The Parable of the Hidden Treasure & the Pearl of Great Price
மத்தேயு 13:44-46

மத்தேயு நற்செய்தியில் இறையரசைக் குறித்து கூறப்படும் உவமைகளுக்குள் புதையல் மற்றும் முத்து உவமை முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. அதாவது, ஒருவர் தன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து பெறுமதியான ஒன்றை பெற்றுக் கொள்வதே இதுவாகும். அதாவது, ஒருவர் மிகப்பெரிய பெறுமதியான புதையல் மற்றும் முத்து போன்றவற்றை கண்டுபிடிக்கும்போது தன்னிடத்தில் உள்ள அனைத்தையும் விற்றுவிட்டு பெறுமதியானவற்றை வாங்கிக் கொள்வதற்கு ஒத்ததாக இறையரசு காணப்படுகின்றது. 

ஒரு மனிதனோ அல்லது சமூகமோ இறையரசுக்காக எதனையும் கிரயம் செய்ய ஆயத்தமாக வேண்டும். அந்தளவிற்கு இறையரசு மிகப் பெறுமதி வாய்ந்ததொன்றாகும். எனவே, இறையரசின் விழுமியங்களை நாம் இலகுவில் பிறருக்கு விற்றுவிடாமல் அவற்றை பெறுமதியானவைகளாக கருதவேண்டும். உதாரணமாக, ஆண்டவர் இயேசு இறையரசின் விழுமியமாகிய மன்னிப்பைக் குறித்து லூக்கா 7:36-50ல் எடுத்துப் போதித்தார். இதனையே, லூக்கா 23:33-37 பகுதியில் சிலுவையில் தனக்கு விரோதமாக தவறிழைத்த மக்களுக்கு மன்னிப்பை வழங்கினார். மேலும், உயிர்த்தெழுந்த பின்னர் யோவான் 21:15-18 பேதுருவை பழிவாங்காமல் அவருக்கு மன்னிப்பைக் கொடுத்தார். இதன்மூலம் மன்னிப்பு என்னும் இறையரசு விழுமியத்தை மிகவும் பெறுமதியாகக் கருதினார். மேலும், இதற்கு எதிராக செயற்படும் பழிவாங்குதலை அவர் பெறுமதியாகக் கருதவில்லை. 

இறையரசின் இன்னுமோர் பண்பாக சமாதானம் காணப்படுகின்றது. இதனை இயேசு பெறுமதியாகக் கருதினார். மத்தேயு 5:9ல் சமாதானத்திற்காக உழைப்போர் கடவுளின் பிள்ளைகள் என அழைக்கப்படுவர் என்கிறார். இவ் உண்மையையே சீடர்கள் பிறருக்கு எடுத்துக் கூற வேண்டும் எனக் கூறினார் (மாற்கு 10:1-12). இயேசுவினுடைய மரணமும் பிரிந்து நின்ற இரு தரத்தாருக்கிடையே ஒப்புரவாகுதலை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது என பவுல் கூறுகின்றார் (எபேசியர் 2:14-18). 

எனவே, ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்னர், லூக்கா 24ல் எம்மாவூருக்குச் செல்கின்றார். ஏனெனில், அங்கு பிரதான இராணுவத்தளம் காணப்பட்டது. நிராயுதபாணியாக, இயேசு அங்கு சென்று, வன்முறைவாதிகளுக்கு முன்பதாக சமாதானத்தின் செய்தியை எடுத்துக் கூறுகின்றார். இதன்மூலம், வன்முறையை அவர் நிராகரிக்கின்றார். எனவே, பெறுமதியானவைகளை நாம் தேடிக் கண்டுப்பிடிப்பதே முக்கியமானதொன்றாகும். இன்றைய முதலாளித்துவத்திற்கு எதிராக சமவுடைமை பொருளாதார கொள்கைகளையும், நுகர்வு கலாசாரத்துக்கு எதிராக இறையரசின் விழுமியமாகிய பொது உடைமை கொள்கைகளையும் கண்டுபிடிப்பதே மேலானதாகும்.

ஆக்கம்: அற்புதம்