The Inter-dependence in Creation

13 பெப்ரவரி 2022

February 13, 2022, Sunday
9th Sunday before Easter

மத்தேயு 13:1-9

அனைத்தும் நல்லவைகள் என கடவுள் காண்கின்றார்

• படைப்பைப் பற்றி ஒவ்வொரு சமயங்களும் வேறுபட்ட உண்மைகளை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றன. ஆனால், தொடக்கநூல் அல்லது ஆதியாகமம் நூலின்படி கடவுளே இவ்வுலகை படைத்துள்ளார். அவர் மனுக்குலத்தை தமது சாயலின்படி உருவாக்கினார். இங்கு முதலாம் படைப்பின் வரலாற்றின்படி ஏனைய படைப்புக்கள் படைக்கப்பட்ட பின்னர் மனுக்குலம் படைக்கப்படுகின்றது. ஆனால், இரண்டாவது படைப்பின் வரலாறுபடி தொடக்கநூல் / ஆதியாகமம் 2:1-15 மனுக்குலம் முதலில் படைக்கப்பட்டு ஏனையவைகள் பின்னரே உருவாக்கப்பட்டன. ஆனால், இவைகள் அனைத்தும் நல்லவைகள் என கடவுள் காண்கின்றார். மேலும், இவைகள் ஒன்றிலொன்று தங்கியுள்ளன என்பதையும் காண்பிக்கின்றார். அதாவது, ஒன்றின் மூலம் ஒன்று போஷிக்கப்படவும் ஒன்றின் மூலம் ஒன்று அபிவிருத்தி அடையவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அத்துடன், படைப்புக்கள் அனைத்தும் படைத்தவருக்கு கீழ்ப்பட்டவைகள் என்பதை ஆசிரியர் காண்பிக்கின்றார்.

படைப்புக்கள் கடவுளின் புகழ் பாடுகின்றன

• திருப்பாடல் பகுதியில் படைப்புக்கள் அவரை புகழ் பாடுகின்றன என்ற செய்தியை நாம் படிக்கின்றோம். கடவுள் படைப்புக்களின் மூலம் தன்னை வெளிப்படுத்துகின்றார் (திருப்பாடல் 19:1). மேலும், படைப்புக்கள் மீட்புக்காக ஏங்குகின்றது என்பதை ரோமல் 8:22ல் நாம் படிக்கின்றோம்.

• நற்செய்தி புஸ்தகம் மத்தேயு 13:1-8 வரையுள்ள பகுதியில் பல உவமைகளின் தொகுப்பை நாம் பார்க்கின்றோம். இங்கு விதைக்கிறவன் உவமைக் கூறப்படுகின்றது. இது ஆரம்பத்தில் உவமையாக இருந்தபோதிலும் பின்னர் இதனை உருவகங்களாக விளக்குகின்ற போங்கு காணப்படுகின்றது. பலஸ்தீனா பகுதிகளில் விதையை விதைத்த பின்னரே நிலத்தை உழுவார்கள். எனவே, விதைக்கின்றவன், விதை, நிலம், சூரிய ஒளி, கனியுப்புக்கள் போன்றவைகள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. இவ்வாறு தங்கி இல்லாத பட்சத்தில் அவைகளால் செயற்பட முடியாது. அவைகள் பலனளிக்கவும் முடியாது.

முழு படைப்புக்களுக்கும் நற்செய்தி

• 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அவர்கள் இயற்கையோடு மனிதன் ஒன்றித்து இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றார். இதனாலேயே, அவர் சூரியனை அண்ணாவென்றும், சந்திரனை தங்கை எனவும், தண்ணீரை தம்பி எனவும் அழைக்கின்றார். இதற்கூடாக அவரின் ஒன்றித்த வாழ்வை எம்மால் உணரமுடியும். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நாம் இயற்கையின் அவசியத்தை உணராவிட்டால் கடவுள் எம்மை மன்னிப்பார். மாறாக, இயற்கை எதிர்சீற்றம் புரியும் எனக் கூறுகின்றார். எனவேதான், முழு படைப்புக்களுக்கும் நற்செய்தி அறிவித்தல் அவசியம் என இயேசு போதிக்கின்றார் (மாற்கு 16:15).

• இவ்வாறு நாம் ஒன்றில் ஒன்று தங்கி இருக்காத காரணத்தினாலேயே கனடா, சீனா, மலேசியா போன்ற பகுதிகளில் வழமைக்கு மாறான வெள்ளப்பெருக்குகளும் அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற பகுதிகளில் வழமைக்கு மாறான காட்டுத் தீயும் ஏற்பட்டதை நாம் பார்க்கின்றோம்.

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை