நல்ல சமாரியன் மாதிரிக் கதை

The Parable of the Good Samaritan

லூக்கா 10:25-37

 லூக்கா நற்செய்தியில் மாத்திரம் காணப்படும் இம்மாதிரிக்கதை பொதுவாக எல்லா சமயத்தாராலும் விரும்பி படிக்கப்படும் ஓர் கதையாகும். கி.மு. 721ல் இஸ்ராயேல் தேசம் அசீரியரால் அழிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அசீரியருக்கும் இஸ்ராயேலருக்கும் பிறந்தவர்களே சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் கலப்பு இனத்தைச் சார்ந்தபடியால் யூதர்கள் இவர்களை வெறுத்தனர். ஆனால், சமாரியர்கள் தங்களுக்கென ஓர் ஆலயத்தை சீகார் என்னும் மலையில் அமைத்து வழிப்பட்டதாக யோவான் 4ம் அதிகாரத்தில் படிக்கின்றோம். இவ்வாறாக, யூதர்களால் வெறுக்கப்பட்ட சமாரியனே வீதியிலே குத்துயிராக யூதக்குடிமகன் இருந்த வேளையில் அவனுக்கு உதவிசெய்தது சமாரியனே என லூக்கா கூறுகின்றார். சமயவாதிகள் தங்கள் சமயப்பணிக்கு தடையாக காணப்படும் என்றபடியால், சமூகப்பணியை அவர்கள் நிராகரித்தனர். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட ஓர் மனிதனை அவர்கள் புறக்கணித்தனர்.

              பத்து தொழுநோயாளர்கள் இயேசுவிடம் சுகத்திற்கு விண்ணப்பித்தனர். அவர்கள் எல்லோரும் சுகம் பெற்றனர். ஆனால், சமாரியனே நன்றி செலுத்தினான் என இயேசு சமாரியனின் நற்பண்பைப் பாராட்டினார். சமாரியன் மற்றவர்களில் உள்ள மற்றவைகளைக் கண்டு பாராட்டினான். எனவே, ஆண்டவர் இயேசுவைப் போன்று நன்மைகள் எங்கிருப்பினும், அவைகளை நாம் பாராட்ட மறக்கக் கூடாது. மேலும், நமது அயலவராக நாம் எமது இனத்துக்குள் இருப்பவரை மாத்திரம் தெரிந்து கொள்ளாமல் மாறாக, எல்லைக் கடந்த ரீதியில் அனைவரையும் உள்வாங்கக் கூடிய வகையில் எமது அயலவர்களை தெரிவு செய்ய வேண்டும் (மத்தேயு 8:11). இவ்வாறு நாம் எமது அன்பை பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது, இயேசுவின் பிரதான கட்டளையை நாம் கடைப்பிடிக்கின்றோம் (மாற்கு 12:28-32). அத்துடன், நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்போதே நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை உலகத்தார் கண்டு கொள்வார்கள் (யோவான் 13:34-35).

              பொதுவாக இம்மாதிரிக் கதையில் இருந்து சமூகப் பணியின் முக்கியத்துவத்தைக் குறித்து நாம் அதிகம் கவனம் செலுத்துகின்றோம். எனினும், இப்பகுதியில் சமூக நீதியைக் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். வன்முறை நிறைந்த சூழலில், வன்முறைக்கு அடித்தளமாகக் காணப்படும் ஆணிவேரை நாம் அகற்றும்போது, வன்முறைக்கு நிரந்தரமான காரியத்தை நாம் அகற்றுகின்றோம். இங்கு சமாரியன் செய்த சமூகப் பணியை பாராட்டுகின்ற அதேவேளை வன்முறையை அடியோடு அகற்ற வேண்டுமானால் கள்வர்களை பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. இப்பணி மிகவும் ஆபத்தான இறைவாக்குப் பணியாகும். இப்பணியே சமூக நீதி பணியாகும். இயேசுவின் பணிகளில் சமூக நீதியை ஏற்படுத்தும் பணி மிகவும் முக்கியமானதொன்றாகும். இதுவே, ஆமோஸின் பணியுமாகும் (ஆமோஸ் 2:16). 

இயேசு இயக்கத்தின் Youtube காணொளிகளை கீழே காணுங்கள்