The Parable of the Wheat and the Tares
மத்தேயு 13:24-30

மத்தேயு நற்செய்தியில் ஆசிரியர் இயேசுவின் போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். மத்தேயு 5ம், 6ம், 7ம், 13ம், 18ம், 23ம் அதிகாரங்களில் நாம் இவைகளைக் காண்கின்றோம். சிறப்பாக, மத்தேயு 13ம் அதிகாரத்தில் இறையரசைக் குறித்த பல உவமைகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்றாக இவ்வுவமை காணப்படுகின்றது. இங்கு விவசாயி தனது தோட்டத்தில் கோதுமைகளை விதைக்கின்றார். ஆனால், எதிரி கோதுமைக்குள் களையையும் விதைக்கின்றார். இரண்டும் முளைக்கின்றன. அறுவடைக் காலத்தில் கோதுமையையும் களையையும் வேறுபிரித்தறியலாம் என எஜமான் கூறுகின்றார். இவ்வுவமையில் பின்வரும் படிப்பினைகளை நாம் கற்றுக் கொள்ளலாம். 

கோதுமையையே விவசாயி விரும்பி பயிரிடுகிறார். ஆனால், அவனது தோட்டத்தில் களைகள் முளைக்கின்றன. இக்களைகள் கோதுமையின் வளர்ச்சியை பாதிக்கின்றது. அதாவது, கோதுமைக்கு கிடைக்க வேண்டிய சூரிய ஒளி, காற்று, நீர் போன்றவைகள் கோதுமைக்கு கிடைக்காமல் போகின்றது. அதனால், கோதுமை பாதிக்கப்படுகின்றது. இதேபோன்று நல்லவர்கள் வாழ்வில் தீயவர்களின் தாக்கம் எப்பொழுதும் இருக்கும். உதாரணமாக, மாமரத்தில் குருவிச்சை அம்மரத்தின் வளர்ச்சியை பாதிப்பதைப் போன்றும், நாயில் காணப்படும் தெள்ளு அதன் இரத்தத்தை உறிஞ்சி நாயை சாகடிப்பதைப் போன்றுமே நல்லவர்களுடைய வாழ்வில் தீயவர்களின் தாக்கம் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  

நாம் வாழும் உலகில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என எம்மால் பாகுப்படுத்தமுடியாது. இவ்வுவமையின்படி, கோதுமையையும் களையையும் எம்மால் வேறுப்படுத்தமுடியாது. அறுவடையின்போதே எம்மால் கண்டுகொள்ள முடியும். இதேபோன்று, குயிலின் கூட்டுக்குள் காகம் சென்று முட்டையிடுகின்றது. ஆனால், இவ்விரண்டு பறவைகளும் வளர்ந்து வரும்போது, எம்மால் அடையாளம் காணமுடியாது. மாறாக, அவைகள் ஓடுகின்ற சத்தத்தின் அடித்தளத்திலேயே எம்மால் வேறுபாட்டை காணமுடியும். இதேபோன்றே, நல்லவர்கள் தீயவர்களுக்கிடையே வேறுபாட்டை உணர்வதற்கு அவர்களுடைய செயற்பாடுகளே அவர்களை வேறுபடுத்தும். எனவேதான், இயேசு நல்ல மரம் கெட்ட கனியையும, கெட்ட மரம் நல்ல கனியையும் கொடுக்கமாட்டாது என்கிறார்.

கோதுமை களை ஆகிய இரண்டும் ஒன்றாகவே வளரவிடப்படுகின்றன. அறுவடையின்போதே களைகள் அகற்றப்படுகின்றன. இதன்மூலம், நியாயந்தீர்ப்பு கடவுளுக்குரியது என்ற உண்மை வலியுறுத்தப்படுகின்றது. இயேசு 72 பேரை பணிக்காக அனுப்பும் வேளையில், நீங்கள் சென்று சமாதானத்தின் நற்செய்தியை அறிவியுங்கள் அந்நற்செய்தியை மக்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறித் தட்டி விட்டு வாருங்கள். மாறாக, அவர்களை நியாயந்தீர்க்காதிருங்கள். ஏனெனில், நியாயந்தீர்ப்பு கடவுளுக்குரியது என்கிறார் (லூக்கா 10:1-12).

ஆக்கம்: அற்புதம்