3 செப்டெம்பர் 2023

Teachers Agents of Liberation

மாற்கு 6:34-44

•          நாம் வாழும் இவ்வுலகிலே விடுதலைகளை அனுபவிக்க மானிடர்கள் மட்டுமல்ல, முழு இயற்கையும் விரும்புகின்றது. எனவே, இவ்விடுதலையின் முகவர்களாக பிரதிநிதிகளாக வாழ ஆண்டவர் எம்மை அழைக்கின்றார்.

•          விடுதலைக்கு மையமாக அறிவு அவசியமென பவுலோ பேரயர் என்ற அறிஞர் கூறுகின்றார். இதனடித்தளத்தில் நீதிமொழிகள் 8:1-12ல், ஞானம் மையமாகக் காட்டப்படுகின்றது. இதே கருத்தியலையே திருப்பாடல் – சங்கீதம் 119:107ம் வாக்கியத்திலிருந்து நாம் பார்க்கலாம். அங்கே கடவுளுடைய வார்த்தை விடுதலையின் மையப்பொருளாகக் காணப்படுகிறது.

•          திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 8:26ல், விடுதலையின் முகவராக அங்கு திருத்தூதுவர் பிலிப்பு காண்பிக்கப்படுகிறார். ஏனெனில், ஏசாயாவின் சுருளை வாசித்துக் கொண்டிருந்த எத்தியோப்பிய அண்ணகன் அதில் தெளிவின்றி இருந்தார். அப்பொழுது தூய ஆவி பிலிப்பைப் பார்த்து, தேருக்கு அருகே சென்று அதனை தெளிவுபடுத்துமாறு வேண்டிக்கொண்டார். எனவே, விடுதலையின் முகவராகிய பிலிப்பு விடுதலையின் மையமாகிய திருவார்த்தையை விளக்கி எத்தியோப்பியருக்கு எடுத்துரைத்தார். தெளிவு பெற்ற அவர் பிற்காலத்தில் இலங்கைக்கு நற்செய்தியை எடுத்து வந்த பலருள் ஒருவராக காணப்படுகின்றார்.

•          மாற்கு 6:34ம் வாக்கியம் முதல் பார்க்கும்போது, அங்கே ஆண்டவர் அளித்த விடுதலைபணியைப் பற்றி நாம் பார்க்கிறோம். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு போஷித்த சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். இங்கு ஆண்டவர் இடத்திலே ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவர் ஓர் விடுதலைப் பணியை ஆற்றிய முகவராகக் காணப்படுகின்றார். அதனைப் பயன்படுத்தியே இயேசு ஐயாயிரம் பேருக்கு மேற்பட்ட மக்களை போஷிக்கின்றார். எனவே, விடுதலைப்பணியில் எங்களிடம் என்ன இருக்கின்றது என்பதை நாம் கண்டறிதலும் அவசியமாகின்றது. யோவான் 4:7ம் வசனத்தில், சமாரியப் பெண்ணிடம் ஆண்டவர், உன்னிடத்தில் என்ன உண்டு என்ற வினாவைக் கேட்கிறார். முதற் படிக்கல்லை எடுத்து வைக்க வேண்டியவர் நாங்களே ஆவர். யோவான் 11,12ம் அதிகாரத்திலும்கூட இயேசு லாசருவை உயிரோடு எழுப்புவதற்கு முன்னர் கற்களை புரட்டிவிடுங்கள் என்று கூறுகின்றார். எனவே, விடுதலை வாழ்வில் எங்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் காணப்படுகின்றன. நாங்கள் முகவர்களாகச் செயற்படவேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன. இதை கவனத்தில் கொண்டு தனிப்பட்ட வாழ்வில், சமூக வாழ்வில், திருச்சபை வாழ்வில், தேசிய வாழ்வில் விடுதலைப் பணிகளை முன்னெடுத்துச் செல்வோமாக. ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்