின் பார்வையில் பெறுமதியானவர்கள் என திருப்பாடல்கள் கூறுகின்றது. புதிய ஏற்பாட்டு பகுதிக்குள் நாம் வரும்போது, ஆதித் திருச்சபையில் கிறிஸ்தவர்கள் யூதர்களால் துன்புறுத்தப்பட்டதை நாம் காண்கின்றோம். குறிப்பாக, நசரேயனாகிய இயேசு ஆலயத்தை தகர்த்துவிடுவார் என்றும் ஓய்வுநாட்சட்டங்களையும் நியாயப்பிரமாணங்களையும் கடைக்கப்பிடிக்க வேண்டும் என அவசியமில்லை என்றும், சபிக்கப்பட்ட இயேசுவை மேசியா என ஸ்தேவான் போதித்தார் என தேவநிந்தைக்குரிய குற்றங்களை அவன்மீது சுமத்தி அவனைக் கல்லெறிந்து நியாயப்பிரமாணப்படி கொலைசெய்தார்கள். அவரின் மரணம் பவுலின் மனமாற்றத்திற்கும் நற்செய்தி பரம்பலுக்கும் உதவியுள்ளது.

• நற்செய்தி பகுதியில் ஆண்டவர் இயேசு திருப்பணியின் கடினத்தன்மையை எடுத்துணர்த்துகின்றார். சிறப்பாக, ஓநாய்களுக்குள்ளே ஆடுகளை அனுப்புகின்றேன் என்ற உருவக மொழியை பயன்படுத்தி திருப்பணியில் இருக்கும் கடினத்தன்மையை எடுத்துக் காண்பிக்கின்றார். இதன்மூலம், சீடத்துவத்தின் கிரயமே துன்பம் என போதிக்கின்றார் (மாற்கு 10:35-45)

• ஆனால், இன்று நாங்கள் கிறிஸ்துவாகிய உண்மையை, விடுதலையை, வாழ்வை மறுதலிக்கின்றோம். எனினும், ஒரு சிலரேனும் சீடத்துவத்திற்கு உண்மையாய் உள்ளனர். இலங்கையில் இரத்த சாட்சிகளாக மரித்த திருப்பணியாளர்களாகிய மைக்கல் ரொட்ரிகோ, ஜிம் பிரவுன், ஜெயராஜசிங்கம் போன்றவர்களையம், இந்தியாவில் ரத்த சான்றுகாய் மரித்த திருத்தூதுவர் தோமா, தேவசகாயம் பிள்ளை, சாது சுந்தர் சிங், ஸ்டெவார்ட ஸ்டைன்ஸ், நாம் மறந்துவிடக்கூடாது.

<mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#f7ec00" class="has-inline-color">அருளம்பலம் ஸ்டீபன்</mark>
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை