The Parable of the Rich Fool
லூக்கா 12:15-21

ஆண்டவர் இயேசு இவ்வுலகிலே ஏழையோருக்கும் நற்செய்தி அறிவிக்க வந்ததாக கூறுகின்றார் (லூக்கா 4:16-21). இங்கு ஏழையோர் என்பது வெறுமனே பொருளாதார ஏழ்மையை குறிக்காமல் சமூக, கலாசார, அரசியல் பகுதிகளுடனும் ஏழ்மைத் தன்மை தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும், ஆண்டவர் ஏழைகளைப் புரிந்துகொள்வதற்காக அவர் ஏழ்மையானார் (பிலிப்பியர் 2:5-11). மேலும், ஏழைகளுடன் தன்னை அடையாளப்படுத்தினார் (லூக்கா 8:1-3, மாற்கு 10:12-14, மாற்கு 10:46-52). அத்துடன், செல்வந்தர்களை ஆண்டவர் இயேசு சவாலிட்டார் (மாற்கு 10:17-22, லூக்கா 19:1-10). இவ்வாறாக, செல்வந்தர்களை சவாலிடும் பகுதியாக இப்பகுதி காணப்படுகின்றது. 

இச்செல்வந்தன் முதலாளித்துவ சிந்தனை உள்ளவனாக தன்னுடைய விளைநிலங்களை தனக்கு தன்னுடைய எதிர்காலத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனை இவனிடத்தில் காணப்பட்டது. அதாவது, இறுதி நியாயந்தீர்ப்பு செயல்களின் அடித்தளத்தில் தங்கியுள்ளது என்பதை மறந்துவிட்டான். நான் பசியாயிருந்தேன். ஆகாரம் தந்தீர்கள். தாகமாயிருந்தேன். தண்ணீர் தந்தீர்கள். ஆடையின்றி இருந்தேன். ஆடை தந்தீர்கள். சிறையில் இருந்தேன் வந்து பார்த்தீர்கள் (மத்தேயு 25:31-46). இப்பகுதியில் செயல்களின் அடித்தளத்தில் நியாயந்தீர்ப்பு உண்டென்று இவன் கருதி இருந்தால் தன்னுடைய விளைப்பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பான். மேலும், கடவுள் இவ்வுலகில் எல்லோரையும் சமமாகப் படைத்துள்ளார். அப்படியிருக்கும்போது, ஒருவன் செல்வந்தனாகவும், ஒருவன் ஏழையாகவும் எவ்வாறு வரமுடியும்? இதற்கு சுரண்டலே காரணமாகும். இச்சுரண்டலின் ஊடாகவே இம்மனிதன் செல்வந்தன் ஆகி உள்ளான். ஆதலால், இவன் தன்னுடைய விளைப் பொருட்களை பகிர்ந்து கொள்வது ஓர் பாவமன்னிப்பின் அடையாளமாகும். இவன் இதைச் செய்ய மறுக்கின்றான். 

சங்கீதம் அல்லது திருப்பாடல் 24:1ல் பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் அனைத்தும் கடவுளுடையது. இவ்வுண்மையை இம்மனிதன் மறந்து அனைத்தும் தன்னுடையது எனக் கூறுகின்றான். இதனாலேயே, இறைவன் இவரை புத்தியற்றவர் எனக் கூறுகின்றார். மேலும், இவர் மற்ற செல்வந்தராக இருப்பது தவறு அல்ல. மாறாக, ஏழைகள்மீது கரிசனையற்றிருப்பதே தவறாகும். இத்தகைய தவறையே செல்வந்தனும் லாசருவும் என்ற கதையில் இயேசு சுட்டிக் காட்டுகின்றார். அதாவது, அந்த செல்வந்தன் தனது வீட்டு வாசலருகே உட்கார்ந்திருந்த லாசரு மீது கரிசனை செலுத்தாதது பிரதானமான பாவமாகக் காணப்படுகின்றது. 

லூக்கா நற்செய்தி ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதனொளியில், ஆண்டவர் இயேசு ஏழையாகி (2 கொரிந்தியர் 8:9), ஏழைகளோடு தன்னை அடையாளப்படுத்தி செல்வந்தருக்கு எதிராக குரல் கொடுத்து நிறைவில் ஏழைகளுக்காகவே மரித்தார் என்பது லூக்கா நற்செய்தியில் காணப்படும் பிரதான செய்தியாகும்.

ஆக்கம்: அற்புதம்