6 ஆகஸ்ட் 2023

இயேசுவின் மறுரூப திருநாள்
லூக்கா 9:28-36

• உருமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் என்னும் சொல் கிறிஸ்துவின் வாழ்க்கையோடு நெருங்கிய இரண்டு சொற்பதங்களாகும். பொதுவாக, ஆண்டவர் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாக உருமாற்றம் அடைந்ததை லூக்கா 9:18-36 வசனம் வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இதற்கு இயேசுவின் சீடர்களாகிய பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய சீடர்கள் சாட்சி பகர்கின்றனர். சிறப்பாக, பேதுருவின் சாட்சியை 2 பேதுரு 1:16-19ம் வசனம் வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இந்நிகழ்வு பலவகையான செய்திகளை எமக்கு எடுத்துக்கூறுகின்றது.

• இயேசுவின் மறுரூபமாகுதல் அனுபவம் அவர் எருசலேமில் பாடுகளை அனுபவிப்பதற்கு முன்னான ஓர் தைரியப்படுத்தல் அல்லது உற்சாகப்படுத்தல் போன்றவற்றுடன் தொடர்புபட்டதாகும். இங்கு எலியா, மோசே போன்றவர்களின் தோற்றம் இயேசுவை உற்சாகப்படுத்துவதற்காகவே ஆகும். மற்றவர்களின் நன்மைக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமாகிய சிலுவை அனுபவத்துக்கூடாக இவர்களும் சென்றவர்கள். எனவே, இவர்களின் இணைப்பு இயேசுவுக்கான ஓர் உற்சாகத்தை கொடுத்திருக்கும். அதுபோல, நாமும் துயருரும்போது ஏற்கனவே துயருற்று மாட்சிமைக்குள் பிரவேசித்த அடியவர்களின் வாழ்வு, நிகழ்காலத்தில் நற்செய்திக்காக துன்புறுபவர்களின் கூட்டுறவு போன்றவற்றில் நாம் எம்மை இணைத்திருத்தல் அவசியம்.

• மறுரூப மலையில் எலியா, மோசே ஆகியவர்களுடைய வருகை பழைய உடன்படிக்கையில் ஓர் முழுமையான நிகழ்வை எடுத்துக் காண்பிக்கின்றது. அதாவது, மோசே மூலம் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. அத்துடன், எலியா இறைவாக்கினர் மறுபடியுமாக பூமியிலே வருகைத் தருவார் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் காணப்பட்டது. எனவேதான், லூக்கா 9:18-21 வசனங்களிலே, இயேசுவை யாரென்று கேள்வியெழுப்பிய வேளையில் ஒரு சிலர் பூர்வ காலத்து தீர்க்கர்களின் ஒருவனாகிய எலியா எனக் கூறுகிறார்கள். ஏனெனில், எலியாவின் வருகை உலகிலே இடம்பெறும் என நம்பினர்.

• இயேசுவின் அன்புச் சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு, யோவான் இம்மலையுடன் நெருங்கிய தொடர்பை உடையவர்களாக காணப்பட்டனர். இவர்கள் இயேசுவின் உருமாற்றம், தீர்க்கர்களின் வருகை போன்றவற்றால் சொல்வதறியாது தடுமாறுகின்றனர். எனவேதான், மோசேக்கு ஒரு கூடாரமும் எலியாவுக்கு ஒரு கூடாரமும் உமக்கு ஒரு கூடாரமுமாக நாங்கள் இங்கே மலையிலேயே அமர்ந்திருப்போம் என்ற வார்த்தைகள் நிகழ்கால திருப்தியையும் எதிர்கால அச்சுறுத்தலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முற்படும் தன்மையையும் காண்பிக்கின்றது. எனினும், ஆண்டவர் இயேசு இதற்கு உடன்படவில்லை. மலையிலிருந்து இறங்கி வாருங்கள் அங்கேயே உங்களுக்கு சவால்களும் அங்கே உங்கள் தூதுப்பணியும் காத்திருக்கின்றது எனக் கூறுகின்றார்.

• ஆசியா நாட்டுச் சமயங்கள் அனைத்தும் மலைகளோடு நெருங்கிய தொடர்புடையதாகும். யூத சமயத்தில் யாத்திராகமம் – விடுதலைப்பயணம் 19:1-10ல் சீனாய் உடன்படிக்கை சீனாய் மலைமீது இடம்பெறுவதை நாம் பார்க்கிறோம். இஸ்லாமிய சமயத்திலும் ஈரா எனப்பட்ட மலை முகம்மது அவருடைய தியான வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு மலைகள் இறைவன் மனிதனைச் சந்திக்கும் புனித இடமாகக் கருதப்படுகிறது. எனவே, நாமும் இறைவனை சந்திக்கும் இடத்தில் அவரைக் கண்டுக்கொள்ள முற்படுவோமாக. ஆமேன்.

Painting Courtesy: Rev. Joy Devakani

One thought on “இயேசுவோடு இணைவோம்”

Comments are closed.