The God of wandering people

நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக.


திரித்துவ திருநாளுக்கு பின்வரும் பத்தொன்பதாம் ஞாயிறு எனும் இந்நாளிலே யோவான் நற்செய்தி நூல் முதலாம் பிரிவு திருவசனங்கள் 35முதல் 51வரை அடங்கியுள்ள திருவசனங்களை அடித்தளமாகக் கொண்டு ‘அலைந்து திரியும் மக்களின் கடவுள்’ என்ற கருப்பொருளில் கடவுளின் வார்த்தைகளை அருளுரையாகப் பெற்றுக்கொள்வோம்.

அலைந்து திரியும் இஸ்ரயேலை பாதுகாக்கும் கடவுள்


ஊர் என்ற ஊரிலிருந்து ஆபிரகாம் அழைக்கப்பட்ட நாளிலிருந்து ஆபிரகாமும் அவரது வழித்தோன்றல்களும் அலைந்து திரியும் மக்களினமாக, இடம்பெயரும் குடிமக்களினமாகவே இருந்து வந்துள்ளனர். எகிப்திற்கு உணவிற்காக சென்ற இஸ்ரயேல் மக்களினம் நானூற்று முப்பது ஆண்டுகள் அங்கே அடிமைகளாயினர். விடுதலை இன்னதென்று காணாமல் வாழ்வின் நம்பிக்கையைத் தொலைத்தவர்களாய் கூக்குரல் எழுப்பினர். கடவுளாகிய ஆண்டவர் மோசேயின் வழியாக விடுதலை அளித்தார். விடுதலைப் பயணத்தினூடாக இஸ்ரயேல் மக்களினம் உணவு பாதுகாப்பு அற்றவர்களான நிலையில் கடவுளாகிய ஆண்டவர் சீன் பாலைவெளியிலே அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் அதாவது அவர்கள் தங்கள் மூதாதையர்க்கு கடவுளாகிய ஆண்டவர் வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற கானான் நாட்டை அடைந்து குடியேறும் வரையிலும் வானத்து மன்னாவினாலும் காடையினாலும் அவர்களுக்கு உணவளித்தார். ஆக கடவுளாகிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் உணவளித்து உடை பழையதாய் போகாதபடி ஆண்டவர் இஸ்ரயேலைப் பாதுகாத்தார். அந்த கடவுள் இன்றைக்கும் உணவுக்காய் ஏங்கி அலைந்து திரியும் மக்களுக்கு உணவளிக்கின்ற கடவுளாய் இருக்கிறார்.

திருப்பாடல்கள் 61


இத்திருப்பாடல் தாவீதின் திருப்பாடல் என்றும் அல்லது வேறொருவர் அரசரைக் குறித்தும் தம்மைக்குறித்தும் எழுதிய பாடல் என்றும் ஆய்வுகள் சொல்லுகின்றன. தாவீதின் திருப்பாடல் என்ற சிந்தனையோடு பார்க்கின்ற போது அரசர் தாவீது யோர்தானுக்கு அப்பால் மக்னாயீம் பாலைவெளியிலே தம் மகன் அப்சலேம் செய்த கலகத்திலிருந்து தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ள அலைந்து திரிந்த காலங்களையும் சூழலையும் குறிக்கிறது. அந்நாட்களில் எருசலேம் அரசாட்சியின் மையமாகவும் சமய தலைமை இடமாகவும் இருந்தது. எருசலேமுக்கு வெளியே வாழ்நதல் என்பதே அலைந்து திரியும் வாழ்க்கையாகவே பார்க்கப்பட்டது. அதிகாரத்தை இழந்து நிற்கும் நிலை என்பது அலைந்து திரியும் வாழ்க்கை ஆகும். எல்லா மனிதருமே இத்தகைய சூழலை ஏதோ ஒரு காலக்கட்டத்தில் நெருப்புக் கடலில் நீந்திக் கறையேறுவது போல கடந்து வருகின்றோம். அரசர் தாவீது அத்தகைய கடினமான சூழலில் இருக்கின்ற போது கடவுளாகிய ஆண்டவர் தாவீதுடன் இருந்தார். எதிராளிகளிடமிருந்து பாதுகாக்கின்றவராய் உணவளித்து பராமரிக்கின்றவராய் ஆண்டவர் இருக்கின்றார்.

