The Parable of the Workers in the Vineyard
மத்தேயு 20:1-16

மத்தேயு நற்செய்தியில் மாத்திரம் இவ்வுவமை காணப்படுகின்றது. திராட்சைதோட்ட உரிமையாளன் தனது தோட்டத்தில் பணி புரிவதற்கென வெவ்வேறு பட்ட நேரங்களில் பணியாளர்களை வேளைக்கு அமர்த்துகின்றார். குறிப்பாக, ஒரு சிலரை காலையிலும், ஒரு சிலரை மதிய வேளையிலும், ஒரு சிலரை மாலை வேளைகளிலும் பணிக்கு அமர்த்துகின்றார். எனினும், சம்பளத்தை வழங்கும்போது, எல்லோருக்கும் சரிசமமாக ஊழியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வுவமை இறையரசைக் குறித்து எமக்குக் கூறும் படிப்பினைகள் எவை? 

இவ்வுவமையில் திராட்சைத் தோட்ட சொந்தக்காரர், தொழிலாளர்கள் எல்லோருக்கும் சமமான ஊதியத்தையே வழங்குகின்றார். இதனால், முந்தி வந்தோர் முறுமுறுக்க ஆரம்பிக்கின்றனர். ஏனெனில், பிந்தி வந்தோருக்கும் நீர் சமமான ஊதியத்தைக் கொடுப்பது நீதியான செயலா என வினா எழுப்பினர். உண்மையிலேயே, பிந்தி வேலைக்கு வந்தோர் வேலை செய்ய மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்களும் வேலைக்காக ஏங்கி நின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இவர்கள் சோம்பேறிகள் அல்ல. மாறாக, தொழிலுக்காக எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இன்றைய பொருளாதார அமைப்பிலும் நாம் இதைக் காணலாம். அதாவது, அநேகர் வேலை செய்ய விருப்பமிருந்தும் அவர்களுக்கு தொழில் கிடைப்பதில்லை. அத்துடன், இன்னுமொரு சிலர் குறைந்த ஊழியத்திற்கு வேலை செய்கின்றனர். இவைகளெல்லாம் இறையாட்சிக்கு விரோதமானவைகள் ஆகும். இறையாட்சி எப்பொழுதும் சமத்துவத்தை எதிர்ப்பார்க்கின்றது.

இவ்வுவமையில் ஊதியம் வேலைக்கு அல்ல மாறாக, வாழ்வதற்காக வழங்கப்பட வேண்டும் என்ற உண்மை வலியுறுத்தப்படுகின்றது. முதலிலே வந்தவர்களுக்கு மாத்திரம் அல்ல மாறாக, மதிய நேரம், மாலை நேரம் போன்ற வேளைகளில் வந்தவர்களுக்கும் ஊதியம் வாழ்வுக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதே வகையில் நாமும் ஊதியங்களை வழங்கும்போது அவைகள் தொழிலுக்காக அல்ல மாறாக, வாழ்வுக்காக வழங்கப்பட வேண்டும் என்ற உண்மை காட்டப்படுகின்றது. இதுவே, இறையாட்சியின் தன்மை ஆகும்.

ஆக்கம்: அற்புதம்