The Parable of the Lost Coin, Sheep and Son

லூக்கா 15:1-32

இவ்வுவமை லூக்கா நற்செய்தியில் மாத்திரம் காணப்படுகின்றது. எனவே, இதனை நற்செய்திகளுக்குள் ஓர் நற்செய்தி எனக் கூறுவர். கிறிஸ்தவர்கள் மாத்திரமல்லாமல் கிறிஸ்தவரல்லாதோரும் இக்கதைகளை நன்கு அறிவர்.

காணாமற்போன காசு, ஆடு, மகன் போன்ற உவமைகளை உற்று நோக்கும்போது, இறையரசின் பண்பை நாம் காணலாம். பொதுவாக இவ்வுலகில் பெரும்பான்மைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது, இச் சிந்தனைக்கு எதிராக இறையரசு எப்பொழுதும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நாம் காணலாம். அதாவது ஒரு காசு, ஒரு ஆடு, தொலைந்த மகன் போன்றவர்களும் இறையரசின் முக்கியமானவர்கள். 

காணாமற்போன காசு, ஆடு போன்றவைகளை உற்று நோக்கும்போது இவைகள் தானாக தொலைந்து போகாமல் பிறரால் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அதாவது, இவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் . இன்றைய சமுதாயத்தில் வீட்டுக்குள்ளேயும் திருச்சபைக்குள்ளேயும் சமூகத்துக்குள்ளேயும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளனர். இவர்களை கண்டு பிடிக்க வேண்டும். இலங்கையில் போருக்கு பின்னான காலத்திலிருந்து இன்றுவரை மக்கள் தமது பிள்ளைகளை பெற்றோர்களை தேடிக் கொண்டே உள்ளனர். இவர்களுக்கு இப்பகுதி மிகவும் பொருத்தமானதாகும். 

அன்புத் தந்தையின் கதையை எடுத்துக்கொண்டால் தூரதேசத்தில் வாழ்ந்த இளைய மகன் தந்தை எப்படிப்பட்டவர் என்பதையும் அவரது மன்னிக்கும் இதயத்தையும் நன்கு அறிந்துள்ளான். எனவேதான், நான் எழுந்து என் தகப்பனிடத்துக்கு போய், “தகப்பனே பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் நான் பாவம் செய்தேன்” என அறிக்கையிட ஆயத்தமாகின்றான். ஆனால், மறுகரையில் தந்தையோடு வாழ்ந்த மூத்த புதல்வன் தந்தையின் இதயத்தை அறியவில்லை. இதேபோன்றே, மெசியாவின் வருகைக்காக காத்திருந்த யூதர்கள் மேசியா பிறந்த வேளையில் இவரைச் சென்று பார்க்கவில்லை. மாறாக, தூர தேசத்திலிருந்து வருகை தந்த ஞானிகள் அவரைக் கண்டு மகிழ்ந்தனர். இவர்கள் யூதர்கள் அல்ல. நீதிச்சட்டத்தை பெற்றவர்களும் அல்ல. ஆனால், மெசியாவைக் கண்டு பணிந்தனர். 

தந்தையோடு வாழ்ந்தவன் தந்தையையும் தன் இளைய சகோதரனையும் புரிந்துகொள்ளவில்லை. மாறாக, இளைய சகோதரன் தந்தையைப் புரிந்துக் கொண்டான். மேலும், எதிர்ப்பார்த்திருந்த யூதர்கள் மெசியாவைக் காணவில்லை. மாறாக, தூரதேசத்திலிருந்து வருகைத் தந்த ஞானிகள் மெசியாவைக் கண்டனர். இது இன்றைய பல்சமய சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில், நாமும் இயேசுவின் இரண்டாம் வருகை எமக்கு ஆசியுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு அழிவுள்ளதாகவும் காணப்படும் என்கிறோம். இத்தகைய மனப்பான்மை கொண்டுள்ள எங்களுக்கு இக்கதை ஆழ்ந்த உண்மையைக் கூறுகின்றது. பெரிய மனப்பான்மை உள்ளவர்களாகவே பரிசேயரும் சதுசேயரும் காணப்பட்டனர்.

One thought on “காணாமற்போன காசு, ஆடு, மகன்”
  1. உண்மையாகவே பலவித அனுபவ சிந்தனைகளை மீழ்புதுப்பிக்கின்றது,எமது உடன்பிறப்புகளும் நாமும் அடிவாங்கி மண்ணிப்பை கேற்க்கிறோம் நல்மணம் பொருந்துகிறோம்,இறையச்சத்தோடு முண்ணோக்கிறோம்.வேண்டும் என்று காணாமல் ஆக்கியர்கள் கொண்றழித்தவர்கள்,ஒன்றும் தரித்திருப்பது வேடிக்கையானது அது மீழவும்.பாதிக்கபட்ட சமுகத்துக்கு உளவியல் தாக்கம் நன்றி

Comments are closed.