மன்றாடலைக் குறித்த இயேசுவின் போதனை
The Parable of the Persistent Widow

லூக்கா 18:1-8

ஓர் மனிதனோ அல்லது சமூகமோ இறைவனுடன் வார்த்தையாலோ அல்லது அடையாளங்களாளோ தொடர்பு கொள்ளும் சாதனமே மன்றாடல் ஆகும். இதனை, தனிநபர் மன்றாடல், சமூக மன்றாடல் என நாம் இரண்டாகப் பிரிக்கலாம். இப்பகுதியில் தனிநபர் ஒருவர் தனது வழக்குக்கு நீதி கூறுமாறு நீதிபதியிடம் வேண்டுகிறார். அவர் நீதிக் கூறவில்லை. எனினும், அப்பெண் தொடர்ச்சியாக அவரிடம் சென்று முறையிடுகின்றார். நிறைவில் அந்நீதிபதி தொடர்ச்சியாக இப்பெண் தன்னை தொந்தரவு செய்கின்றார் என நினைத்து அப்பெண்ணுக்கு நீதி வழங்குகின்றார். இதைபோன்று எமது மன்றாடலில் நாம் தொடர்ச்சியாக மன்றாடுதல் அவசியமாகும். 

1 நாளாகமம் 4:10ல் இறைவன் யாபேசின் மன்றாடலுக்கு பதிலளிக்கின்றார். மேலும், மாற்கு 15:34-35ல் என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என இயேசு சிலுவையில் மன்றாடிய வேளையில் பிதாவானவர் மௌனமாக இருந்தார். மௌனமும் இறைவனின் பதில் என புரிந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன், 2 கொரிந்தியர் 12:6-9ல் பவுல் தன்னிடமுள்ள முள்ளை எடுத்துக் கொள்ளுமாறு இறைவனிடம் மூன்று மறை மன்றாடினார். எனினும், இறைவன் “என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்தில் என் பெலன் பூரணமாக விளங்கும்” எனக் கூறுகின்றார். இங்கு, புதுமையைவிட ஆண்டவரின் கிருபை மேலானதாகும். மேலும், பவுல் கேட்டதை அல்ல மாறாக இறைவன் பிரதியீட்டு பதிலை பவுலுக்கு வழங்குகின்றார்.

மன்றாடலில் நாம் கடவுளின் இதயத்தை புரிந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஏசாயா 6:1-8ல் ஏசாயா உசியா அரசன் மரணமடைந்த பின்னர், நாட்டின் குழப்ப சூழ்நிலையுடன் ஆலயத்துக்கு செல்கின்றார். ஆனால், ஏசாயாவுக்கு கடவுள் தன்னுடைய பிரச்சினையை கூறுகின்றார். யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாக போவான் என்ற கடவுளின் பிரச்சினையை அல்லது கடவுளின் இதயத்தை ஏசாயா காண்கின்றார். எனவே, மன்றாடலில் கடவுளின் சித்தமும் மனித சித்தமும் போராடுகின்றது. இதனையே, மத்தேயு 26:39ல் நாம் காண்கின்றோம்.

எமது மன்றாடல் ஓர் விளம்பரமாக அமைந்து விட முடியாது. அதாவது, இறைவனுக்கு முன்பாக அல்லது மற்றவர்களுக்கு முன்பாக எம்மை நாம் பாராட்டும் இடமாக மன்றாடலை பயன்படுத்தக்கூடாது. இதற்கு உதாரணமாக, லூக்கா 18:9-14ல் வரி தண்டுபவர் மற்றும் பரிசேயர் ஆகியோரின் மன்றாடலைப் பற்றி இயேசு பேசுகின்றார். பரிசேயர் கடவுளுக்கு முன்பாக தன்னுடைய அறப்பணிகளைப் பற்றி மேன்மை பாராட்டுகின்றார். ஆனால், வரிதண்டுபவர் இறைவா பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் எனக் கூறுகிறார். மேலும், பரிசேயர் தனது மன்றாடுதலில் தான் வரிதண்டுபவனைப் போல் அல்ல என குற்றம் சுமத்துகின்றார். எனவே, நாம் மேன்மை பாராட்டும் இடமாகவோ அல்லது மற்றவர்களை குற்றப்படுத்தும் இடமாகவோ மன்றாடலை பயன்படுத்தக் கூடாது.

ஆக்கம்: அற்புதம்