25 மார்ச் 2023

The Annunciation to Mary
லூக்கா 1:26-38

• கடவுள் ஒரு தனது திட்டத்தில் நிறைவேற்றுவதற்காக மரியாளை
தெரிந்தெடுப்பதை நாம் பார்க்கின்றோம். இத்தெரிந்தெடுத்தல்
மரியாளிடம் காணப்பட்ட திறமை, தகுதி போன்றவற்றால் இல்லாமல்
மரியாளின் பலவீனப்பட்ட நிலை, எளிமைத் தன்மை, அப்பாவித்தன்மை
போன்றவற்றிற்கு கிடைத்த ஓர் பரிசாகும்.

• ஏசாயா 7:10-14ல் இறைவன் ஒருவரை அனுப்புவதாக ஏசாயா
பேசுகின்றார். அதாவது, இங்கு ஓர் விடுதலையாளர் என்ற பதம்
பயன்படுத்தப்படுகின்றது. இது அகாப் என்ற அரசனையோ சைரஸ்
என்பவரையோ குறிக்கப்படுவதாக ஒரு சிலர் கூறினாலும், இது
வாக்களிக்கப்பட்ட மெசியாவிற்கான ஒரு அறிவிப்பாகவே இங்கு
பார்க்கலாம். ஏனெனில், ஏசாயா 9:6ல் மெசியாவின்
குணவியல்புகளையும், ஏசாயா 11:6-9ல் அவருடைய பணிகளையும்,
ஏசாயா 61:1-3ல் மெசியாவினுடைய செயற்பாடுகளையும், ஏசாயா 53ல்
அவரின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் போன்றவற்றையும் குறித்து
நிற்கின்றது.

• சங்கீதம் – திருப்பாடல் 41ல் கடவுள் எளிமையானவர்களை தமது
திட்டத்திற்காக தெரிவு செய்கின்றார். அதாவது, எளியோர்கள் அவரது
திட்டத்தில் சிறப்புப் பெறுகின்றனர். லூக்கா 1:46-55 வரையுள்ள
மரியாளின் கீதத்திலும் அவர் தமது அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார். இதோ இதுமுதல் எல்லோரும் என்னை பாக்கியவதி என அழைப்பர் என்ற பதங்கள் கடவுளின் முன்னிலையில் எளியோருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை எம்மால் உணர்ந்துக் கொள்ளமுடியும்.

• புதிய ஏற்பாட்டு பகுதியில் கலாத்தியர் 4:4ல் பவுல்
இயேசுவினுடைய பிறப்பு ஓர் கன்னி பிறப்பு என்பதை இங்கு
காண்பிக்கின்றார். பவுலைப் பொறுத்தவரையில் லூக்கா கூறுவதைப்
போன்று, மத்தேயு தெரிவிப்பதை போன்று கன்னி பிறப்பென்று ஏற்றுக்

கொண்டபோதிலும் யோவான் நற்செய்தியில் புலப்படும் யோவான் 1:1-
3ல், ஆதியிலே வாக்கு இருந்தது. அந்த வாக்கு தேவனிடத்தில் இருந்தது.
அந்த வாக்கு தேவனோடிருந்தது என்ற பகுதிகளினூடாக புலப்படும்
மனுவுரு ஏற்ற கொள்கையையும் அங்கீகரிக்கின்றார். இதனை பிலிப்பியர் 2:5-11ல் பவுல் கூறுகின்றார். எனவே, இரண்டு வகையான இயேசுவின் பிறப்பிற்கான விளக்கங்களையும் பவுல் ஏற்றுக்கொள்வதை நாம் பார்க்கின்றோம்.

• லூக்கா 1:26-38 வரையுள்ள பகுதியில், மரியாளுக்கு காபிரியேல்
தேவதூதனால் வழங்கப்படும் இப்பெரிய அழைப்பு, பொறுப்பு, அதில்
மரியாளின் இயலாத்தன்மை அதற்கு தாம் உதவி செய்யப் போவதாக
வாக்களிக்கப்படுகின்ற முறை இவைகள் அனைத்தும் ஓர்
இறைவாக்கினருக்கான ஓர் அழைப்பைப் போன்ற ஓர் அழைப்பாகும்.
இறைவாக்கினர்களை இறைவன் அழைக்கும்போதும் அவர்களும்
இயலாத்தன்மையை வெளிப்படுத்துவதும் பின்னர் இறைவன்
அவர்களுக்கு உதவுவதும் அழைப்பை ஏற்பதும் ஓர் சாதாரண நிகழ்வாகும்.


இந்நிகழ்வே இங்கு மரியாளுக்கும் ஏற்படுகின்றது. ஈற்றில்
இறைத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட அவள் நிறைவில் இறைவனுக்கு
அடிமையாகின்றாள். இதற்கூடாக இறைத்திட்டம்
நிறைவேறப்படுகின்றது. ஈற்றில் இத்திட்டத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நன்றிப் பாடலையும் பாடுகின்றார்.

ஆக்கம்: அற்புதம்