வசந்தகாலப் பூக்கள் 3

மூன்றாம் தியானம்

நாம் வாழும் உலகில் பெருமளவு பாவங்கள் திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறுகின்றது. பொதுவாக பாவமென்பது, மனசாட்சிக்கும் ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றிற்கும் இடையே இடம்பெறும் போராட்டமாகும். இப்போராட்டத்தில் மனசாட்சி வெற்றி பெற்றால் நாம் பாவம் செய்ய மாட்டோம். மாறாக, மனசாட்சி தோல்வி அடைந்து ஐம்புலன்கள் வெற்றி பெறுமானால் நாம் பாவம் செய்கின்றோம்.

தொடக்கநூல் (ஆதியாகமம்)  3:6ல் ஐம்புலன்கள் வெற்றி பெறுகின்றது. அங்கு மனசான்று தோல்வியடைந்து கனி பார்வைக்கு அழகும் புசிப்புக்கு இன்பமுமாய் காணப்பட்டது. அதனால், ஏவாள் கனியைப் பார்த்து, மரத்தருகே சென்று, பறித்து, ஆதாமுடன் இணைந்து புசித்தார். இதனை நாம் பாவத்தின் படிநிலைகள் என அழைக்கின்றோம். இந்நிலையே இவளது வீழ்ச்சிக்கு காரணமாகும். 

தொடக்கநூல் (ஆதியாகமம்) 4:8ல் ஆபேலின் காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக காயீனின் முகநாடி வேறுபட்டு அவன் தன் சகோதரனாகிய ஆபேலோடு அன்பாகப் பேசி, அவனை வெளியே அழைத்துச் சென்று அவன்மீது பாய்ந்து கொலை செய்தான். இங்கு, பாவம் திட்டமிடப்பட்ட முறையில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. கொலை செய்வது பாவம் என மனசாட்சி காயீனுக்கு கூறிய போதிலும் அவன் ஐம்புலன்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. அதனாலேயே அவன் பாவத்திற்குள் விழுந்தான். நாம் வாழும் இவ்வுலகில் அநேக தவறுகள் திட்டமிடப்பட்டுள்ள முறையிலேயே நடைப்பெறுகின்றது. அமைப்பு ரீதியான திட்டமிடப்பட்ட தவறுகளால் இறைவனுக்கும் ஏனைய மனிதர்களுக்கும் இடையேயான உறவுகள் குழப்பமடைகின்றன. இந்நிலை மேலும் வீழ்ச்சிக்கு எம்மை தூண்டுகின்றது.

செபம்: இறைவா எமது மனசாட்சியை ஐம்புலன்கள் மேற்கொள்ளாதவாறு எமக்கு அருள்புரியும். அதனால், நாம் திட்டமிடப்பட்ட பாவத்திலிருந்து விலகிச் செல்ல அருள் புரிந்தருளும். ஆமென்.