அலைந்து திரிவோர்க்கு ஆண்டவர் அரணும் கன்மலையும் கோட்டையும் துருகமுமாய் இருக்கின்றார். இரண்டாவது பார்வையின்படி சொல்வதாயின் சிறையிருப்புக்கு முந்தைய சூழலில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் (கிமு. 960-கிமு.587) எழுதப்பட்டிருக்க வேண்டும். அடிப்படையில் நிகழ்காலத்தில் நாம் துன்புறும் சூழலில் கடந்த காலத்தில் வெளிப்பட்ட கடவுளின் இரக்கத்தை நினைவுகூர்ந்து எதிர்க்காலத்திற்கான நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டவர்களாய் வாழ அழைக்கப்படுகின்றோம்.

அலைந்து திரியும் சீடத்துவத்திற்கான அழைப்பு


யோவான் நற்செய்தியில் சீடத்துவத்திற்கான அழைப்பு குறித்து பார்க்கின்ற போது முதலாம் பிரிவில் ஐந்து பேரை ஆண்டவர் இயேசு அழைக்கின்றார். அவர்கள் அனைவருமே திருமுழுக்கு யோவானின் சீடர்கள் எனலாம். ஆண்டவர் இயேசுவைக் குறித்து யோவான் ‘இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறைமறி’ என்று சொன்ன சான்றினைக் கேட்டவர்களில் சிலர் இயேசுவைப் பின்பற்றினர். அவர்கள் இயேசுவின் வாழ்வியல் முறையையும் சூழலையும் அறிய முற்பட்ட போது இயேசு ‘வந்து பாருங்கள்’ என ‘மாதிரி அழைப்பு’ (Preliminary Call) கொடுக்கிறார்.

அவர்கள் இயேசுவோடு தங்குகிறார்கள். பின் அவர்கள் தங்களை இயேசுவின் சீடர்களாக ஒப்புக்கொடுத்துவிடுகின்றனர். திருமுழுக்கு யோவான்- ஆண்டவர் இயேசு இருவருமே அலைந்துதிரியும் வாழ்க்கை முறையைத் தெரிவு செய்து இறையரசைக் கட்டினார்கள். யோவான் பாலைவெளியிலே இருந்தார். ஆண்டவர் இயேசு பாலைவெளியிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் இடம்பெயர்ந்து நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். இத்தகைய சூழலில் யோவானின் சீடர்களுக்கு இயேசுவைப் பின்பற்றுவதில் தொடக்கத்தில் சிரமம் இல்லை. ஆனால் அவர்கள் தங்களை கூடுதலாக தன்னலமில்லா வாழ்வுக்கும் சமத்துவம் சகோதரத்துவம் சமூகநீதி என இறையரசுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ தங்களை ஒப்புவிக்க வேண்டியதாயிற்று.
இங்கே தான் யாக்கோபின் அனுபவம் இயேசுகிறிஸ்துவில் முழுமை பெறுவதை உணர்ந்துகொள்ள சீடர்கள் அழைப்பு பெற்றிருந்தனர். அது இறையரசின் முன்சுவையாய் கிறிஸ்துவில் இருப்பதை உணர்ந்தனர். அது மாட்சிமிகு அனுபவமாய் இருந்தது. அதேவேளை அது பாடுகள் நிறைந்ததும் அலைந்து திரிந்து மீட்பு பணி செய்வதன் வழியாக மட்டுமே அந்த மாட்சிமிகு வாழ்வைப் பெற முடியும் என்பதையும் அது எல்லாருக்கும் உரித்தாக்கப்பட பணிசெய்ய வேண்டும் என்பதையும் ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு கற்பித்தார். எதிர்காலம் இன்னதென்று தெரியாமல் பயணித்த யாக்கோபுக்கு தன் துயர்மிகு கண்ணீரைச் சிந்திட ஒரு கல் கிடைத்தது. இன்று நமக்கு நம் துயரங்களையும் எதிர்காலத்தைக் குறித்த கவலையும் சுமந்துகொள்ள ஒரு கன்மலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கன்மலை கிறிஸ்துவே. நாம் கிறிஸ்துவில் ஆற்றலைப் பெற்று அலைந்து திரியும் மக்களின் கண்ணீருக்கு ஆறுதல் அளிக்கும் மீட்பின் கற்களாய் இருந்திட நம்மை நாம் திருச்சபைக்குள் ஒப்புக்கொடுப்போம்.

