The Fig Tree Withered
மாற்கு 11:12-26

இவ்வுவமை மாற்கு நற்செய்தியில் மாத்திரம் காணப்படுகின்றது. ஒரு சிலர் இதனை இயேசுவின் புதுமைகளுடன் இணைத்துப் பார்ப்பர். எனினும், இது இயேசுவால் ஆற்றப்பட்ட புதுமையாக இருந்தால், இது யாருக்கும் பயனளித்ததில்லை. எனவே, இதனை புதுமைகளுக்குள் உள்ளடக்க முடியாது. மேலும், இந்நிகழ்ச்சி எருசலேம் ஆலயம் சுத்திகரிப்புக்கு முன்பதாக இடம் பெறுவதால், இதனை ஆலய சுத்திகரிப்புடன் தொடர்புபடுத்துகின்றனர்.

ஆண்டவராகிய இயேசு தமது எருசலேமை நோக்கிய பயணத்தில் பெத்தானியாவில் இரவைக் கழித்த பின்னர், அதிகாலையில் தனது பயணத்தை ஆரம்பிக்கின்றார். எனவே, ஆண்டவருக்கு பசி உண்டாயிருந்தது என்பது வினாவுக்குரியதொன்றாகும். மேலும், அது அத்திப்பழங்களுக்குரிய காலம் இல்லை என ஆசிரியர் கூறுகின்றார். எனவே, அத்திப்பழத்திற்குரிய காலம் இல்லாத காலத்தில் மரத்தை சபிப்பது சரியான செயலா? என்ற வினாவும் எழுகின்றது. எனினும், ஓர் அத்திமரம் இலைகள் நிறைந்ததாக காணப்படும்போது, அதில் நிச்சயமாக பழங்கள் காணப்படும். எனவே, இந்த எதிர்ப்பார்ப்போடேயே இயேசுகிறிஸ்து மரத்தண்டையில் வருகின்றார். அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. இவ்வாறாக, அந்த அத்திமரம் மக்களை ஏமாற்றியதைப் போன்றே ஆலயமும் மக்களை ஏமாற்றியது.

ஆலயம் வெளிப்பகுதியில் அழகுவாய்ந்ததாகக் காணப்பட்டது. எனினும், ஆலயத்தின் உட்பகுதிக்குள் செபவீடாக இருக்க வேண்டிய ஆலயம் கள்ளர் குகை போன்று தோற்றமளித்தது. அவ்வாலயம், யூதரல்லாதோரை புறக்கணித்தது. நாணயமாற்று வீதத்தில் சமத்துவம் காணப்படவில்லை. சதுசேயர்களின் சமய ஆதிக்கம் அதிகரித்தது. இவைகளாலேயே ஆலயம் சுத்திகரிக்கப் படவேண்டிய தேவை காணப்பட்டது. 

ஆண்டவர் இயேசு அத்திமரத்தை சபித்ததைப் போன்று, ஒரு கல்லின்மேல் இன்னுமோர் கல் இராதபடி அழிந்துபோகும் எனக் கூறுகின்றார். இதன்படி, கி.பி. 70ம் ஆண்டு ரோம அரசனாகிய வெல்பசியனின் மகனான தீத்துஸ் என்பவரால் ஆலயம் அழிக்கப்பட்டது. இவ்வாறு ஆலயம் அழிக்கப்பட்ட பின்னரே மாற்கு நற்செய்தி எழுதப்பட்டுள்ளது என நம்பப்படுகின்றது. இது எவ்வாறாக இருப்பினும், மாற்கு நற்செய்தியாளன் இந்நிகழ்வை ஞாபகப்படுத்தி அத்திமரத்தை சபிக்கும் நிகழ்வுடன் இதனை தொடர்புபடுத்துகின்றார். 

இவ்வாறாக, ஆசிரியர் எருசலேம் ஆலயம், நகரம் போன்றவைகள் நிரந்தரமற்றவைகள். எனவே, நிரந்தரமான கடவுளுடைய அரசின்மீது நம்பிக்கை வையுங்கள் என அழைக்கின்றார் (மாற்கு 1:14-15).

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்,

இலங்கை திருச்சபை.