குத்தகைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களின் உவமை
மாற்கு 12:1-9, மத்தேயு 21: 33-46, லூக்கா 20: 9- 19

மாற்கு நற்செய்தியில் காணப்படும் இவ்வுவமை ஆண்டவர் இயேசுவின் மரணத்தைக் குறித்து சித்தரித்துக் காட்டப்படுகின்றது. இவ்வுவமையின் போதனைகளை பின்வருவனவற்றை நாம் கூறலாம்.
  1. கடவுள் மனிதர் மீது வைக்கும் நம்பிக்கை – எஜமான் பணியாளர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து அவர்களிடம் தனது தோட்டத்தை ஒப்படைத்துச் செல்கின்றார். அதனைப் போன்று கடவுளும் மனிதர் மீது நம்பிக்கை வைத்து பல பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். குறிப்பாக, அவர் பல கட்டளைகளை எமக்கு தந்துள்ளார். இயற்கையை பராமரித்தல் (ஆதியாகமமம் அல்லது தொடக்கநூல் 2:3), நற்செய்தி பகிர்வு (மத்தேயு 28:19-20), அன்பு செலுத்துதல் (யோவான் 13:34-35) போன்ற கட்டளைகளை அவர் கொடுத்துள்ளார்.

கடவுள் மனிதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக அவனை படைத்து ஏதேன் தோட்டத்திலே அவர்களை பணிக்கு அமர்த்தி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால், அவர்களும் கடவுளின் நம்பிக்கைக்கு ஏற்றவர்களாக வாழவில்லை (ஆதியாகமம் அல்லது தொடக்கநூல் 3:1-10). எனவே, நாம் கடவுளில் நம்பிக்கை வைப்பதுபோல கடவுளும் எம்மில் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது.

  1. கணக்கு ஒப்புவித்தல் – பணியாட்கள் சரிவர கணக்கு ஒப்புவிக்கவில்லை. மாறாக, அவர்கள் உரிமையாளர்களை அடித்துக் கொலை செய்தனர். எனவே, கணக்கொப்புவித்தல் அவசியமாகின்றது. (தாலந்து உவமையிலும் இது எதிர்ப்பார்க்கப்படுகின்றது – மத்தேயு 25:13-30)
  2. இவ்வுவமையின்படி நியாயந்தீர்ப்பு இடம்பெறுகின்றது. நியாயந்தீர்ப்பு இறைவனுக்குரிய பணியாக திருமறையில் காட்டப்படுகின்றது. கோதுமையும் களையும் என்ற உவமையிலும்கூட பணியாளர்கள் நியாயந்தீர்க்க முற்பட்ட வேளையில் எஜமான் நியாயந்தீர்க்கும் பணி இறைவனுக்குரியது என்பதை எடுத்துக் காண்பிக்கின்றார். இந்நியாயந்தீர்ப்பு எமது செயல்களின் அடித்தளத்தில் நடைபெறுகின்றது என மத்தேயு 25:31-46 வரையுள்ள பகுதி எடுத்துக் கூறுகின்றது.
  3. இப்பகுதியில் ஆண்டவர் இயேசுவின் நிராகரிக்கப்பட்ட நிலையை நாம் இங்கு காண்கின் றோம். அதாவது, அவர் ஆரம்பத்தில் பணியாளர்கள் எஜமானுக்கு உரித்துடையவர்களே அடித்துக் காயப்படுத்தியது போன்றே யூதர்கள் இயேசுவுக்கு முன் வந்த இறைவாக்கினர்களை துன்புறுத்தினர். நிறைவில், ஆண்டவர் இயேசுவை கொலை செய்தார்கள். இங்கு இயேசுவின் நிராகரிக்கப்பட்ட நிலையை நற்செய்தியின் ஆரம்பத்திலிருந்தே மாற்கு காண்பிக்கின்றார். மாற்கு 2:1-12ல் முடக்குவாதமுள்ள மனிதனின் பாவங்களை இயேசு மன்னித்த வேளையில் மதவாதிகள் இயேசுவுக்கு எதிராக முறுமுறுத்தனர். மேலும், மாற்கு 3:6ல் மதத்தின் பிரதிநிதிகளாகிய சதுசேயரும், அரசியலின் பிரதிநிதிகளாகிய ஏரோதியர்களும் கூட்டுச்சேர்ந்து இயேசுவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர். மேலும், தன்னுடைய மரணத்தைக் குறித்து ஆண்டவர் இயேசு பலமுறை சுட்டிக்காட்டுகின்றார். மாற்கு 8:30-31, 9:30-31, 10:45 ஆகிய பகுதிகளில் நாம் காணலாம். எனவே, இயேசுவின் மரணம் பல நாள் நிகழ்வுகளின் ஓர் தொகுப்பாகும்.

இறையியலாளர் அற்புதம்