3 ஜுலை 2022
உக்கிராணத்துவ ஞாயிறு
கிரயத்தை எண்ணாமல் கடவுளுக்கு கொடுத்தல்
மாற்கு 14:3-11

• எமது வாழ்வில் பொதுவாக கொடுத்தாலும் அளந்துபோடு என்ற பழமொழியை நாம் கேட்கின்றோம். ஆனால், இன்றைய தலைப்பு கொடுக்கும்போது கிரயத்தை எண்ணாமல் கொடுக்குமாறு எம்மை அழைக்கின்றது.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி (ஆதியாகமம் அல்லது தொடக்கநூல் 13:8-18) இப்பகுதியில் ஆபிரகாமுக்கும் லோத்துவுக்கிடையேயான இடத் தெரிவைப் பற்றி நாம் பார்க்கின்றோம். அங்கு ஆபிரகாம் எத்தகைய கிரயங்களைக் குறித்தும் எண்ணாமல், லோத்துவைப் பார்த்து உனக்கு தேவையான இடத்தை நீ தெரிவு செய்துகொள் என கூறுகின்றார். இதன் மூலம் ஆபிரகாமின் பெருந்தன்மையைக் குறித்து நாம் பார்க்கின்றோம்.

• திருப்பாடல் அல்லது சங்கீதம் 15ன் படி அங்கு ஆசிரியர் கடவுளுடைய பிள்ளைகள் எனப்படுவோர் சரியான முறையில் மக்களுக்கு கொடுக்க அழைக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய தியாகக் கொடைகளில் வட்டி வாங்குதல், பொய்யான பிறப்பித்தல் போன்றவைகள் இருக்கக்கூடாது என்கிறார்.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 2 கொரிந்தியர் 8:1-15 பகுதியில் பவுல் மக்கதோனியா திருச்சபையில் கொடுக்கும் ஆற்றலுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகின்றார். அவர்கள் தங்கள் தாராளமான நிலையிலிருந்து கடவுளுக்கு கொடுக்காமல் மாறாக, தங்கள் குறைவிலிருந்து கடவுளுக்கு கொடுத்தனர்.

• நற்செய்தி வாசகத்தின்படி சீமோன் என்ற தொழுநோயாளர் ஒருவர் இல்லத்தில் இயேசுவை அபிஷேகம் செய்த மகதலேனா மரியாள் என்னும் பெண்மணி அறிமுகப்படுத்துகின்றார். இங்கு சீமோன் தொழுநோயாளராக இருந்து குணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் மத்தேயு, மாற்கு போன்ற ஆசிரியர்கள் இப்பெண்மணி இயேசுவின் தலையில் பரிமளத்தைலத்தை பூசியதாகக் கூறுகின்றார்கள். பொதுவாக, தீர்க்கதரிகள் அரசர்களை அபிஷேகம் செய்யும்போது அவர்கள் தலையின்மேல் பரிமளத்தைலத்தால் அபிஷேகம் செய்வர். இதேவகையில் இப்பெண் இயேசுவுக்கு அபிஷேகம் தலையில் செய்ததனூடாக இப்பெண் ஒரு பெண் இறைவாக்கினராகவும், இயேசுவை அரசராகவும் ஆசிரியர் காண்பிக்கின்றார்.

இவள் இயேசுமீது பாராட்டிய இச்செயற்பாட்டை எல்லைகள் கடந்த அன்புச் செயல் எனக் கூறுகின்றோம். ஏனெனில், ஒரு பெண் யூத வழமையின்படி ஆண்களுக்கு முன்பதாக பகிரங்கமாக இச்செயலை செய்ய முடியாது. எனவேதான், தடைகளைத் தாண்டிய அன்புச் செயல் எனக் குறிப்பிடுகின்றேன். மேலும், உண்மையான அன்பை பணப்பெறுமதிக்குள் கட்டுப்படுத்திவிட முடியாது. எனவேதான், யூதாஸ் ஏழைகளைக் குறித்து கரிசனையை வெளிப்படுத்தியபோதிலும்., இப்பெண் தனது நிலையில் மாற்றத்தை உண்டாக்கவில்லை. இவ்வாறாக, இவள் தனது செயற்பாட்டில் கிரயத்தை செலுத்தவில்லை.

• கிறிஸ்தவ வாழ்வில் நாமும் கடவுளுக்கும், கடவுளுடைய மக்களுக்கும் உதவும்போது பணப் பெறுமதியாக இருந்தாலும் சரி, சரீர உதவியாக இருந்தாலும் சரி கிரயத்தை கணிப்பிடாமல் உற்சாகமாக கொடுப்போமாக.