6 நவம்பர் 2022

உலக ஓய்வுநாள் பாடசாலை ஞாயிறு
இப்பிள்ளை எப்படி இருக்கும்? லூக்கா 1:57-66

• ஒவ்வொரு பிள்ளைகளும் பிறக்கும்போது அல்லது கருவில் உருவாகும்போது இப்பிள்ளை எவ்வாறு அமையப்போகிறது என்பதை எல்லாப் பெற்றார்களும் எண்ணிப்பார்ப்பார்கள். இப்பிள்ளைகளை கடவுளுடைய பாதையில் வளர்த்தெடுப்பதில் பெற்றோர்களும் ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியர்களும் முக்கிய பங்கெடுக்கின்றனர்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி நியாயாதிபதிகள் 13:1-14 இப்பகுதியில் சிம்சோன் சிறுவயதில் இருந்து கட்டளைகளின்படியும் நசரேய விரத முறைப்படியும் வளர்க்கப்படுகின்றான். எனவே, கடவுளின் ஆவி இவன்மீது இறங்கி வல்லமையான காரியங்களை செய்விக்கின்றது. நிறைவில் கடவுளின் ஆவிக்கு கீழப்படியாமல் போகவே, ஆவி அவரை விட்டு அகன்று போகின்றது.

• திருப்பாடல் 119:9-16ல் ஒவ்வொரு பிள்ளைகளும் ஆண்டவருடைய வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பார்க்கின்றோம். அதற்கூடாகவே எமது மீட்பு உறுதிப்படுத்தப்படுகின்றது.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி எபேசியர் 6:1-4ல் பெற்றோர் பிள்ளை உறவைக் குறித்து பேசுகின்றது. இது இரட்டை உத்தரவாதம் உள்ளதாகக் காட்டப்படுகின்றது. குறிப்பாக, பெற்றோர்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமலும், பிள்ளைகள் பெற்றோருக்குக்
கீழ்ப்படிந்தும் வாழ அழைக்கப்படுகின்றனர். இது பத்து கற்பனைகளில் ஒன்றாகும்.

• நற்செய்தி வாசகத்தில் லூக்கா 1:57-66ல் யோவான்ஸ்நானகனின் பிறப்பைக் குறித்து நாம் பார்க்கின்றோம். இங்கு சகரியாவும் எலிசபெத்தும் நசரேய விரதமுறைப்படி மதுபானத்தை அருந்தாமலும், சவரன் கத்தி தலையில் படாமலும் பிள்ளையை வளர்க்கின்றனர். இந்நிலை பிள்ளைக்கான பெற்றோர் செய்யும் தியாகமாகும். இந்நிலை தற்போது குறைவடைந்துள்ளது.

• இப்பேர்ப்பட்ட ரீதியில் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை குறித்து சிந்திப்பார்களானால் பிள்ளைகள் அநாதை மடங்களில் வாழாமலும், பாலியல் வன்முறைக்கு உட்படாமலும், குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யாமலும், போதைப் பொருட்களைக்

கடத்தாமலும் இறையரசின் பிரஜைகளாகவும் (மாற்கு 10:12-14) கடவுளின் வார்த்தைகளை ஊடுகடத்தும் கருவிகளாகவும் வாழுவார்கள்.