அலைந்து திரிவோர்க்கான அரணாக திருச்சபை


திருச்சபை என்பது கிறிஸ்துவை தலையாக கொண்டு இயங்கும் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறது. இறைமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுப்புகளாய் உறுப்பினர்களாய் இருக்கின்றோம். திருச்சபைக்கு பல பணிகள் உள்ளன. அவற்றில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் நமக்கான பணிகளை செய்து முழு திருச்சபைக்கு நன்மைச் செய்கின்றவர்களாய் இருக்க வேண்டும். இங்கே சுயநலம் பாராட்ட எவருக்கும் தனியறைகள் கிடையாது. பிறருடைய வரங்களைக் குறித்து பொறாமை கொள்வதற்கும் எரிச்சல் அடைவதற்கும் இடம் கிடையாது. தன்னைத்தானே தண்டித்துக் கொள்வதற்கு கூட திருச்சபையில் இடம் கிடையாது.

திருச்சபை என்பது உடல். திருச்சபையில் திருப்பணி நிறைவேற்றிட பொறுப்புகள், அதிகாரங்கள் இருக்கின்றன. முழு திருச்சபையின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு அதிகாரமும் பணியாற்ற வேண்டும். கிறிஸ்துவை முன்னிட்டு ஒன்றையொன்று ஈர்ப்பதற்கும் சேர்த்துக் கொள்வதற்கும் அரவணைத்துக் கொள்வதற்குமானதே தவிர ஒன்றையொன்று விலக்குவதற்கு இங்கு இடமே கிடையாது. மீட்புக்கான வழி இன்னதென்று அறியாமல் அலைந்து திரியும் மாந்தர்களை கிறிஸ்துவினிடம் கொண்டு வருவதற்கான புகலிடம் தான் திருச்சபை என்பதை உணர்ந்தவர்களாய் நாம் பணியாற்ற வேண்டும். திருச்சபையில் பல அதிகாரங்கள் பல அலுவலகங்கள் என்பது மீட்புப்பணியை முன்னிட்டு கிறிஸ்து அளித்துள்ள அதிகாரங்கள் ஆகும். இங்கே ஒருவர் துன்புற்றால் அதனை நம் துயராக பார்த்து அதனை சரிசெய்திட முயல வேண்டும். இதிலிருந்து விலக்கிக் கொள்வதற்கோ முரண்படுவதற்கோ இடம் கிடையாது. ஆதரவின்றி திருச்சபைக்கு உள்ளும் வெளியிலும் அலைந்து திரியும் மக்களுக்கான நம்பிக்கையாய் திருச்சபை இருந்திட நாம் பணியாற்றிட வேண்டும். அப்படி செய்வதே கிறிஸ்துவின் சீடத்துவம் என்பதை உணர்ந்து கிறிஸ்துவின் மாதிரிகளாய் வாழ்ந்திடுவோம். ஆண்டவர் தாமே இந்த நற்செய்தியையும் நம்மையும் ஆசீர்வதிப்பாராக.
மூவொரு கடவுளின் அன்பும் அருளும் அமைதியும் ஆசியும் அனைவருக்கும் உரித்தாகுக.

மறைதிரு. டால்ட்டன் மனாசே
மறைதிரு. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை
திட்டக்குடி குருசேகரம்